ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மறுமலர்ச்சி ஒன்றியம் உருவானது
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மறுமலர்ச்சி ஒன்றியத்தின் சூறா சபைக்கான ஒன்று கூடல் அண்மையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சல்மா ஹம்ஸாவின் இல்லத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் மறுமலர்ச்சி ஒன்றியத்தின் செயலாளரும் புதிய காத்தான்குடி இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளருமான எம்.ஏ.எம்.அஷ்ரப் அவர்கள் அறிமுக உரையினை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் காத்தான்குடியில் 'ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது விழ்ச்சியடைந்து கொண்டு செல்கிறது. போராளிகள் அனைவரும் அதிருப்தியுற்று மனம் உடைந்து காணப்படுகின்றனர். ஒரு சிலர் மாற்று கட்சிகளுக்கு தாவுகின்றார்கள்.
இந்நிலைமை தொடருமானால் கட்சி என்று சொல்ல ஒரு சிலரே மிஞ்சுவார்கள் இந் நிலைமைக்கு எமது பிரதேச தலைமைத்துவங்களின் அசமந்தபோக்கு, செயல்திறன் அற்ற தன்மை, அனைவரையும் அரவணைத்து செல்லாமை, எடுத்ததுக்கெல்லாம் பொருளாதாரத்தில் பழி போடுதல் போன்ற காரணங்களே மிக முக்கியமானதாகும் என சுட்டிக்காட்டினார்.
இம் மண்ணில் பல சகோதரர்கள் இரத்தம் சிந்தி, சிறைவாசம் அனுபவித்து, உயிர் தியாகம் செய்து, பல தாய்மார்களின் துஆவினால் வளர்த்தெடுக்கப்பட்ட இக் கட்சியினை தொடர்ந்து மிக மோசமான நிலைக்கு கொண்டு செல்ல உண்மையான கட்சி தொண்டர்களாகிய நாம் பார்த்துகொண்டிருக்க முடியாது. எனவே எமது பிரதேசத்தில் கட்சியை பலப்படுத்தி வளர்த்தெடுப்பதுடன் கட்சி தாவுகின்ற நடவடிக்கையை தடுத்து நிறுத்துவது ஒவ்வொரு போராளிகளினதும் கடமை என்பதை உணர்ந்து கட்சியின் மிக முக்கிய போராளிகளை கொண்டு 'ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மறுமலர்ச்சி ஒன்றியம் என்ற அமைப்பை உருவாக்கினோம்.
இவ் ஒன்றிய உருவாக்கத்தின் பின் மனம் உடைந்து, அதிருப்தியுற்று காணப்பட்ட போராளிகள் அனைவரும் பலத்த ஆதரவினை; தந்து கொண்டு இருப்பதுடன் எமது பிரதேசத்தில் கட்சியில் பல அடிப்படையான மாற்றங்களை செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என கூறுகின்றனர். எனவே 'கட்சியை காப்பது லட்சியம் இக்கடமையை நாம் செய்வோம் நிச்சயம்' என்பதை இலட்சிய வசனமாக்கி நாம் தொடர்ந்தும் நமது பணியை மேற் கொள்ள வேண்டும் இதற்கான பூரண ஆதரவினை அனைவரும் தரவேண்டும் எனக் கூறினார்.
அதனைத் தொடர்ந்து மறுமலர்ச்சி ஒன்றியத்தின் தள உறுப்பினர்களான எம்.எம்.எம்.நளிம் , பாவலர் சாந்தி முகைதீன் ஆகியோர் உரையாற்றினார்கள் அத்துடன் அனைவருடைய கருத்து பறிமாறல்களும் இடம்பெற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மறுமலர்ச்சி ஒன்றியத்தினை தொடர்ந்தும் வெற்றிகரமாக பல வேலைத்திட்டங்களுடன் நடாத்தி செல்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இறுதியாக கலந்துரையாடலின் முக்கிய அம்சமான மசூறா சபை அமைப்பதற்கான நிகழ்வு நடைபெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மூத்த போராளிகள், புத்திஜீவிகள், வர்த்தகர்கள் என அனைவரும் உள்ளடங்களாக 31 பேர் மசூறா சபைக்கு தெரிவானார்கள்.
Post a Comment