Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம் பிரதேசத்தை உயிரூட்ட நடவடிக்கை..!

1990 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து பாசிச புலிகளினால் இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட முஸ்லிம்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரந்து வாழ்கின்றனர்.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களினால் யாழ்ப்பாண முஸ்லிம் பிரதேசத்தை உயிர்ப்பிக்கும் நோக்குடன் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் எதிர்வரும் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அதேவேளை, வெளி பிரதேசங்களில் வாழும் யாழ்ப்பாண முஸ்லிம்களையும், வெளிப்பிரதேச முஸ்லிம்களையும் குறித்த நிகழ்வுகளில் பங்கேற்குமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்பாணத்தில் தற்போது வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான சாதக நிலை காணப்படுவதுடன், யாழ்ப்பாண பல்கலைக்கழகம், தொழிற்நுட்ப கல்லூரி என்பவற்றிலும் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம் மாணவர்கள் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையிலும் குறிப்பிடத்தக்க முஸ்லிம்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமது தொழில் மற்றும் தமது பிள்ளைகளின் கல்வி  என்பவற்றுக்கு பொதுவாகவே முஸ்லிம் சமூகம் முக்கியத்துவம் கொடுத்துவரும் நிலையில் வர்த்தக, கல்வி நடவடிக்கைளுக்கான சாதக நிலையும் யாழ்ப்பாணத்தில் மேம்பட்டுள்ளதொரு சூழ்நிலையில் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை யாழ்ப்பாண முஸ்லிம்கள் மூலமாகவோ அல்லது வெளிமாவட்ட முஸ்லிம்கள் ஊடாகவோ சாத்தியமாக்கும் தூய நோக்குடனே யாழ்ப்பாண முஸ்லிம் பிரதேசத்தை உயிர்ப்பித்தல் என்ற நடவடிக்கை தீவிரமாக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு சென்று அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்து பார்ப்பதற்கும், முஸ்லிம் பிரதேசங்களை உயிரூட்டவும் ஒரு புள்ளியாக எதிர்வரும் ஹஜ்ஜுப் பெருநாளை சாதகமாக மாற்றியமைக்கவும் ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்துள்ளர்.

இதற்காக யாழ்பாணத்தில் கல்வி கற்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முஸ்லிம் மாணவர்களிடையே போட்டி நிகழ்வுகளை நடாத்தவும், விளையாட்டும் போட்டி, யாழ் முஸ்லிம் உதைப்பந்தாட்ட போட்டி, கூட்டுச் சாப்பாடு போன்றவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், புத்தளம், நீர்கொழும்பு, பாணந்துறை, கொழும்பு உள்ளிட்ட யாழ்ப்பாண முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பிரதேசங்களில் இணைப்பாளர்களை நியமித்து, அவர்கள் மூலம் முன்கூட்டியே ஹஜ் மற்றும் அததனை அண்மித்த தினங்களில் சாப்பாட்டுக்கான ஓடர்களை மேற்கொள்ளவும் ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

யாழ்ப்பாண முஸ்லிம் பிரதேசத்தை உயிரூட்டும் இந்த தூய செயற்பட்டிற்கு இலங்கையில் பல்வேறு பகுதிகளில் வாழும் யாழ்ப்பாண முஸ்லிம்களிடமிருந்தும், வெளிநாடுகளில் வாழும் யாழ்ப்பாண முஸ்லிம்களிடமிருந்தும் அதிகப்பட்ச ஆதரவை நிகழ்வில் ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அத்துடன் யாழ்ப்பாண முஸ்லிம் முஸ்லிம் பிரதேசத்தை உயிரூட்டி, அதனை தொடர்ந்தும் முஸ்லிம் பிரதேசமாக பாதுகாப்பதற்கும் ஆதரவு நல்குமாறு வெளிப்பிரதேச முஸ்லிம்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், ஹஜ் பெருநாள் நிகழ்வுகளில் பங்கேற்வரும் யாழ்ப்பாண முஸ்லிம்கள் ஏனைய பிரதேச முஸ்லிம்களையும் அழைத்து வருமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.