Header Ads



முஸ்லிம்களின் வாக்கு அரசாங்கத்துக்கு செல்லாது, தமக்கும் கிடைக்காது - ஷஹாப்தீன் ஹாஜியார்

(குருணாகல் மாவட்ட ஐ.தே.க.அமைப்பாளர் ஷஹாப்தீன் ஹாஜியார்)

ஊவா மாகாண சபை தேர்தல் முடிவுகள் அரசாங்கத்துக்கு பாரிய சரிவை ஏற்படுத்தியுள்ளன. அரசாங்கம் இதனை மூடி மறைக்கும் வகையில் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற ரீதியில் புதுப்புது வியாக்கியானங்களை வழங்கி வருகின்றது. இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப இந்த நாட்டு மக்கள் தயாராகிவிட்டனர் என்பதைத்தான் அண்மையில் முடிவுற்ற மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் அனைத்தும் உணர்த்தி நிற்கின்றன. அது மட்டும் அல்ல இந்த நாட்டு மக்கள் மீண்டும் இந்த நாட்டில் தனித்து ஆட்சி அமைக்கும் வல்லமை கொண்ட ஒரே கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின்  அணிதிரள தொடங்கியுள்ளதையும் அண்மைக்கால தேர்தல் முடிவுகள் உணர்த்தி நிற்கின்றன.

இந்த நாட்டு முஸ்லிம்கள் மீது முன்னொரு போதும் இல்லாத அளவுக்கு கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாத செயற்பாடுகள் மற்றும் அவர்களின் சமய சமூக விழுமியங்களுக்கு எற்படுத்தப்பட்ட அச்சுறுத்தல்கள் என்பன காரணமாக இந்த அரசாங்கத்தின் மீதான வெறுப்புணர்வின் உச்ச கட்டத்துக்கு முஸ்லிம் மக்கள் வந்துள்ளனர். இதை அண்மைக்கால தேர்தல் முடிவுகளில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களின் வாக்களிப்பு எடுத்துக்காட்டுகின்றது. மாகாண சபை மட்டத்தில் ஆளும்தரப்பின் கீழ் போட்டியிட்ட எல்லா முஸ்லிம் வேட்பாளர்களும் கிட்டதட்ட எல்லா இடங்களிலும் மண்ணைக் கவ்வியுள்ளமை இதற்கு நல்லýதோர் எடுத்துக்காட்டாகும்.

இதை நன்கு புரிந்து கொண்ட அரசாங்கம் முஸ்லிம்களின் வாக்குகளை சீர்குலைத்து அவர்களின் பிரதிநிதித்துவத்தை இழக்கச் செய்யும் வகையில் தனது அரசியல் ஏஜன்ட்டுகளான முஸ்லிம் அமைச்சர்களையும் அவர்களின் கட்சிகளையும் பயன்படுத்தி வருகின்றது. முஸ்லிம்களுக்கு அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக அவர்கள் பாரம்பரியமாக விருப்பமும் நம்பிக்கையும் கொண்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தமது பிரதிநிதித்துவத்தைப் பெற்று விடக் கூடாது என்பதே இந்த அரசாங்கத்தின் ஒரே குறிக்கோளாகும். இதற்காகத்தான் காலம் முழுக்க அரசுடன் கூடிக் குளவும் முஸ்லிம்களின் தலைவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைச்சர்கள் தேர்தல் காலத்தில் மட்டும் தனியாக வாக்குச் சேகரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.

முஸ்லிம்களின் வாக்கு அரசாங்கத்துக்கு செல்லாது. அதே நேரம் அது அரசாங்கத்துடன் ஒட்டி உறவாடும் தமக்கும் கிடைக்காது என்பதை நன்கு அறிந்துள்ள முஸ்லிம் அமைச்சர்கள் அந்த வாக்குகள் மூலம் ஐக்கிய தேசியக் கட்சி ஊடாக முஸ்லிம்கள் தமது பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்ள விடக் கூடாது என்ற அரசாங்கத்தின் குறிக்கோளை நிறைவேற்றுவதற்காகத் தான் இந்தத் தடவை ஊவாவில் ஒற்றுமை வேடம் போட்டு கூட்டாகக் களம் இறங்கினர் அல்லது இறக்கி விடப்பட்டனர்.

சமூகத்தைக் காட்டிக் கொடுக்க இவர்கள் போட்ட வேடம் இப்போது அம்பலமாகியுள்ளது. ஊவா தேர்தல் முடிவுகளை சற்று விரிவாக அலசிப் பார்க்கின்றபோது இவர்கள் போட்ட ஒற்றுமை வேடம் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சி மூலம் கிடைக்கவிருந்த முஸ்லிம் பிரதிநிதித்துவம் தவிர்க்கப்பட்டுள்ளதை நன்கு புரியலாம். அமைச்சரவை அந்தஸ்த்து கொண்ட இரண்டு முக்கிய அமைச்சர்கள் ஒன்றாகக் களம் இறங்கி; ஊவாவில் முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடித்துள்ளனர். இவர்கள் சமூகத்தை காட்டிக் கொடுத்து வாக்கு வேட்டையாட போட்ட ஒற்றுமை வேடத்தை போடாமல் விட்டிருந்தால் இந்த வாக்குகளுள் பெரும் பகுதி ஐக்கிய தேசியக் கட்சிக்கு சென்று அதன் மூலம் முஸ்லிம் உறுப்பினர் ஒருவர் தெரிவாகும் வாய்ப்பு கிட்டியிருக்கலாம். ஆனால் அது நடக்கவில்லை. இதன் மூலம் அரசாங்கத்தின் எதிர்ப்பார்ப்பு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. ஊவாவில் முஸ்லிம் மக்கள் இந்தக் கோமாளிகளின் ஒற்றுமை வேடத்தைக் கண்டு உணர்ச்சி வசப்படாமல் சிந்தித்திருந்தால் இன்று அவர்கள் பிரதிநிதித்துவம் இழந்து அரசியல் அநாதைகளாக்கப்பட்டுள்ள நிலையை தவிர்த்திருக்கலாம்.

இப்போது தேர்தல் முடிந்து விட்டது. இரண்டு அமைச்சர்களும் தாங்கள் போட்ட வேடங்களை களைத்து விட்டு தத்தமது பழைய முகாம்களுக்குத் திரும்பி விட்டனர். இனி ஒற்றுமை பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. இவர்களின் ஒற்றுமை வேடம் ஊவா முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தியுள்ள பாதிப்பு பற்றியும் அவர்களுக்கு அக்கறை இல்லை.

இவர்கள் காலத்துக்கு ஏற்ற  வேடம் போடுவதை இத்தோடு நிறுத்திக் கொள்வதே அவர்கள் இந்த சமூகத்துக்கு செய்யும் அளப்பரிய நன்மையாக இருக்கும். அரசாங்கத்துக்காக வாக்கு சேர்க்கும் முகவர்களாக அவர்கள் செயற்படுவதையும் இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் இல்லையேல் மக்கள் இவர்களைத் தூக்கி எறியத் தயங்க மாட்டார்கள். இவர்களின் அரசியல் வேடத்தை இந்த நாட்டு மக்கள் இப்போது நன்கு புரிந்துள்ளனர். அதனால் தான் இவர்களையும் மக்கள் நிராகரிக்கத் தொடங்கியுள்ளனர். பதவி மோகத்துக்காகவும் ஏனைய தனிப்பட்ட சுகபோகங்களுக்காகவும் இந்த அரசாங்கத்தோடு ஒட்டிக் கொண்டு இருக்கும் எந்த ஒரு முஸ்லிம் அரசியல்வாதியையும் இந்த நாட்டு முஸ்லிம்கள் இனிமேல் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை. அவர்கள் எல்லோருமே மக்களால் நிராகரிக்கப்பட்டு தூக்கி எறியப்படும் காலமும் வெகு தூரத்தில் இல்லை.

1 comment:

  1. Ini antha muslim partyyum arasaankaththodu otti wanthu waakku kettaal padu tholwithaan inimel muslim kachchikal udanadiyaaka U N P udan sera wendum appothuthaan muslim kalin athir kaalam widiwu kaalam kittum.

    ReplyDelete

Powered by Blogger.