முஸ்லிம் காங்கிரஸின், முக்கிய நினைவு நாள் இன்று
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முதல்முதலாக தோற்றுவிக்கப்பட்ட நினைவுநாள் இன்றுதான். ஆம், அதாவது 1980ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் திகதி காத்தான்குடியில் உள்ள பிரதான வீதியில் அமைந்திருந்த ஒரு சிறுவர் பாடசாலை மண்டபத்தில் அவ்வூர் முன்னாள் பட்டினசபைத் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான மறைந்த ஏ. அகமட் லெப்பை அவர்களின் தலைமையில் நடைபெற்ற அங்குராப்பண கூட்டத்தில்தான் முஸ்லிம் காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டது.
இவ்வங்குரார்ப்பண கூட்டத்திற்கான அழைப்பிதழ்களை தட்டச்சு இயந்திரத்தில் அச்சடித்து அனுப்பியதுடன் ஏனைய எல்லாவித ஆரம்ப வேலைகளையும் முன்னின்று ஒழுங்குபடுத்தியவர்களும் அதற்கான இந்தப் பொருத்தமான பெயரை தெரிவு செய்ததும் நாங்கள்தான். அதனால்தான் மறைந்த தலைவருடன் இணைந்து இரவு பகலாக பாடுபட்டு இவ்வமைப்பை கல்முனையில் கட்டியெழுப்ப காரணகர்த்தாக்களாக இருந்த ஒரு சிலருள் நானும் ஒருவன் என்பதனால் மட்டுமல்ல இக்கட்சியின் ஆரம்ப செயலாளளராகவும் இருந்து அன்று முதல் இன்றுவரையில் இருக்கும் ஒரே ஒரு மூத்த உறுப்பினர் என்பதனால் இன்றைய நாள் பற்றி நினைவுகூர்ந்து இவைகளையெல்லாம் இன்றுள்ளவர்களுக்கும், மற்றவர்களுக்கும், சுருக்கமாhக எழுத்துருவில் எடுத்துரைக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு எனக்குண்டு என்பதனால் இதனை எழுதலாம் என எண்ணுகிறேன். (மன்னிக்கவும்)
அன்று முதல் கிழங்கிலங்கையில் உள்ள அம்பாரை, மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற எல்லா மாவட்டங்களிலும்; அதன் ஆரம்ப கால அரசியல் நடவடிக்கைகளை செயல்படுத்தி வந்த வேளைகளில் விஷேடமாக கிழக்கிலங்கைக்கு அப்பால் சென்று இக்கட்சியை அறிமுகபடுத்தி தேசிய கட்சியின் அரசியல் நீரோட்டத்தில் தனது பங்களிக்பையும் வழங்குவதற்காக முழு இலங்கையையும் பிரதிநிதிதுப்படுத்துவதற்காகவும் முதலில் முஸ்லிம்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காகவும் அத்துடன் ஏனைய மக்களையும் இணைத்துக் கொள்வதற்காகவும் இக் கட்சியை பல ஊர்களுக்கும் நாம் எடுத்துச் சென்று அவ்வப்போது அறிமுகப்படுத்தியும் சிறிய கூட்டங்களும் கருத்தரங்குகளும், கலந்துரையாடல்களும் நாடாத்திவந்தோம்.
முஸ்லிம் காங்ரஸின் ஆரம்பமும் அடிப்படைத் தோற்றமும் ஒரு அரசியல் கட்சியாக பதியப்பட வேண்டுமென மறைந்த மாமனிதர் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களின் நீண்ட கால கனவை நனவாக்கவேண்டித்தான் இக்கட்சி தோற்றம் பெற்றது என்ற உண்மையை எவராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.
1980ம் ஆண்டுக்கு பின் நம் நாட்டில் ஏற்பட்ட இனமுரண்பாடுகள் முற்றி அரசியல் ரீதியில் வடகிழக்கிலங்கை முஸ்லிம்கள் பற்றி தனியாக பேச ஏனைய தமிழ் அமைப்புக்களுடனும் மற்றைய சிங்கள கட்சிகளுடன் பேரம்பேசுவதற்கும் தேசிய அரசியல் பேரினவாத கட்சிகளில் இருந்த முஸ்லிம் தலைவர்களின் முடியாமைக்கு முற்றுப்புள்ளிவைக்க வேண்டுமென கங்கனம் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கி கட்சிதமாக காய்களை நகர்த்திய பெருமை மறைந்த மாமனிதர் எம்.எச்.எம். அஸ்ரப் என்றால் அதற்கு எவ்வித மாற்றுக்கருத்தும் இன்றுவரையில்லை என்பதுதான் எமது எல்லோரின் ஏகமானதான முடிவாகும்.
பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து தான் அனுபவரீதியில் கண்ட கசப்பான உண்மைகளை உணர்ந்த தலைவர் அஸ்ரப் அவர்கள் இது பற்றி அப்போதைய உள்ளுர் அரசியல் வாதிகளுடன் உரையாடினார். ஆனால் அதனை அவர்கள் அவ்வளவாக ஏற்றுக்கொள்ளவும் இல்லை. அதற்கு ஆதரவு அழிக்கவும் இல்லை. இருப்பினும் தான் எடுத்த முடிவை முதலில் அம்பாரை மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள கனிசமான புத்திஜீவிகளை அழைத்து அவர்களுடன் ஆலோசனை செய்வதற்காக வேண்டி கூட்டப்பட்ட மேற்படி ஆரம்ப கூட்டம் பல எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் பல்வேறு கருத்துமுரண்பாடுகளும்; காரசாரமான வாக்குவாதங்களும் இடம்பெற்று இவ்வாறான அரசியல் கட்சியின் தோற்றத்தின் அவசியம் பற்றி இறுதியில் ஏகமானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பல அரசியல் அமைப்புக்களில் அங்கம் வகித்து அதன் வெற்றிக்கு தன்னை அர்ப்பனித்து செயல்பட்ட அன்னாரின் அரசியல் அனுபவம் முஸ்லிம் காங்கிரஸூக்கு உரமாக அமைந்திருந்தது. முஸ்லிங்களுக்கு தனியான அரசியல் கட்சியின் தேவை கடந்த அரை நூற்றாண்டு காலமாக பல தரப்பட்ட அரசியல்வாதிகளால் பேசப்பட்ட போதும் அதனை துணிந்து செயற்பட வைப்பதில் துணிகரமாக சிந்தித்து செயல்பட்டு உயிருட்டியவர்தான் மறைந்த மாமனிதர் அஸ்ரப் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
ஒரு தனிமனிதனின் தலைமைத்துவத்தின் கீழ் எவ்வித அரசியல் அதிகாரமும் இன்றி அப்போதைய அடாவடித்தனம் அத்தனைக்கும் முகங்கொடுத்த முஸ்லிம்களின் மூத்த முதல் தலைவர் இவர்தான் முஸ்லிம் காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்ட போது முதன்முதலில் எதிர்த்தவர்கள் அன்றைய முஸ்லிம் அரசியல் தலைவர்களே அன்றி வேறு மதத்தவர்கள் அல்ல. இப்படி இருந்தும் முஸ்லிம் காங்கிரஸின் முதல் கூட்டத்தை கல்முனையில் கூட்ட ஒரு பொது மண்டபம் எங்களுக்கு வழங்க பலர் மறுத்தார்கள் மாறாக எதிர்ப்புகளும் ஏச்சுப் பேச்சுக்களும் எங்களுக்கெதிராக் எழுப்பப்பட்டது இறுதியில் கல்முனை பிரதான வீதியிலுள்ள மெதடிஸ்த மண்டபத்தில் தான் பல எதிர்ப்புக்களுக்கு மத்தியில் அக்கூட்டத்தை நடத்தினோம். இப்படித்தான் காங்கிரஸின் வரலாறு கல்முனையில் பல கஸ்டமான ஆரம்பகால கட்டங்களை கடந்தும் சந்தித்தும் சந்திக்கு வந்தது.
இக்கட்சியின் நடவடிக்கைகளை கிழக்கு மாகாணத்தில் உள்ள எல்லாக் கிராமங்களுக்கும் நாம் எடுத்துச் சென்ற போது இது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியா? என்று எல்லோரும் ஏளனமாக எங்களிடம் கேள்வி கேட்கத் தொடங்கினார்கள். 1983ஆம் ஆண்டு ஜுலை கலவரத்தின் பின் ஜே. ஆர். ஜயவர்த்தனா அவர்களின் தலைமையில் கூட்டப்பட்ட சர்வகட்சி மகாநாட்டில் கூட முஸ்லிம்களின் உரிமைகளைப் பற்றி பேச எங்களுக்கு என்று ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி இல்லாத காரணத்தினால், பேரினவாத கட்சிகளில் ஒட்டிக் கொண்டிருந்த முஸ்லிம் தலைவர்களின் தயவில்தான் இந்நாட்டு முஸ்லிம் மக்கள் அன்று தங்கியிருந்தார்கள்.
அதனால்தான் 1986 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் திகதி கொழும்பில் நடந்த மாபெரும் பொது கூட்டத்தில் வைத்து ஒரு அரசியல் கட்சியாக சட்டபூர்வமான சரத்துக்களை நிறைNவுற்றுவதற்காக வேண்டி இக்கட்சியை அன்று நாம் பகிரங்கமாக தலைநகரில் பிரகடனப்படுத்திய போது அக்கட்சியின் ஸ்தாபகத் தலைவராக மறைந்த மர்ஹும் எம்.எச்.எம் அஸ்ரப் அவர்களும் அதன் ஸ்தாபகப் பொதுச் செயலாளராக மீண்டும் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் ஆகிய நானும் ஓட்டமாவடியைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான மறைந்த அப்துல்காதர் அவர்கள் பொருளாளராகவும் ஏகமானதாக தெரிசெய்யப்பட்டோம். இவைகள் இன்றுள்ள புதியவர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லைதான் ஆனால் தெரிந்த ஒரு சிலரும் தெரியாதவர்களாகத்தான் திகழ்கின்றார்கள்.
இலங்கை அரசியலில் மூன்றாம் இடத்தைப் பிடித்துக் கொண்டு ஒரு மாபெரும் சத்தியாக எந்த அரசாங்கத்தையும் அமைக்கும் வல்லமையை முஸ்லிம் காங்கிரஸ் பெற்று வந்துள்ளது. இந்நாட்டு அரசியல் வரலாற்றில் பல பெரும் முக்கிய சாதனைகளை புரிந்;து வந்திருக்கிறது. முஸ்லிம் மக்களின் அரசியல் அடையாளச் சின்னமாக திகழ்ந்து வந்துள்ளது.
இக்கட்சி தோற்றுவிக்கப்பட்ட காலம் முதல் இதன் பெயரைப் பார்த்த பலர் குறிப்பாக முஸ்லிம் தலைவர்கள் கொதித்தெழுந்தார்கள். கட்சியை காரசாரமாக விமர்சித்தார்கள். இனத் துவேசத்தை கக்கினார்கள், கூட்டங்கள் கூடுவதற்கு தடை விதித்தார்கள், ஒலிபெருக்கிக்கான அனுமதி மறுக்கப்பட்டது, மேடைகள் உடைக்கப்பட்டன, ஆதரவாளர்கள் தாக்கப்பட்டார்கள். முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் பலர் கொலை செய்யப்பட்டார்கள். இப்படித்தான் இக்கட்சியின் அன்றைய வரலாறு இரத்தக் கறைகள் படிந்த படிகளை அதன் அத்திவாரக்கற்களாகப் பாவித்து கட்டப்பட்ட கம்பீரமான கட்டடம் தான் இன்றைய முஸ்லிம் காங்கிரஸ்.
முஸ்லிம்களின் உரிமைகள்; மதிக்கப்படவேண்டுமென்ற என்ற மந்திரத்தை மறைந்த மாமனிதர் கொண்டிருந்தார். அது மட்டுமல்லாமல், தமிழ் மூத்த அரசியல் தலைவர்களை மதித்து அவர்கள் மத்தியில் நல்லிணக்கத்தையும் நல்லுறவையும் வளர்த்து அதனை பாதுகாத்தும் வந்தார்;. உதாரணமாக, 1983ம் ஆண்டு ஜுலை கலவரத்தின் பின்பு இந்தியா சென்ற தமிழ் தலைவர்களை அழைத்து அஷ;ரப் அவர்களின் கல்முனை அம்மன் கோவில் வீதியில் அமைந்த 'ஹிறா' இல்லத்தில் ஒரு விசேட கலந்துரையாடலை நாம் அன்று நடாத்தினோம். இவ்வைபவத்திற்கு தமிழ் மூத்த தலைவர்களான மறைந்த அ. அமிர்தலிங்கம், மு. சிவசிதம்பரம், பட்டிருப்பு முன்னாள் எம்.பி. கணேசலிங்கம், அம்பாறை மாவட்ட சபை உறுப்பினர் கல்முனை வேல்முருகு, கந்தையா நொத்தரிசு போன்ற உள்ளுர் தமிழ் பெரும் அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட ஏனையோரும் கலந்து கொண்ட அக்கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸை வாழ்த்தி வரவேற்று, ஆசீர்வாதித்தார்கள். இக்கட்சி எதிர்காலத்தில் தமிழ் முஸ்லிம் உறவை வலுப்படுத்த உதவ வேண்டும் என்றும் வேண்டிச் சென்றார்கள். இவர்களில் எவரும் எம்மத்தியில் இன்றில்லை என்பதுதான் இன்றைய பிரச்சினை அவர்கள் அத்தனைபேரும் இம்மண்ணைவிட்டு மறைந்து விட்டார்கள்.
சுருக்கமாகச் சொன்னால் மறைந்த அமைச்சர் மலையகத்தின் தலைவர் மதிப்புக்குரிய எஸ். தொண்டமான் கல்முனையில் நடந்த முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாட்டில் கூறியது போன்று கடந்த 50 ஆண்டுகளில் எந்த அரசியல் கட்சியும் அடையாத அரசியல் அங்கீகாரத்தையும் மக்கள் ஆதரவையும் இந்தக் குறுகிய காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் அடைந்துள்ளது. அதன் அடையாளச் சின்னமாக பாராளுமன்றத்தில் ஏறக்குறைய 25 நாடாளுமன்றப் பிரதிநிதிகள் இதுவரை தெரிவு செய்யப்பட்டு வந்துள்ளார்கள். அத்துடன் 100க்கு மேற்பட்ட உள்ளுராட்சி பிரதிநிதிகளாக மாகாண சபை, மாநகர சபை, நகர சபை, பிரதேச சபை என்று ஏராளமான உறுப்பினர்களை இக்கட்சி இன்றுவரை கொண்டிருக்கின்றது என்பதே அதன் பலமாகும்.
வெறும் சலுகைகளிலும் பசப்பு வார்த்தைகளிலும் போலி வாக்குறுதிகளிலும் நம்பிக்கை கொண்டிருந்த சமூகம், தமது உரிமைகளையும், சட்டரீதியான எங்கள் பங்குகளையும் தட்டிக் கேட்க முற்பட்டு அதில் தலையிட்டு வெற்றி பெற்றதும் முஸ்லிம் காங்கிரஸின் வருகையின் பின்புதான். அரசியல் தீர்க்கதரிசனமும் திறமையும் மன உறுதியும், விடாமுயற்சியும், தலைமத்துவப் பண்புகளும் கனிவான பேச்சும், மற்றவர்களைக் கவரும் காந்த சக்தியும், மறைந்த தலைவர் கொண்டிருந்தார். இது தான் காங்கிரஸின் வளர்ச்சி;க்கும், உயர்ச்சிக்கும் உயிரோட்டமாக இருந்தது.
கிழக்கில் உதிக்கும் உதய சூரியனின் ஒளிக்கீற்றுக்கள் உலகுக்கு ஒளி பரப்புவது போன்று இந்நாட்டின் நாலாபகுதிகளிலும் 'காங்கிரஸ்' ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது. கட்சிக்கு கிடைத்த மரச்சின்னத்தின் ஆணிவேர் (மரம்) கிழக்கில் இருந்த போதிலும் இதன் பக்கவேர்களும் ஏனைய கிளைகளும் கிழக்கிற்கு அப்பால் ஆலமரம் போல் பெரும் விருட்சமாக வேரூன்றி இன்று பல்வேறு மட்டங்களில் பல ரகத்தில் பலருக்கு நிம்மதியாக நிழல் கொடுத்துக் கொண்டிருக்கிறது அல்ஹம்துலில்லாஹ்.
உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் எம்மக்களுக்கு சம சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். பின் தங்கிய பிரதேசங்களெல்லாம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் சிறு பான்மையென்ற சொல்லை அரசியல் அகராதியிலிருந்து அகற்றப்பட வேண்டும். மாற்றான் தாய் பிள்ளைகள் என்ற மனப்பான்மையைப் போக்க வேண்டும் என்ற நல்ல பல கொள்கைகளை அரசியல் ரீதியாக செயல்பட வழிவகுத்து முஸ்லிம் காங்கிரஸ் தான்.
இந்நாட்டிலுள்ள சகல சிறிய அரசியல் கட்சிகளின் எதிர்கால செயற்பாட்டுக்கு உத்தரவாதத்தையும் அங்கீகாரத்தையும் பெறுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் காரணகருத்தாவாகத் திகழ்ந்து வந்துள்ளது. உதாரணமாக, 12 வீதமாகவிருந்த வெட்டுப்புள்ளியை 5 வீதமாக மாற்ற மறைந்த ஆர். பிரேமதாசா ஜனாதிபதி அவர்கள் மூலம் ஓர் அரசியல் புரட்சியை ஏற்படுத்தியவர் அஷ;ரப் அவர்கள்தான் இதன் மூலம் இன்று மக்கள் விடுதலை முன்னணி, ஹெல உறுமய போன்ற பல சிறிய கட்சிகளும் நாடாளுமன்றம் செல்வதற்கு அங்கீகாரம் கொடுத்தது மேற்படி 4 வீதமான வெட்டுப்பள்ளியே அந்த புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்திய உண்மையை யாரும் இலகுவில் மறந்துவிட முடியாது. அதற்காக அவர்கள் இக்கட்சிக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளார்கள்.
இந்நாட்டில் நாலாபகுதிகளிலும் வாழும் முஸ்லிம்களுக்கும் ஏனையோர்களுக்கும் எண்ணற்ற சேவைகளையும் பல்வேறுபட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் கப்பல் துறைமுகத்தில் கணிசமான வேலை வாய்ப்புக்களையும் கல்வி, கலாச்சாரம், சுகாதாரம், வீதி, வீடமைப்பு, தென்கிழக்கு பல்கலைக்கழகம், ஒலுவில் துறைமுகம் எனப்பல்வேறு பாரிய முன்மாதிரியான செயற்பாடுகளை நிறைவேற்றி வந்துள்ளது. அவைகள் அத்தனையும் இங்கு நீண்ட பட்டியல் போட்டு விபரிக்க முடியாது.
மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ;ரப் அவர்களுக்குப்பின் இப்போதைய கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான சகோதரர் மான்புமிகு றஊப் ஹக்கீம் அவர்கள் தற்சமயம் இலங்கையில் தலைவிரித்தாடும் பல்வேறுபட்ட பேரினவாதிகளின் முழுச்சவால்களுக்கும் முகங்கொடுத்து அவர்களின் கெடுபிடிகளை உடைத்து இக்கட்சியின் பெயரையும் கொள்கையையும் இலங்கையில் மட்டுமல்ல சர்வதேச நாடுகளுக்கும் எடுத்துச் சென்று இந்நாட்டு முஸ்லிம்களின் உரிமையையும் பள்ளிவாசல் உடைப்புகளையும், பர்தா உடையையும் ஏனைய எங்கள் பிரச்சினைகளையும் வெளிச்சம் போட்டு அடையாளப்படுத்தி வருகின்றார். அவர் இக்கட்சியின் ஆதரவாளர்களையும் அரவரணைத்து அர்ப்பணிப்புடன் தமது தாழ்மையான தலைமைத்துவப் பண்புகளைக் கொண்டு பேணிப்பாதுகாத்து பொது மக்களையும் கட்சித் தொண்டர்களையும், ஆதரவாளர்களையும் தொடர்ச்சியாக எவ்வித தங்கு தடைகளுமின்றி பல்வேறுபட்ட கஷ்ட நஷ்டங்களுக்கு மத்தியில் இக்கட்சியை காப்பாற்றி பொறுமையுடன் முன்னெடுத்து வருகின்றார். இப்பேற்பட்ட இத்தலைவரை இக்கட்சியின் ஆரம்ப கால கர்தா என்ற வகையில் மனமாற வாழ்த்தி இவரைப், பாராட்டி நன்றியுடன் அவரின் நீண்ட ஆயுளுக்காக இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
வாழ்க ! முஸ்லிம் காங்கிரஸ், வளர்க எங்கள் மரச் சின்னம் !!
மிக நல்லதொரு உண்மையான பதிவு. சிறி லங்கா சுதந்திர கட்சி கடைசி நேரத்தில் ( பலசுற்று பேச்சுவார்த்தையின் பின் இருதரப்பாரும் உடன்படிக்கையில் கையப்பம் வைக்க சென்ற போது) செய்த நாணயமற்ற நடவெடிக்கையால் மிகவும் ஏமாற்றம் அடைந்த தலைமை உடனடியாக தனது அதிதிருப்தியை வெளிப்படுத்தி கொண்டு பேச்சு வார்த்தை மேசையில் இருந்து வெளியேறி வந்த போது பிரேமா தாசவிடம் இருந்து அழைப்பு வந்ததது. மிகவும் குறுகிய நேரத்தில்( ஒரே இரவில் ) வைக்கப்பட்ட நிபந்தனைதான் இந்த 4 வீத வெட்டுப்புள்ளி. இத்தனைக்கும் தலைமை எதிர் கட்சியில் தான் தன்மானத்துடன் இருந்தது.
ReplyDeleteபிரேமதாசவுக்கு வாக்களியுங்கள் என்று எந்த சந்தர்பத்திலும் மக்களை தலைமை கேட்க வில்லை மாறாக துரோகம் செய்த ஏமாற்றிய SLFP க்கு வாக்களிக்க வேண்டாம் என தான் மக்களை கேட்டுக் கொண்டது. இது தான் எங்களுக்கு தேவையான தலைமை.
ஆசாத் சாலிக்கு நடந்தது தான் தனக்கும் என்று கூறும் தலைமை தேவையில்லை.
திரு. கபூர் அவர்களே, உங்களுக்கு நேசனல் லிஸ்டில் ஒரு பதவி வேணும் என்பதற்காக தற்போதைய தலைமையின் அரசியல் போக்கு சரி என நியாயப் படுத்துவதை எங்களால் ஒத்து கொள்ள முடியவில்லை ஆனால் நேசனல் லிஸ்டில் ஒரு எம்பி போஸ்ட் கொடுக்க வேண்டுமானால் அதில் முதன்மையானவர் நீங்கள் தான் என்பதிலும் மற்று கருத்து கிடையாது.