முஸ்லிம் பயங்கரவாதத்தை நியாயப்படுத்த, செய்யித் ஹுசைன் முயற்சி
தமிழ் பயங்கரவாதத்திற்கு அப்பால் முஸ்லிம் கிறிஸ்தவ பயங்கரவாத செயற்பாடுகளையும் நியாயப்படுத்தவே ஐ.நாவின் புதிய ஆணையாளர் செய்யித் அல் - ஹுசைன் முயற்சிக்கின்றார். இலங்கையின் நடந்து முடிந்த பழைய விடயங்களை மீண்டும் கிளறிவிட்டு நாட்டை சீரழிக்க வேண்டாம் என பொதுபலசேனா பௌத்த அமைப்பு தெரிவித்துள்ளது.
பொதுபலசேனா அமைப்பினர் நேற்று கிருலப்பனையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவ்அமைப்பின் நிர்வாகப் பணிப்பாளர் டிலந்த விதானகே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் நவதீம்பிள்ளை தமிழ் பயங்கரவாத செயற்பாடுகளை ஆதரித்து தனது கடமையினை செய்து முடித்தார். இப்போது புதிய ஆணையாளராக பதவியேற்றுள்ள செய்யத் அல் - ஹுசைன் தமிழ் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு அப்பால் சென்று முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ பயங்கரவாத செயற்பாடுகளை நியாயப்படுத்தும் வகையில் தனது பணியினை ஆரம்பித்துள்ளார்.
இலங்கையில் பயங்கரவாதமொன்றினை அழித்தமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை பேசிக் கொண்டிருக்கின்றது. ஆனால், இன்று சிரியாவிலும் இஸ்ரேல், பாலஸ்தீன பகுதிகளில் பொது மக்களை இனப்படுகொலை செய்யும் முஸ்லிம் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராகவும் பெண்களையும் கர்ப்பிணிகளையும் கொலை செய்து உலகில் இஸ்லாமிய பயங்கரவாதத்தை பரப்பும் ஆயுதப் போராளிகளுக்கு எதிராகவும் ஆணையாளரின் வாய் திறக்காதுள்ளது.
மேலும், புரூனையில் பௌத்தர்களை கொன்று இஸ்லாமிய நாடாக்கும் முயற்சியில் முஸ்லிம் பயங்கரவாதிகள் செயற்படுகின்றனர். இஸ்லாமியரல்லாத ஏனைய மத பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்குகின்றனர். இவை மனித உரிமை மீறள்களாக ஏன் இவ்வமைப்புகளுக்கு தெரியவில்லை.
இலங்கையில் இடம்பெற்று முடிந்த பழைய சம்பவங்களை மீண்டும் கிளறிவிட்டு இலங்கைக்குள் ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஒற்றுமையினையும் அமைதியினையும் சீரழிக்கும் முயற்சியில் சர்வதேசம் செயற்படுகின்றது. இவை அனைத்தையும் நிறுத்திவிட்டு இங்கு இடம்பெற்றுக்கொண்டிருக்கும் மனித உரிமை சம்பவங்களையும் இஸ்லாமிய பயங்கரவாத செயற்பாடுகளையும் தடுத்து நிறுத்த இவர்கள் ஏதெனும் செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
Post a Comment