Header Ads



ஊவாத் தேர்தல் முடிவுகளும், உதவாமல் போகும் முஸ்லிம் அரசியலும்..!

(எம். நவாஸ் சௌபி)

தேசிய அரசியல், தமிழ் சமூக அரசியல், முஸ்லிம் சமூக அரசியல் என்று இலங்கையில் இன்றுள்ள அரசியல்களின் எதிர்பார்ப்புகளுக்கும் எதிர்வுகூறல்களுக்கும் பல முன்னுதாரணங்களையும் முன்னெச்சரிக்கைகளையும் ஊவாத் தேர்தல் முடிவுகள் வழங்கி இருக்கின்றது.

இதில் முஸ்லிம் அரசியலை உரிமைகோரி நின்ற முஸ்லிம் கூட்டமைப்பின் நிலை, சேத்திக்குச் செய்யப் போய் இருந்த குறும் சிரிப்பும் இல்லாமல் போன கதையாகிவிட்டது. ஊவா மாகாணசபைக்கு எப்படியாவது ஒரு முஸ்லிம் உறுப்பினரை வென்றெடுக்க வேண்டும் என்று முஸ்லிம் அரசியலில் ஒரு புதிய பாய்ச்சலாக ஒற்றுமை என்ற பலத்தை முன்வைத்து துஆக் கட்சியில் தேர்தலை எதிர்கொண்ட முஸ்லிம் கூட்டமைப்பு, இறுதியில் கிடைக்க இருந்த ஒரு முஸ்லிம் உறுப்பினரையும் கிடைக்காமல் செய்திருக்கிறது என்ற பழிச் சொல்லுக்கு ஆளாகியிருக்கிறது.

தேர்தல் முடிவின் பின்னரான விமர்சகர்களினதும் அவதானிகளினதும் ஒட்டுமொத்தமான கருத்தும் ஊவாவில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாமல் போனதற்கு காரணம் முஸ்லிம் கூட்டமைப்பு அங்கு போட்டியிட்டதுதான் மாறாக அவர்கள் அங்கு போட்டியிடாது இருந்திருந்தால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்த 8 ஆசனங்களுள் குறைந்தபட்சம் ஒரு முஸ்லிம் ஆசனத்தையாவது மிக இலகுவாகப் பெற்றிருக்க முடியும் என்றவாறு இதுபலராலும் ஆதாரபூர்வமாக எழுதப்பட்டும் பேசப்பட்டும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. 

இந்நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் இதனை முஸ்லிம் கூட்டமைப்பின் தோல்வியாக அல்லாமல் ஊவா முஸ்லிம்களின் தோல்வியாகவே கருதி, விழுந்தாலும் மீசையில் மண்படாதவாறு தங்களது நியாயங்களைப் பேசுகிறது. அவர்கள் கூறுவது போன்றே இது முஸ்லிம்களின் தோல்விதான் என்று எடுத்துக்கொண்டால் இந்த தோல்வியை உருவாக்கி கொடுத்தவர்கள் யார்? என்ற கேள்வி எழுகிறதே. அதற்கு விடையாக முஸ்லிம் கூட்டமைப்பைத் தவிர வேறு எந்த விடையும் பொருந்தாது என்பதையும் முஸ்லிம் காங்கிரஸினர் உணர்ந்துகொள்ள வேண்டும்.

ஊவாவில் மட்டுமல்ல, இப்படி முழு இலங்கையிலும் சமகாலத்தில் முஸ்லிம் மக்களின் அரசியலை முஸ்லிம் காங்கிரஸ் உரிமைத்துவ அரசியல் என்ற பெயரால் தோற்கடித்தே வருகின்றது. இது மிகவும் அப்பட்டமாக ஊவாத் தேர்தல் முடிவின் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை. அதிலும் குறிப்பாக கிழக்கில் எத்தேர்தல் நடந்தாலும் முஸ்லிம் காங்கிரஸ் வெற்றி பெறுவதும் அதற்கு வாக்களித்த மக்கள் தோற்றுப் போவதுமே விதியாகிப் போகிறது. 

முஸ்லிம் கூட்டமைப்பு ஊவாவில் தோற்றுப் போனதற்கு காரணம், முஸ்லிம் காங்கிரஸ் ஒன்று அரசின் நெருங்கிய நண்பனாக இருந்திருக்க வேண்டும் அல்லது நேரடி எதிரியாக இருந்திருக்க வேண்டும். இது இரண்டுமில்லாது இரண்டும் கெட்ட நிலையில் அரசாங்கத்தின் பங்காளியாக இருந்துகொண்டு தேர்தல் காலங்களில் மட்டும் தனித்துவம் என்று அரசாங்கத்தையே விமர்சித்து மக்களின் முன் நிற்பதை மக்கள் ஒருபோதும் நேர்மையாகப் பார்க்கமாட்டார்கள். என்னதான் பையத் செய்து சத்தியவான்களாக நின்றாலும் இதில் அரசியல் தூய்மை இல்லை என்பதையை மக்கள் பதிலடியாகக் காட்டியிருக்கிறார்கள். 

ஆனால் மலையகத் தமிழ் கட்சிகள் அரசுடன் நெருக்கமான நட்பினை வைத்து தங்களது அரசியல் பலத்தின் மூலம் நான்கு ஆசனங்களை வென்று எமக்கு ஒரு முன்உதாரணத்தையும்  காட்டியிருக்கிறார்கள். ஆனால் நாங்கள் நட்பும் இல்லை எதிர்ப்பும் இல்லை என்ற தூய்மையற்ற உறவால் ஒரு ஆசனத்தைக் கூட பெறமுடியாமல் கிடைக்க இருந்த ஒரு ஆசனத்தையும் இதன் மூலம் பறிகொடுத்து நிற்கின்றோம்.

மாத்திரமல்லாமல் தேர்தல் காலங்களில் மட்டும் சென்று ஒற்றுமை, உரிமை என்று ஊவா மக்களிடம் மேடைப் பேச்சுக்களை பேசாது ஆரம்பத்திலிருந்தே அவர்களின் தேவைகளோடும் அபிவிருத்திகளோடும் முஸ்லிம் அரசியலில் அவர்களை உள்வாங்கும் வேலைத் திட்டங்கள் நடந்திருக்க வேண்டும். அவை எதுவுமில்லாமல் தேர்தல்கால அரசியலை அவர்களிடம் எடுத்துச் சென்று எப்படி அவர்களின் நம்பிக்கையை வெல்ல முடியும் என்பதையும் முஸ்லிம் கூட்டமைப்பினர் புரிந்துகொள்ள வேண்டும்.

இவைகளை கருத்தில் கொண்டும், அரசாங்கத்தின் மீது முஸ்லிம் சமூக் கொண்டுள்ள கசப்புணர்வு அண்மையில் நடைபெற்ற மேல் மற்றும் தென் மாகாணசபைத் தேர்தல்களில் நன்கு வெளிப்பட்டதை உணர்ந்தும், அரசாங்கத்தின் வெற்றியில் சரிவு நிலை காணப்படுகிறது என அறிந்தும். ஐக்கிய தேசிய கட்சியின் வெற்றிக்கு மேலும் பலமான மக்கள் ஆதரவு தேவைப்படுகிறது என்பதை விளங்கியும் முஸ்லிம் கூட்டமைப்பினர் ஊவாத் தேர்தலை எதிர்கொள்ளாது மக்களின் சுதந்திரத்திற்கு விட்டு விலகி இருக்க வேண்டும். இதுவே இரண்டும் கெட்ட நிலையில் இருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் எடுத்திருக்க வேண்டிய சரியான முடிவாக எதிர்பார்க்கப்பட்டது. 

இதன்பிறகாவது ஹக்கீம் அரசுடனான தனது நிலைப்பாட்டை சரியான ஒரு முடிவுக்கு கொண்டுவர வேண்டும். கோபித்த கணவன் மனைவி போன்று அரசுடன் இருப்பதில் எந்தப் பயனுமில்லை என்பதை மக்கள் உணர்ந்ததன் தீர்ப்புத்தான் ஊவாத் தேர்தல் முடிவு என்பதைப் புரிந்துகொள்ள இதைவிடவும் வேறு ஒரு உதாரணத்தை எடுத்துவர முடியாது. அத்துடன் ஊவா மக்கள் மட்டுமல்லாது எதிர்காலத்தில் ஏனைய பகுதி மக்களும் முஸ்லிம் காங்கிரஸூக்கு இதனை உணர்த்தக் காத்திருக்கிறார்கள் என்ற அவதானங்களும் காணப்டுவதைக் கருத்தில் எடுக்க வேண்டியிருக்கிறது. 

இது இவ்வாறு இருக்க தேர்தல் முடிவு குறித்த தனது கருத்தினை ஹக்கீம் வெளியிடும் போது இன்னும் மூவாயிரம் வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தால் உறுப்பினர் ஒருவரைப் பெற்றிருப்போம் என்று கூறியிருப்பதைப் பத்திரிகைகளில் படிக்க முடிந்தது. தேர்தல் முடிவுகளின் படி இன்னும் 3000 வாக்குகளை அல்ல 8000 வாக்குகளையே முஸ்லிம் கூட்டமைப்பின் இரட்டை இலைச் சின்னம் பெற்றிருக்க வேண்டும்.  

அதாவது மீதமான வாக்குகளின் அடிப்படையிலேயே முஸ்லிம் ஆசனம் ஒன்றினை முஸ்லிம் கூட்டமைப்பு பெற்றிருக்க வேண்டும். அதன்படி, பதுளை மாவட்டத்தில் ஒரு ஆசனத்திற்கான தகுதியான வாக்குகளைக் கணிக்கும் போது  செல்லுபடியான வாக்குகளான 441371 ஐ 18 ஆசனங்களால் வகுத்தால் ஒரு ஆசனத்திற்கான தகுதிவாக்குகளாக 24520 வாக்குகள் வரும். 

இதன்படி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்ற வாக்குகளான 209056 ஐ 24520 ஆல் வகுத்தால் அவர்களுக்கு முதல் சுற்றில் 8 ஆசனங்கள் பெறப்படும். அதன் பின்னர் அவர்களின் மீதவாக்குகளானது 24520 ஐ 8 ஆல் பெருக்குவதன் மூலம் பெறப்படும் 196160 ஐ, 209056 லிருந்து கழிப்பதன் மூலம் பெறப்படும் 12896 ஆக அமையும்.

இவ்வாறே ஐக்கிய தேசியக் கட்சி பெற்றுக்கொண்ட 197708 வாக்குகளை 24520 ஆல் வகுத்தால் 8 ஆசானங்களை அது முதல் சுற்றில் பெறும். அதில் மீதமாகும் வாக்குகளாக 197708 லிருந்து 196160 ஐக் கழித்தால் 1548 வாக்குகள் காணப்படும்.

இவ்வாறு 16 ஆசனங்களும் இவ்விரு கட்சிகளுக்கும் கழிந்த நிலையில் மீதமான 02 ஆசனங்களை பகிரும் போது இருக்கும் வாக்குகளின் வரிசை பின்வருமாறு அமையும். ஜே.வி.பி – 20625, ஐ.ம.சு.மு – 12896, ஜ.ஐ.மு (துஆ) – 5045, தே.சு.மு – 4835 இதில் ஜே.வி.பி. தனது மீதவாக்குகளின் படி ஒரு ஆசனத்தைப் பெற்று 17வது ஆசனப் பகிர்வைப் பெறும். அடுத்து இறுதியாக உள்ள 18வது ஆசனத்தைப் பெறுவதற்கு தகுதியாக ஐ.ம.சு.முன்னணியின் 12896 வாக்குகளே இருந்தது அதன்படி அதற்கு 9வது ஆசனமும் கிடைக்கப்பெற்றிருக்கிறது. 

இதில் முஸ்லிம் கூட்டமைப்பின் துஆ கட்சிக்கு அந்த இறுதி ஆசனம் கிடைக்கப்பெறவேண்டுமானால் அது, தான் பெற்ற வாக்குகளான 5045 யுடன் மேலும் 7852 வாக்குகளை பெற்றிருக்க வேண்டும் அன்னளவாக அது 8000 வாக்குகளாகும். இது இவ்வாறு இருக்க ஹக்கீம் 3000 வாக்குகள் பெறப்பட்டிருந்தால் ஒரு ஆசனம் கிடைத்திருக்கும் என்று பிழையாக கணக்கைக் கூறுவது தங்களின் படுதோல்வியை வெற்றிக்கு அண்மித்துக் காட்டுவதே ஆகும். 

மேலும் தேர்தல் முடிவு குறித்த தனது கருத்தில், முஸ்லிம் அரசியல் கட்சிகளும் சிறுபான்மை அரசியல் கட்சிகளும் குறுகிய வேறுபாடுகளைப் புறந்தள்ளி ஒற்றுமைப்படுவது காலத்தின் தேவையாக மாறியிருக்கிறது. விடிவை நோக்கிய பயணம் ஊவா மாகாணத்திலிருந்து ஆரம்பித்திருக்கிறது. என்றும் ஹக்கீம் குறிப்பிட்டிருக்கிறாh.

முதலில் முஸ்லிம் காங்கிரஸிற்குள்ளேயே இன்னும் ஒற்றுமையான நிலை தென்படாதவாறு தலைவர் ஒரு கருத்து, தவிசாளர் ஒரு கருத்து, செயலாளர் ஒரு கருத்து என்று முரண்பட்டு நிற்கின்ற நிலையில் ஹக்கீம் ஏனைய கட்சிகளையும் ஒற்றுமையின் பால் இணைத்துக்கொள்ளப் பேசுவது வேடிக்கையான ஒன்றாகவே இருக்கிறது.

விடிவை நோக்கிய பயணம் என்று முஸ்லிம்களின் ஒற்றுமை அரசியலை ஊவாவிலிருந்து ஆரம்பித்திருப்பதாகவும் எதிர்காலத்தில் இதன் அவசியம் இன்னும் உணரப்பட வேண்டும் எனக் கருதுவதிலும் இந்த ஒற்றுமை அணி மூலம் ஹக்கீம் எதைச் சாதிக்க முடியும் என்று எதிர்பார்க்கிறார்.

ஊவாவில் ஒன்றிணைந்தது போல் வடகிழக்கிலும் இந்த ஒற்றுமை பலத்தை நிரூபிக்க முனைந்து கூட்டுச்சேரும் போது இதில் யார் நன்மையடைவார்கள்? உதாரணமாக றிசாட் தரப்பினருடன் மீண்டும் ஒரு ஒற்றுமை உடன்படிக்கை மேற்கொள்ளும் போது மட்டக்களப்பில் ஹிஸ்புள்ளாவும், மன்னாரில் ரிசாட்டும் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகுவதற்கு சிறந்ததொரு வழியினை இது ஏற்படுத்துமே தவிர வேறு எந்த நன்மையினையும் இதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியாது. 

மட்டக்களப்பிலும், மன்னாரிலும் முஸ்லிம்காங்கிரஸின் பிரதிநிதித்துவங்களை இழந்து முஸ்லிம்காங்கிரஸிலிருந்து விலகி பதவிகளுக்காக எதிர் அரசியல் செய்தவர்களை ஆட்சி பீடம் ஏற்றி அழகுபார்ப்பதற்கு கடமைப்பட்டவராக ஹக்கீம் மாறுவதற்கான கடப்பாடு மட்டுமே இதில் இருக்குமே தவிர வேறொன்றுமில்லை. 

முஸ்லிம் சமூகத்தில் வேரூன்றியுள்ள ஒரு வலுவான கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் இன்று கூட்டு அரசியல் மூலம்தான் எதிர்கால அரசியலையும் தேர்தல்களையும் முன்னெடுக்க முடியும் என்று நம்பிக்கை வைத்துப் பேசுவது தலைமைத்துவத்தின் பலவீனத்தையே எடுத்துக்காட்டுகிறது. மறைமுகமாக இது கட்சியையும் பலவீனப்படுத்தியிருக்கிறது. மேலும், தான் எதிர்கட்சியிலிருந்திருந்தால் கடைசிவரை இந்தக் கூட்டை ஹக்கீம் ஏற்றுக் கொள்ளமாட்டார் தானும் அரசின் பங்காளியாக இருப்பதனால் றிசாட், அதாஉல்லா போன்றவர்களுக்குள் இவ் ஒற்றுமை மூலம் தான் மறையலாம் என்று வியூகம் வகுக்கிறாரே என்னமோ.

இப்படி கட்சியிலிருந்து பிரிந்தவர்களின் தயவுதான் எமது அரசியல் பலத்திற்குத் தேவை என்றால் கட்சிக்குள் இவ்வாறான பிளவுகள் வராதவாறு அப்போதே தலைவர் பதவிக்கும் தலைமைக்கும் ஆசைப்படாதவாறு நடந்திருக்கலாம். அதனையும் செய்யாமல் இறுதியில், கூளுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்று சொல்லிக் கொண்டு நின்றால் எப்படி.  

No comments

Powered by Blogger.