சட்டத்தரணிகள் ஆஜராகக் கூடாது - காத்தான்குடியில் ஆர்ப்பாட்டம்
காத்தான்குடி பொலிஸ் பிரிவில் நேற்று புதன்கிழமை சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்து சிறுமியை கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபருக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் ஆஜராகக் கூடாது என தெரிவித்து மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு முன்னால் வியாழக்கிழமை (11) பிற்பகல் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் பிரதேசத்திலுள்ள பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறுமியை துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த நபருக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் ஆஜராக கூடாது எனக் கேட்டு சுலோகங்களை தாங்கி அமைதியான முறையில் இந்த ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.
சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய பொலிசார் குற்றவாளிகளுக்கு துணைபோவதா, சிறுவர் துஷ்பிரயோக ஒழிப்பு அதிகாரிகளே எங்கள் விடயத்தில் அக்கறை செலுத்துங்கள். சட்டத்தரணிகளே கொலைகாரர்களுக்கு ஆதரவாக இருக்காதீர்கள் என்பன போன்ற வசனங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை இவர்கள் தாங்கியிருந்தனர்.
இதன் போது அங்கு வந்த சில சட்டத்தரணிகள் விடயத்தை கேட்டறிந்து கொண்டனர்.
புதன்கிழமை மாலை காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் பிரதேசத்திலுள்ள அப்துர் றஹ்மான் வீதியைச் சேர்ந்த எஸ். பாத்திமா சீமா எனும் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான நிலையில் உயிரிழந்தமையும். நேற்று அதிகாலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான ஐ. றமழான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளமையு குறிப்பிடத்தக்கது.
Post a Comment