''மம்ஸ் நியூ போய் பிரண்ட்" பாடத்திற்கு ஞானசாரர் எதிர்ப்பு
சர்வதேச பாடசாலைகளில் 4 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் 'மம்ஸ் நியூ போய் பிரண்ட்" என்ற பாடம் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கையின் கலாசார மத விழுமியங்களோடு இணைந்த குடும்பப்பின்னணி சீரழியும் பயங்கரம் தோன்றியுள்ளதாக தெரிவித்த பொதுபலசேனா இது தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை மேற்கொண்டு சர்வதேச பாடசாலைகள் தொடர்பில் கடுமையான சட்டங்களை பிறப்பிக்க வேண்டுமென்றும் தெரிவித்தது.
கொழும்பு கிருலப்பனையிலுள்ள பொதுபலசேனா அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்,
நாட்டின் கல்வித்துறை எமது கலை, கலாசார, மத மற்றும் வரலாற்றுப்பின்னணிகளோடு அமைந்ததாக வகுக்கப்பட வேண்டும்.
இலங்கை மற்றும் தெற்காசிய வலய நாடுகளிலுள்ள குடும்பங்களில் கட்டுப்பாடுகள் ஒழுங்கு விதிமுறைகள் உள்ளன.
இது தாய், தந்தை, சகோதரி, சகோதரன், மாமன் என உறவுகளை பிரித்தறிந்து பண்பாட்டுடன் வாழும் பின்னணி எமக்குள்ளது. அந்த வரையறையை மீறி கலாசார சீர்கேடுகளுடன் வாழ முடியாது. அது எமது பண்பாட்டுக்கு உசிதமானதல்ல. நாட்டில் இன்று சர்வதேச பாடசாலைகள் அதிகரித்து எமது குடும்ப பண்பாடுகளை சீரழிக்கும் விதத்திலான பாடத்திட்டங்கள் கற்பிக்கப்படுகின்றன.
இப்பாடசாலைகளில் போதைப்பொருட்கள் தாராளமாக கிடைக்கின்றன. மோசமான பழக்க வழக்கங்களுக்கு பிள்ளைகள் தள்ளப்படுகின்றனர். எமது நாட்டின் வரலாறு, தாய்மொழி, மதக்கல்வி கற்பிக்கப்படுவதில்லை. மேற்குலக கலாசாரத்துடன் இணைந்த பாடத்திட்டங்களே கற்பிக்கப்படுகின்றன.
மறுபுறம் மத்ரஸாக்கள் என்ற பெயரில் சர்வதேச பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு அங்கு முஸ்லிம் அடிப்படைவாதம் கற்பிக்கப்படுகின்றது.
அத்தோடு கிறிஸ்தவ அடிப்படைவாத பாடசாலைகளும் இயங்குகின்றன. இதனூடாக மாணவர்கள் மதமாற்றம் செய்யப்படுகின்றனர். மோசமான கலாசார சீரழிவுகளுக்கு பிள்ளைகள் உள்ளாகின்றனர்.
எனவே, இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம், கல்வி அமைச்சு கவனம் செலுத்த வேண்டும். பாடப்புத்தகங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதோடு அந்த பாடசாலைகளுக்குள் என்ன நடக்கின்றது என்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமென்றும் ஞானசாரதேரர் தெரிவித்தார்.
Post a Comment