யாழ்ப்பாண முஸ்லிம்களை அநாதைகளாகவும். அகதிகளாகவும் ஆக்க முயற்சி...!
(பாறுக் சிகான்)
யாழ் முஸ்லீம்கள் மீளக்குடியமரும் திட்டத்திற்கு தொடர்ந்தும் பல்வேறு வழிகளில் இடையூறு செய்யப்பட்டு வருவதாக அப்பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த கால யுத்தத்தின் பின்னர் அரசாங்கத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் அதே இடத்தில் மீளக்குடியமர்த்தப்பட்டு வருகின்றனர்.மீளக்குடியமர்ந்த அம்மக்கள் தங்கள் ஜீவனோபாயத்தை முன்னெடுக்க அவர்களுக்கு விசேட கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு இன்று அவர்கள் இயல்பு வாழ்விற்கு திரும்பி; வருகின்றனர்.
ஆனால் 1990 ஆண்டு யாழ் மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லீம் மக்கள் இன்னும் முழுமையாக மீளக்குடியமர முடியாதுள்ளது. அவர்களிற்கான மீள் குடியேற்றம் பல்வேறு வழிகளில் மறுக்கப்படுகிறது. இதற்கு அப்பகுதி பிரதேச செயலாளர்.கிராமசேவகர்கள்,சில அரசியல் அதிகாரிகள் உடந்தையாக உள்ளனர்.
இம்முஸ்லீம் மக்கள் 23 வருடங்கள் இடம்பெயர்ந்த காரணத்தினால் அவர்களில் பலர் தங்கள் பூர்வீக இடங்களை சந்தர்ப்ப சூழ்நிலையினால் விற்றுவிட்டனர்.சிலர் காணிகளிற்கான உறுதிகளை தவறவிட்டுள்ளனர். தற்போது மீண்டும் பழைய இடங்களிற்கு மீளக்குடியமர ஆர்வம் காட்டி அங்குள்ள வயல்காணிகளை கொள்வனவு செய்து அதில் வீடுகட்டி குடியேற முயல்கின்றனர்.ஆனால் அப்பகுதி பிரதேச செயலாளர்,விவசாய திணைக்களம் என்பன அவர்களை தேவையற்ற நிபந்தனைகள் என்பவற்றை விதித்து அம்மக்களை தடுக்கின்றனர்.இங்குள்ள மேற்சொன்ன வயல்காணிகள் விவசாயச்செய்கைக்கு உகந்தது அல்ல என்பதும் இவ்விடத்தில் சுட்டிக்காட்டதக்கது.
ஆனால் இப்பகுதியில் உள்ள வயல் நிலங்கள் என சொல்லப்பட்டவை விவசாயம் செய்வதற்கு ஏற்பதல்ல என விவசாய சம்மேளனத்தினால் வழங்கப்பட்ட உறுதிப்பத்தினரம் ஒன்றும் வலுவான ஆதாரமாக அப்பகுதி மக்களிடம் உள்ளது.
இங்கு முஸ்லீம் மக்களிற்கு ஏதோ பாரபட்சம் காட்டப்படுவதாகவே அப்பகுதி பிரமுகர்கள் கூறுகின்றனர் . ஏனெனில் யாழில் உள்ள மற்றொரு பிரதேசமான சண்டிலிப்பாயில் உள்ள விவசாயத்திற்கு உகந்த வயல் பகுதி தற்போது மண் நிரப்பப்பட்டு இந்திய வீட்டுத்திட்டங்கள் துரிதமாக இடம்பெற்று வருகின்றன. அதற்கு அப்பகுதி பிரதேச செயலாளர் ,விவசாய அமைப்புகள் விவசாயம் காலாகாலம் செய்யப்படும் காணிகளில் வீடுகளை கட்ட ஒப்புதல் வழங்கியுள்ளனர்.
ஆனால் இன்று முஸ்லீம்கள் மீளக்குடியமர உள்ள விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத பரச்சேரி என்னும் பிரதேசத்தில் அவர்களை எச்சரிக்கை செய்யும் துண்டுப்பிரசரங்களை ஒட்டி தேவையற்ற நிபந்தனைகள் உட்செலுத்தி அழுத்தங்களாக பிரயோகிக்க முற்படுகின்றனர். இதனால் அம்மக்கள் இதனை தடுக்க பெரும் போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.
எனினும் அம் மக்கள் குறித்து முஸ்லீம் அரசியல்வாதிகளோ, அமைச்சர்களோ இதுவரை வந்து பார்க்கவில்லை.இதனால் அப்பகுதி மக்கள் அரசாங்க அதிகாரிகளினால் இவ்வாறு பலமுறை அலைக்கழிக்கப்படுகின்றனர். எனவே ஏனைய மக்கள் போன்று இம்மக்களும் தமது சொந்த இடங்களில் குடியேற நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும். அதை விட்டு யாழ் முஸ்லீம் மக்கள் எண்ணிக்கையில் குறைந்தவர்கள் என கூறி அரசியல் அநாதைகளாகவும். அகதிகளாகவும் ஆக்க முற்படுகின்றனர் என தெரிவிக்கின்றனர்.
Post a Comment