ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவாக ரஷ்யா, கியூபா, வெனிசூலா நாடுகள் களத்தில் குதிப்பு
இலங்கையின் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் ஐ.நா விசாரணைகளை சில நாடுகள் ஆதரித்துடன் ஏனைய நாடுகள் எதிர்த்துள்ளன. இதனால், ஐ.நா மனித உரிமை பேரவையில் இன்று பிளவு ஏற்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் நடத்தும் விசாரணைகளுக்கு தமது ஆதரவை நீடிப்பதாகவும் விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
அதேவேளை விசாரணைகள் மூலமாக இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கும் முயற்சிகளை எதிர்ப்பதாகவும் இந்த விசாரணைக்கு ஐ.நா மனித உரிமை பேரவையின் முழு ஆதரவு இலங்கைக்கு வழங்க வேண்டும் எனவும் சில நாடுகள் தெரிவித்தன.
இலங்கைக்கு எதிராக ஐ.நா விசாரணைகளை பிரித்தானியா, மொண்டிநீக்ரோ உள்ளிட்ட நாடுகள் ஆதரித்ததுடன் சீனா, ரஷ்யா,கியூபா மற்றும் வெனிசூலா உள்ளிட்ட நாடுகள் விசாரணைக்கு எதிர்ப்பை வெளியிட்டன.
இலங்கையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கம், நீடித்த மோதல்களினால் பாதிக்கப்பட்டவர்களின் குறைகள் நிவர்த்திக்கப்பட வேண்டும் எனவும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்ளில் இருந்து தப்பிக்கும் நடவடிக்கைகள் முடிவுக்கு வர வேண்டும் எனவும் பிரித்தானியா கூறியுள்ளது.
இலங்கையின் வடக்கில் இராணுவத்தின் பிரசன்னமானது ஜனநாயகத்திற்கான இடத்தை சுருக்கியுள்ளதுடன் கருத்து சுதந்தித்திற்கான தடை, கவலையை ஏற்படுத்தியுள்ளதாக பிரித்தானிய பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா விசாரணைகளுடன் ஒத்துழைப்பவர்கள் அச்சுறுத்தப்படவோ பதிலடி கொடுக்கப்படவோ கூடாது எனவும் ஆக்கப்பூர்வமான விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும் எனவும் அயர்லாந்து கோரியுள்ளது.
Post a Comment