ஐ.தே.க. ஆட்சியை ஏற்படுத்தவும், ரணிலை ஜனாதிபதியாக்கவும் பாடுபடுவேன் - சஜித் பிரேமதாச
எமது கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பை ஏற்று ஐ.தே.கட்சியை ஆட்சி பீடமேற்றுவதற்காக அனைத்து விதமான தியாகங்களையும் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு நாட்டில் ஐ.தே.க. ஆட்சியை ஏற்படுத்த பாடுபடுவேன். அத்துடன் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்குவதற்காக எனது முழு பலத்தையும் வழங்குவேன் என அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார்.
ஐ.தே.கட்சியின் 68 ஆவது ஆண்டு விழா பசறையில் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்;
பதுளை மாவட்டத்திற்கும் பிரேமதாச குடும்பத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எனது பாரியார் பிறந்த மாவட்டம். எனது தந்தை ரணசிங்க பிரேமதாசவின் அஸ்தி இம்மாவட்டத்திலே வைக்கப்பட்டுள்ளது. ஊவா மாகாண சபை ஐ.தே.க ஆட்சியின் கீழ்வர அர்ப்பணிப்புடன் செயற்பட தயாராக உள்ளேன்.
ஊவாவில் ஐ.தே.க. வின் வெற்றி குறித்து இன்று முழு நாடுமே பேசத்தொடங்கி விட்டது. எமது கட்சிக்குள் கருத்து முரண்பாடுகள் காணப்பட்ட போதிலும் நாம் என்றும் தனிப்பட்டவர்களின் நியாய பத்திரத்திற்கு அமைவாக என்றும் செயற்பட்டதில்லை. எமது கட்சிக்கென தனியான கலாசாரம் கட்டுப்பாடு என்பன உள்ளன. அதை கடைப்பிடிப்பதாலேயே யானை இன்று தும்பிக்கையை ஆட்டிக்கொண்டு வீறு கொண்டு எழுந்திருக்கின்றது.
எமது கட்சியிடம் சிறிய மனிதர்களை பெரியவர்களாக்கும் வேலைத்திட்டம் என்றுமே இருந்து வந்திருக்கின்றது. இன்று அபிவிருத்தி என்ற பெயரில் பொய் மாயாஜாலங்களை ஏற்படுத்தி மக்களை பொருளாதார ரீதியாக எழும்ப விடாமல் நசுக்கி வைத்திருக்கின்றது இன்றைய அரசு.
இன்றைய அரசாங்கம் ஆகாயம் கடல் நிலம் துறைமுகம் என எல்லாவற்றிலும் கொள்ளையடித்து வருகின்றது. நாட்டில் வீடில்லா குடும்பங்கள் 15 இலட்சம் உள்ளன. இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு பிரச்சினை உக்கிரமடைந்து வருகின்றது. விவசாயிகள் மீன்பிடித் தொழிலாளர்கள் தோட்ட தொழிலாளர்கள் அரசாங்க ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் பொருளாதார சுமையில் வாடுகின்றனர்.
இன்றைய தேவை எமது கட்சிக்குள்ளான ஒழுக்காற்று விசாரணை அல்ல. அரசாங்கம் செய்த ஊழல்களுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணையை மேற்கொள்ள எமது கட்சியை ஆட்சிப்பீடம் ஏற்ற பாடுபட வேண்டும். சஜித் பிரேமதாஸ உண்மையான ஐ.தே. கட்சி சொந்தக்காரன். எந்த சந்தர்ப்பத்திலும் கட்சி தாவி கட்சியை காட்டிக்கொடுக்கும் பரம்பரையில் வந்தவன் நானல்ல.
எமது தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை 2015 இல் ஜனாதிபதியாக்குவதற்காக எனது முழு பலத்தையும் எல்லா விதமான தியாகங்களையும் சவாலில் வெற்றி பெற்று சுபீட்சமான எதிர்காலத்தை நாட்டு மக்களுக்கு வழங்குவேன் என்றார்.
Best of Luck Sajith sir....
ReplyDeleteCongratulations!!!!!
ReplyDeleteFirst Step of victory for United National Party