ஜே.வி.பி. க்கு முஸ்லிம்களிடையேயான ஆதரவு அதிகரிக்கிறதா..?
-நஜீப் பின் கபூர்-
ஒரு அரசியல் மாற்றத்திற்கு இலங்கையில் இடமிருக்கின்றதா என்பதனை அறிவிப்புச் செய்கின்ற தேர்தலாக இந்தமுறை ஊவாவில் நடக்கின்ற தேர்தல், உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் தேர்தலுக்கு இன்னும் பத்து நாட்கள் மட்டுமே எஞ்சி இருக்கின்ற இந்த நேரத்தில் ஊவா தேர்தல் மேடைகளில் அனல் பறக்கின்ற அதே நேரம் எதிரணி தேர்தல் கட்சிக் காரியலங்கள் பெரும் எண்ணிக்கையில் தீயிட்டுக் கொளுத்தப்பட்டும் வருகின்றது.
அங்கு தேர்தல் நடத்தக் கூடிய சூழ்நிலை இல்லாவிட்டால் தான் தேர்தலைப் பிற்போடவும் தயங்க மட்டேன் என்று தேர்தல் ஆணையாளர் பகிரங்கமாக அறிவித்திருக்கின்றார். இந்த நிலையில் என்றுமில்லாதவாறு இந்த முறை முஸ்லிம் கிராமங்களின் அழைப்பின் பேரில் ஊவாவில் வெற்றிகரமான கூட்டங்களை ஜேவிபி நடாத்திக் கொண்டிருக்கின்றது.
அதில் பெரும் எண்ணிக்கையான முஸ்லிம்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வருவதையும் அவதானிக்க முடிகின்றது. ஒரு காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரஃப் முஸ்லிம் கிராமங்களுக்குள் பரப்புரைக்கு நுழைந்த போது காணப்பட்ட நிலை இன்று ஜேவிபிக்கு கிடைத்திருக்கின்றது என்று எண்ணத் தோன்றுகின்றது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பங்கரகம்மன என்ற முஸ்லிம் கிராமத்திலும் இவர்கள் வெற்றிகரமான கூட்டமொன்றை நடத்தி இருக்கின்றார்கள். இது தவிர பதுள்ளை, வெளிமடை, ஹாலிஎல, ஹப்புத்தலை போன்ற இடங்களில் அமைந்துள்ள முஸ்லிம் பிரதேசங்களில் இவர்கள் கூட்டங்களை நடாத்திய போது அதிலும் பெரும் எண்ணிக்கையான முஸ்லிம்கள் கலந்து கொண்டிருக்கின்றார்கள்.
அண்மைக் காலங்களில் பொது பல சேனா போன்ற அமைப்புக்கள் முஸ்லிம்கள் மீது கொடுத் தொந்தரவுகளின் போது ஜேவிபி முஸ்லிம் சமூகதத்றிகு ஆதரவாக களமிறங்கியதும். சமூகத்தின் பேரால் கட்சி வைத்திருப்போர் பட்டம், பதவிகளுக்காக விலை போனதும் முஸ்லிம்களிடத்தில் ஜேவிபி பற்றிய நல்லெண்ணம் ஏற்படக்காரணமாக இருந்திருக்க வேண்டும்.
பல முஸ்லிம் அமைப்புக்கள் பள்ளி நிருவாகங்கள்கூட அவர்களுக்குப் பேராதரவு அளித்து வருவதாக ஊவா ஜேவிபி முதலமைச்சர் வேட்பளர் சமந்த வித்யாரத்ன (ஊவா வெள்ளி நாக்கு) மஹியங்கனைத் தேர்தல் தொகுதியில் பரப்புரைக்கு வந்த போது நமது செய்தியாளரிடம் தெரிவித்தார். மேலும் எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலுக்கு முகம் கொடுக்க பரந்து பட்ட முன்னணி ஒன்றை தமது கட்சி நிருவவுள்ளதாகவும் அவர் அங்கு குறிப்பட்டார். இதற்கும் முஸ்லிம் சமூகம் இன்று போல் தமக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
Post a Comment