பொதுபல சேனாவும், கோத்தபாயவும் அரசாங்கத்தை அழிக்கும் விசக்கிருமிகள் - வாசுதேவ பரபரப்பு குற்றச்சாட்டு
பொதுபல சேனாவும், கோத்தபாய ராஜபக்ஷவும் அரசாங்கத்தை அழிக்கும் விசக்கிருமிகளாக இருப்பதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பரபரப்புக் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார்.
அண்மைக்காலமாக அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் எழுச்சி காரணமாக ஆளுங்கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் தலைதூக்கியுள்ளன.
ஆளுங்கட்சியின் கூட்டணிக் கட்சிகளான இடதுசாரிக் கட்சிகள் பகிரங்கமாகவே அரசாங்கத்தையும், அதன் மக்கள் விரோத நடவடிக்கைகளையும் விமர்சிக்கத் தலைப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அரசாங்கத்தின் பின்னடைவுகளுக்கு பொதுபல சேனா மற்றும் அதன் போஷகரும், பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரே காரணம் என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சாட்டியுள்ளார்.
சிறுபான்மை மக்களுக்கு எதிராக பொதுபல சேனா தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதே போன்று நகர்ப்புறங்களில் வாழும் சிறுபான்மை மக்களை அங்கிருந்து அகற்றும் முயற்சியில் பாதுகாப்புச் செயலாளர் இறங்கியுள்ளார். இந்த நடவடிக்கைகள் ஐ.தே.க. வுக்கு சாதகமாக அமைந்துள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜே.வி.பி. யின் மீள் எழுச்சி குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையிலிருந்து மீள வேண்டுமாயின் அரச நிர்வாகம், பொருளாதார கொள்கைகள் என்பவற்றில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார வலியுறுத்தியுள்ளார்.
Post a Comment