ஜனாதிபதித் தேர்தலில் பிக்குகளின் செல்வாக்கும், முஸ்லிம் சமூகத்தை பலிக்கடாக்குதலும்..!
(மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்)
அடுத்த வருட ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறலாம் என அரசியல் அவதானிகள் மாத்திரமன்றி அண்மைக் காலமாக இடம்பெற்றுவரும் நிகழ்வுகளும் எதிர்வு கூறுகின்றன.
ஜனாதிபதித் தேர்தலில் மூன்றாம் முறையும் பதவியில் இருக்கும் அதிபர் மஹிந்த ராஜபஷ போட்டியிடுவதில் ஆளும் கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகள் கிடையாது.
ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரை அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களயே களம் இறக்கப் போவதாக உத்தியோகப் பற்றற்ற உள்ளக செய்திகள் தெரிவித்துள்ளன.
ஜே வீ பி யும் ஜனாதிபதித் தேர்தலில் அதன் தலைவரை களமிறக்க எண்ணியுள்ளதாக தவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா, முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா, முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா, முன்னாள் நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க ஆகியோரின் பெயர்களும் எத்ர்க்கட்சி கூட்டணி அமையும் பட்சத்தில் பொது வேட்பாளராக களம் இறக்கப் படுவோர் எனக் கருதப்படும் பட்டியலில் இருக்கின்றனர்.
இன்றைய அரசியலில் அண்மைக் காலமாக பௌத்த மத குருமாரின் நேரடி மற்றும் மறைமுக தலையீடுகள் ஹெல உறுமய,பொதுபல சேனா, ராவணா பலய போன்ற சக்திகளின் வெளிப்பட ஆரம்பித்துள்ளன.
அரச தரப்புடன் இருக்கும் பல்வேறு சேனாக்களுக்கு அப்பால் கோட்டை நாகவிகாராதிபதி மாதுலுவாவே சோபித தேர அவர்களும் எதிர்க் கட்சிகளின் போது வேட்பாளராக களமிறக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் ஆறு மாதத்திற்குள் அரசியலமைப்பில் மாத்தரம் செய்து நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையினை ஒழித்து பாராளுமன்றத்திடம் அதிகாரங்களை கையளித்துவிட்டு ஓய்வு பெறப்போவதாக அவர் தெரிவித்திருந்தார்.
இப்பொழுது ஜனாதிபதித் தேர்தல் ஒன்றில் எவ்வாறான கூட்டணிகள் அமையப்பெறும் என்பதில் எல்லோரும் குறியாய் இருக்கின்றார்கள், பல்வேறு பெரம்பெசல்களுக்கு மத்தியில் எதிர்க் கட்சியின் ஒரு பொதுவேட்பாளர் களமிறக்கப்படலாம் என்ற நம்பிக்கை இன்னும் அரசியல் அரங்கில் இல்லாமல் இல்லை, அதுவரைக்கும் தத்தமது கிராக்கியை அதிகரிக்கும் அறிவிப்புக்கள் ஒவ்வொரு கட்சியின் தலைமைகளிடமிருந்தும் வெளிவருவது சகஜமாகும்.
இலங்கை அரசியலில் இருபெரும்கட்சிகளை மையப்படுத்திய அரசியல் அரங்கில் மூன்றாம் சக்திகள் “கிங் மேக்கர்ஸ்” தீர்மானிக்கும் சக்திகள் தாம் என தமது கிராக்கியை தக்க வைத்துக் கொண்டு பேரம் பேசுவதிலேயே முனைப்பாக இருக்கின்றன.
அந்த வகையில் ஹெல உறுமய, ஜேவீ பீ, சரத் பொன்சேகா, தமிழ் தேசியக் கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ், தொழிலாளர் காங்கிரஸ் என பல குழுக்கள் பேரம் பெசல்களில் களமிறங்கும் சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்தவரை பேரம் பேசல்கள் எப்படிப் போனாலும் தாம் வெள்ளக் கூடிய குதிரையில் பந்தயம் காட்ட வேண்டும் அது ஜனாதிபதி மஹிந்தவின் குதிரையே என அதன் தவிசாளர் சேகு தாவூது அறிக்கை விட்டிருந்தார்.
இந்த தீர்மானிக்கும் சக்திகளில் பெரும்பாலானவை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் ஏமாற்றப்பட்டவர்கள், பழிவாங்கப்பட்டவர்கள் என்பதனால் ஓரளவு நேர்மையான அல்லது மோசடிகளுடன் கூடிய தேர்தல் ஒன்றில் எதிர்க் கட்சிக் கூட்டணியொன்று அமையப் பெறின் ஆளும் கூட்டணி மண் கவ்வலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த பின்புலத்தில் தான் பொதுபலசேனா நாடுமுழுவதிலும் உள்ள பன்ஸலைகளூடாக ஐம்பது இலட்சம் வாக்காளர்களை திரட்டி அவர்களின் புதிய நண்பர்களோடு இணைந்து அடுத்த ஜனாதிபதியை நாமே தீர்மானிப்போம் என்று பிரகடனம் செய்துள்ளனர்.
ஏற்கனவே நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடைய அரசியல் நடவடிக்கைகளை காரசாரமாக விமர்சித்து வரும் பௌத்த மதத் தலைவர் மாதுலுவாவே சோபித தேர அவர்கள் பொது வேட்பாளராக இருக்கக் கூடாது என்றும் அவருக்குப் பின்னால் ஆட்சி மாற்ற நிகழ்ச்சி நிரலுடன் அமெரிக்கா இருக்கின்றது 200 கோடி ரூபாய்களுடன் அவருக்குப் பின்னால் ஒரு தொண்டர் நிறுவனம் இருக்கின்றது என்றும் அவர் தம்முடன் சேர்ந்து கொண்டால் அவரை தாம் ஜனாதிபதியாக்குவதாகவும் பொது பல சேனா தெரிவித்துள்ளது.
சுகததாஸ உள்ளரங்கில் இடம் பெற்ற பொதுபல சேனாவின் மாநாட்டிற்கு மியன்மாரில் இருந்தது அஸின் விராது துறவியை பிரதம் விருந்தினராக அழைத்து முஸ்லிம் விரோத ஹிந்துத்துவ சக்திகளையும் ஒன்றிணைத்து முஸ்லிம் விரோத கோஷங்களுடன் நடத்தப்பட்ட தேசிய மாநாடு ஒரு ஜனாதிபதித் தேர்தலுக்கான முதற்கட்டப் பிரச்சாரம் போல் அதி உயர்பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இடம் பெற்றமை பொதுபல சேனா யாரை கிங் ஆக தீர்மானிக்கப் போகிறது என்பதனையும் அதற்காக எந்த சமூகத்தை பலிக்கடாவாக்க முனைகிறது என்பதனையும் அப்பட்டமாக அரங்கிற்கு கொண்டு வந்திருக்கின்றது.
இலங்கையில் இல்லாத முஸ்லிம் அடிப்படைவாதம், இஸ்லாமிய பயங்கரவாதம், முஸ்லிம்களின் குடிசனபரம்பல் குறித்த பீதி, ஹலால் உணவு, இஸ்லாமிய உடைகள், ஜம்மியாய்துல் உலமா ,ஷூரா கவுன்ஸில், முஸ்லிம்கவுன்சில், முஸ்லிம்கட்சிகள், முஸ்லிம் சுயாட்சி அதிகாரம் என பல்வேறு கோஷங்களுடன் இந்த போதுபல சேனா இந்த நாட்டின் பெரும்பான்மை சிங்கள பௌத்தர்களை ஏமாற்றி அரசியல் செய்யலாம் என கனவு காண்கிறது.
முஸ்லிம்களை ஆத்திரமூட்டி வம்புக்கு இழுத்து எதிர்வினைகளை வரவழைத்து தமக்கு சாதகாமாக அவசரகாலச் சட்டம், பாதுகாப்பு இராணுவ பொலிஸ் படைகளையும் வரவழைத்துக் கொண்டு மீண்டும் பல அழத் கமைகளை அரங்கேற்றலாம் என முஸ்லிம்களும் அச்சம் கொள்ள நியாயங்கள் இருக்கின்றன, என்றாலும் அவர்களால் எதிர்பார்க்கப்படுகின்ற எதிர்வினைகளை ஆற்றி அவர்களை சந்தைப்படுத்த முஸ்லிம்கள் முன்வரமாட்டார்கள் என்பது மட்டும் இன்ஷா அல்லாஹ் உறுதி.
ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுமா அல்லது பாராளுமன்றத் தேர்தல் இடம்பெறுமா என பலரும் கேள்விகளைக் கேட்கின்றார்கள், உண்மையில் எதிர்க்கட்சிகளின் செல்வாக்கு அதிகரித்து வருகின்ற நிலைமையில் பாராளுமன்றத் தேர்தலை நடாத்தினால் பாரிய கட்சித் தாவல்கள் இடம் பெறலாம் என்பதாலும், தற்பொழுதுள்ள அமைச்சர்கள் சிறுபான்மைக் கூட்டணிகள் அரச யந்திரம் என்பவற்றை உச்ச அளவில் உபயோகித்து ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியாமல் போய்விடும் என்பதனாலும் இன்ஷா அல்லாஹ் ஜனாதிபதித் தேர்தலே முதலில் இடம் பெறலாம் என ஊகிக்க முடிகின்றது, அவ்வாறு இடம்பெற்றால் போட்டிக் குழுக்கள் மற்றும் பொது வேட்பாளர்களுக்கு பலவற்றிற்கு பிரதமர் மற்றும் பல்வேறு அமைச்சுப் பதவிகள் என கடந்த காலங்களில் போன்று மாய ஜாலங்களுடன் பொதுத் தேர்தலையும் நடத்தி முடிக்கலாம் எனவும் எதிர் பார்க்கப்படுகின்றது.
இந்த பின்புலங்களில் முஸ்லிம் சமூகத்தின் புத்தி ஜீவிகள் சிவில் சன்மார்க்க மற்றும் அரசியல் தலைமைகள் மிகவும் நிதானமாக சிந்தித்து எந்தவொரு தேர்தல் முஸ்தீபுகளுக்காகவும் எந்தவொரு தரப்பும் முஸ்லிம்களை பலிக்கடாவாக்கது அவதானமாக சமூகத்தையும் இளைஞர்களையும் வழி நடாத்தல் வேண்டும்.
Post a Comment