Header Ads



அரபு நாடுகளின் ஆதவை இழந்துவரும் இலங்கை

சர்வதேசத்தில் இலங்கைக்கான ஆதரவு பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக சிரேஸ்ட ராஜதந்திரியும் பிரான்ஸிற்கான முன்னாள் தூதுவருமான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 22 நாடுகள் ஆதரவளித்துள்ளதாக மேற்கொள்ளப்படும் பிரச்சாரத்தின் யதார்த்தமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் சர்வதேச ரீதியான விசாரணை நடாத்துவது அவசியமற்றது எனவும், தேவையற்ற தலையீடு எனவும் தெரிவித்து 22 நாடுகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.

இலங்கையில் உள்நாட்டு ரீதியான விசாரணைப் பொறிமுறைம மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளன.

எகிப்து தலைமையிலான இந்த நாடுகளில் சீனா, ரஸ்யா, பாகிஸ்தான், கியூபா, இந்தோனேஸியா, தென்சூடான், சிம்பாப்வே, பங்களாதேஸ், அல்ஜீரியா, பொலிவியா, ஈக்வடோர் உள்ளிட்ட நாடுகள் கூட்டாக இணைந்து இந்தஅறிக்கையை வெளியிட்டுள்ளன.

மொத்தமாக 22 நாடுகள் கையொப்பமிட்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

எனினும், இதனை ஓர் ராஜதந்திர ரீதியான வெற்றியாக கருத முடியாது எனவும், நாடு ராஜதந்திர ரீதியில் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தயான் ஜயதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

யதார்த்தமாக நோக்கினால் இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் ஆதரவு நாளுக்கு வீழ்ச்சியடைந்து வருகின்றமையை ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும், இது ஓர் அபாயகரமான நிலைமை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு 29 நாடுகள் ஆதரவளித்து வந்த போதிலும் தற்போது வெறும் 7 நாடுகள் மட்டுமே ஆதரவளிக்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

22 நாடுகள் கூட்டாக இணைந்து சர்வதேச விசாரணைகளுக்கு எதிர்ப்பை வெளியிட்ட போதிலும் அதில் ஏழு நாடுகள் மட்டுமே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் வாக்களிக்கும் உறுப்புரிமை உடையவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது 12 நாடுகள் இலங்கைக்கு ஆதரவளித்திருந்தன. எனினும் தற்போது இந்த எண்ணிக்கை 7 ஆக குறைவடைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆறு மாத காலத்தில் ஐந்து நாடுகளின் ஒத்துழைப்பு இழக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

மேற்குலக நாடுகள் அறிக்கையில் கைச்சாத்திடாமை பற்றி தாம் பேசவில்லை எனவும், உறுப்பு நாடுகளில் பல இலங்கைக்கு ஆதரவாக கையொப்பமிடவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக வியட்நாம், பிரேஸில், தென்ஆபிரிக்கா உள்ளிட்ட நாடுகள்  இந்த அறிக்கையில் கைச்சாத்திடவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஐந்து நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் அமைப்பிலும் சீனாவும் ரஸ்யாவும் மட்டுமே இலங்கைக்கு ஆதரவளித்துள்ளன.

தென் ஆபிரிக்கா, இந்தியா மற்றும் பிரேஸில் உள்ளிட்ட நாடுகள் ஆதரவளிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா, தென் ஆபிரிக்கா, பிரேஸில் உள்ளிட்ட நாடுகளின் ஆதரவு கிடைக்கப்பெறாமை பாரிய பிரச்சினையாகவே கருதப்பட வேண்டும் எனவும் நாடு பாரியளவிலான ராஜதந்திர அபாய நிலைமையை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு ரீதியான விசாரணை நடத்தப்பட வேண்டுமென்ற அர்த்தத்தில்  ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இந்திய பிரதிநிதிகள் கருத்துவெளியிட்டிருந்தனர்.

எனினும், மார்ச் மாத வாக்கெடுப்பின் போது இந்தியா இலங்கை;கு ஆதரவாக வாக்களிக்கவில்லை, மாறாக வாக்களிப்பில் பங்கேற்காமல் இருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாளுக்கு நாள் இலங்கைக்கு ஆதரவளிக்கும் நாடுகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைகின்றமை ஆரோக்கியமான நிலைமை கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் ராஜந்திர  பொறிமுறைம முற்று முழுதாக சீர்குலைந்துள்ளமையே இதன் மூலம் வெளிப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.