ஷரியா சட்டம் நாட்டில் இல்லாதபோது, அதனை நீக்க வேண்டுமென்பது முட்டாள்தனமானது - அசாத் சாலி
ஷரியா சட்டம் என்ற ஒன்றே இந்த நாட்டில் இல்லாதபோது அதற்கு எதிரான கண்டனம் தெரிவித்து அதனை நீக்க வேண்டுமென்று பொதுபலசேனா கூறுவது முட்டாள் தனமான நகைப்புக்குரிய விடயமாகும் என்று மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்தார்.
ஷரியா சட்டம் என்றால் என்னவென்று தெரியாமல் அதனை பற்றிப் பேசுவது வேடிக்கையாகவுள்ளது. திருடியவர்களின் கையை வெட்டுவதுதான் ஷரியா சட்டம். அது இலங்கையில் உள்ளதா? உண்மையில் ஒவ்வொரு முஸ்லிமும் ஷரியா சட்டத்தினை பின்பற்றித்தான் நடக்க வேண்டும். ஆனால், இலங்கையில் அந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் அதனை நீக்க வேண்டுமென்று பொதுபலசேனா கூறுவது அதன் காழ்புணர்ச்சியையே வெளிப்படுத்துகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் நேற்று கொழும்பில் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில் தெரிவித்ததாவது;
ஷரியா சட்டங்களின் மூலமே காதி நீதிமன்றங்கள் இயங்குவதாகவும் திருமணங்கள் நடைபெறுவதாகவும் பொதுபலசேனாவினர் தெரிவித்துள்ளமை முற்றிலும் உண்மைக்கு புறம்பான ஒன்றாகும். விவாகம் மற்றும் விவாகரத்து சட்டங்கள் என்பனவே காதி நீதிமன்றங்களில் உள்ளன. இவை அரசியலமைப்பிற்கு உட்பட்டவையாகும். பாராளுமன்ற அனுமதியுடன் இவை நடைமுறைப்படுத்தப்பட்டவை என்பதனை பொதுபலசேனாவினர் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்த நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களை அடக்கி ஒடுக்குவதற்கென அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
தமிழர்களுக்காக குரல் கொடுக்கின்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை பயங்கரவாதி என்றும் முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கின்ற என்னை மதவாதி என்றும் அரசாங்கம் சித்தரிக்கின்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகள் என்று கூறுகின்ற அரசாங்கம் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்பவராலேயே மகிந்த ராஜபக்ஷ என்றவர் ஆட்சிப்பீடம் ஏறினார் என்பதனை மறந்து விடக்கூடாது. பிரபாகரன் இல்லையென்றால் மகிந்த ராஜபக்ஷ் என்ற ஜனாதிபதி உருவாகி இருக்க முடியாது. ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை மகிந்த ராஜபக்ஷவிற்கு பெற்றுக்கொடுத்தது பிரபாகரன்தான். இது எல்லோருக்கும் தெரியும். இறுதியில் லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்ததும் மகிந்ததான்.
இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினை புலிகள் என்று ஜனாதிபதி தரப்பு சாயம் பூசுகின்றது. உண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நடிகர் திலகம் சிவாஜிகணேசனை விடவும் சிறப்பாக நடிக்கின்றார்.
ஏற்கனவே கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனின் அழைப்பினை ஏற்காமல் அரசாங்கத்துடன் இணைந்து கிழக்கு மாகாண முதல்வர் பதவியை தாரைவார்த்துள்ள ரவூப் ஹக்கீம் தற்போது ஊவாவில் எம்முடன் கூட்டணி வைக்க அழைப்பு விடுத்தார். அதற்கு நான் இணங்கவில்லை. பள்ளிகளை உடைப்பவர்களுக்கு ஒருபோதும் நான் துணைப்போகமாட்டேன்.
ஊவா மாகாணத்தில் அரசாங்க கட்சியில் முஸ்லிம்களை நிறுத்தவேண்டாம். நாம் தனியாக நின்று உங்களுக்கு வெற்றியை பெற்றுத்தருகின்றோம் என்று ரவூப் ஹக்கீமும் றிஸாத் பதியுதீனும் அரசாங்கத்திற்கு உறுதிமொழி அளித்துள்ளதாக ஒரு அமைச்சர் கூறியுள்ளார். உண்மையில் பள்ளிகளை உடைப்பவர்களுக்கு வாக்குகளை பெற்று கொடுக்க அவர்கள் நினைப்பது வேதனைக்குரிய விடயமாகும். மானம் உள்ள எந்த முஸ்லிமும் ரவூப் ஹக்கீம் மற்றும் றிசாட் பதியுதீன் ஆகியோருக்கு ஆதரவாக வாக்களிக்க கூடாதென்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
மேலும், ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக மட்டுமே செயற்படுவேன் என்று ரவூப் ஹக்கீம் ஒரு அமைச்சரிடம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. தேர்தல் காலங்களில் தனித்திருந்து மதவாதம் பேசுவது, வெற்றிப்பெற்றதும் அரசுடன் இணைந்துக் கொள்வது இவருக்கு புதிதல்ல. எனவே, மக்கள் இவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்றார்.
Post a Comment