நாட்டில் இன நல்லுறவை பாதுகாப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியினால் மாத்திரமே முடியும் - ரணில்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் புத்தளம் நகர முன்னாள் மேயரும் தற்போதைய உறுப்பினருமான எம்.என்.எம். நஸ்மி ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து அதற்கான அங்கத்துவத்தைப் பெற்றுக் கொள்கிறார். தான் பிரதிநிதித்துவப்படுததிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை விட்டு விலகி எங்களுடன் இணைவதற்கு தீர்க்கமான முடிவினை எடுத்துள்ளார். இவர் இன்று எங்களுடன் இணைந்து இந்நாட்டில் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியை உருவாக்குவதற்காகும். ஐக்கிய தேசியக் கட்சி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு எதிராக செயற்படும் அனைத்து தரப்பினர்களையும் ஒன்றிணைத்துக் கொண்டு புதிய அரசொன்றை உருவாக்கி சிறந்த யுகமொன்றை ஏற்படுத்துவோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் புத்தளம் மாநகர முன்னாள் மேயரும் தற்போதைய உறுப்பினருமான முஹம்மட் நிஸார் முஹம்மட் நஸ்மி ஐக்கிய தேசியக் கட்சியில் அங்கத்துவத்தைப் பெற்றுக் கொள்ளும் நிகழ்வு இன்று எதிர்க் கட்சித் தலைவரின் காரியாலயத்தில் நடைபெற்றது. அதன் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்;
இந்நாட்டில் இன நல்லுறவை பாதுகாப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியினால் மாத்திரமே முடியும். நாங்கள் எப்போதும் இன மத பேதங்களுக்கு அப்பால் நின்று செயற்பட்டு வருகிறோம்
அதன் முன்னோடியாக இன்று எமது கட்சியில் இணைந்து கொண்ட எம்.என்.எம். நஸ்மியினை புத்தளம் தொகுதியின் அமைப்பாளராக நியமிக்கிறேன்.
புத்தளம் மாவட்டத்தைச்சேர்ந்த பெரும் பாலானோர் நஸ்மியுடன் வந்து ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியினால் இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ள மக்கள், தொழில்வாய்ப்பற்ற இளைஞர் யுவதிகள், கைவிடப்பட்ட நிலையிலிருக்கும் மீனவர்கள், விவசாயிகள் உட்பட மத்திய வர்க்கததின் பல்வேறு கஷ்டங்களுக்கு இன்று முகம் கொடுத்துள்ளனர்.
ஆகவே, இத்தகையோர் ஐக்கிய தேசிய கட்சியில் ஒன்றிணைந்து சிறந்ததொரு ஆட்சியை உருவாக்குவதற்கு எமக்கு கை கொடுக்குமாறும் வேண்டுகிறேன் எனவும் கூறினார்.
இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபைத் தலைவர் கரு ஜயசூரிய எம்.பி., பாலித ரங்கே பண்டார எம்.பி., நிரோஷன் பெரேரா எம்.பி, முன்னாள் மேயர் எம்.என்.எம். நஸ்மி ஆகியோரும் உரையாற்றினர்.
Post a Comment