''பாடம்''
(ஏ.எல்.நிப்றாஸ்)
மான் வேட்டைக்காக துப்பாக்கிகளோடு புறப்பட்டுச் சென்று, வேட்டையாட எதுவும் அகப்படாததால் வரும்வழியில் மீன் வாங்கிக் கொண்டு வந்தது போன்ற அனுபவத்தை ஊவா மாகாண சபை தேர்தல் முஸ்லிம் கூட்டமைப்புக்கு வழங்கியிருக்கின்றது.
தேர்தல் கூட்டத்திற்கு வருவோர் எல்லோரும் தமது கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்றும், வாக்களிப்பதாக தம்மிடம் கூறும் வாக்காளர்கள் எல்லோரும் கடைசி நிமிடம் வரைக்கும் அந்த முடிவில் உறுதியாக இருப்பார்கள் என்றும் நம்பிக்கொண்டு இருக்கும் காலம் முழுவதும்.... வியூகங்களும் சாணக்கியங்களும் அரசியலில் பலிக்காமலேயே போய்விடுகின்றன.
முஸ்லிம்களுக்கு அரசியல் அடையாளத்தை தேடித்தந்து ஒரு காலத்தில் நாட்டின் ஒட்டுமொத்த ஆட்சியையும் தீர்மானிக்கும் சக்தியாக திகழ்ந்த முஸ்லிம் காங்கிரஸ், அதிலிருந்து பிரிந்து சென்ற அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளினதும் பகீரத பிரயத்தனங்கள் ஊவாவில் எதிர்பார்த்த பலனை தரவில்லை. அமைச்சர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ள10ராட்சி மன்ற பிரதிநிதிகள் என ஏகப்பட்டோரை முஸ்லிம் கூட்டமைப்பு வாக்குத்திரட்டுவதற்காக பதுளை மாவட்டத்தில் உலவ விட்டிருந்த போதும் 5045 வாக்குகளே கிடைத்திருக்கின்றன.
முஸ்லிம் கட்சிகளின் இந்த தேர்தல் கூட்டு ஆசனங்கள் எதுவுமின்றி தோல்வியடைந்தது சிலருக்கு மனவருத்தத்தையும் சிலருக்கு மகிழ்ச்சியையும் அளித்திருருக்கின்றது. 'நாம் முதலிலேயே சொன்னோம்தானே' என்ற தொனியில் சிலர் எகத்தாளமாக நோக்குகின்றனர். ஆனால் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும், முஸ்லிம் காங்கிரஸோ அல்லது மக்கள் காங்கிரஸோ மிகப் பெரும் தவறுகளை மக்களுக்கு இளைத்திருக்கலாம். அது வேறுவிடயம். அதற்காக ஒரு அரசியல் நோக்கத்திற்காகவேனும் ஒன்றுபட்டு வாக்குக்கேட்ட முஸ்லிம் கூட்டமைப்பு தோல்வியுற்றதை பட்டாசு கொளுத்தி கொண்டாட முடியாது.
வீரனுக்கு வெற்றியைப் போலவே தோல்வியும் அழகுதான். எவ்வாறிருப்பினும் தேர்தல் தோல்வி அல்லது வெற்றி பெறமுடியாமை எதனால் ஏற்பட்டிருக்கின்றது என்பது மு.கா.வும் அ.இ.மக்கள் காங்கிரஸூம் மீள் வாசிப்புக்கு உட்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள கடும்போக்கு சக்திகள் கடுமையான இன ஒடுக்குமுறையை பிரயோகித்து வருகின்றன. ஹலாலும், பள்ளிவாசல்களும், ஹிஜாபும் இனவாதத்திற்கு தவணை முறையில் பலியாகிக் கொண்டிருக்கின்றன. ஊவா மாகாணத்து முஸ்லிம்களும் கடும்போக்கு சக்திகளினை பல தடவை எதிர்கொண்டிருக்கின்றனர். இவ்வாறான ஒரு பின்புலத்திலேயே உவா மாகாண சபைக்கான தேர்தல் இடம்பெற்றது. பதுளை மாவட்டத்தில் மட்டும் இரட்டை இலை சின்னத்தில் முஸ்லிம் கூட்டமைப்பு போட்டியிட்டது.
அப்படியாயின் தேர்தல் ஒன்றில் எதனைச் சொல்லி மக்களை கவர முடியுமோ அதற்கான எல்லா பேசுபொருட்களும் அமைச்சர்களான ஹக்கீமிடமும் றிசாட்டிடமும் கைநிறைய இருந்தன. ஆனாலும் இந்த மந்திரங்கள் முற்றாக பலிக்கவில்லை. சாராசரி வாக்களிப்பு வீதத்தின் படி நோக்கினால் 20ஆயிரம் முஸ்லிம்கள் வாக்களித்திருப்பார்கள் என்று ஒரு கணக்குப் போட்டால் 10ஆயிரம் வாக்குகளாவது முஸ்லிம் கூட்டமைப்புக்கு கிடைத்திருந்தால் ஒரு ஆறுதலாக இருந்திருக்கும். ஆனால் அதுவும் கிடைக்கவில்லை. இதற்கு பல விடயங்கள் காரணங்களாக அமைந்திருக்கக் கூடும்.
முதலாவது - இவ்விரு கட்சித் தலைவர்களும் மத்தியில் அரசாங்கத்தில் அங்கம் வகித்துக் கொண்டு அரசாங்கம் வழங்கிய வாகனங்கள், பாதுகாப்பு வீரர்களோடு ஊவாவிற்கு வந்தே வாக்குக் கேட்டனர். இவ்வாறு இவ்விருவரும் தனித்து போட்டியிடுவது அரசாங்கத்திற்கு சார்பாகவல்ல என்பது உண்மை என்றிருந்தால் நிச்சயமாக அரசாங்க மேடைகளில் ஹக்கீமும் றிசாட்டும் வசைபாடப்பட்டிருப்பர். ஆனால் களநிலைமைகள் தலைகீழாக காணப்பட்டன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் முஸ்லிம் வேட்பாளர்கள் யாரும் நிறுத்தப்படாமல் மறைமுகமாக அந்த 'கோட்டா' முஸ்லிம் கூட்டமைப்புக்கே வழங்கப்பட்டது போலிருந்தது. இந்த அரசாங்கம் தமக்கு கிடைக்கும் சாத்தியமுள்ள வாக்குகளை முஸ்லிம் கூட்டமைப்புக்கு மறைமுகமாக விட்டுக் கொடுத்திருக்கின்றது என்றால், இந்தக் கூட்டு ஏற்படுத்தப்பட்டமை அரசாங்கத்தின் வேலையாகவே இருக்க வேண்டும் என்று முஸ்லிம்கள் ஊகித்தனர். அரசாங்கத்திற்கு எதிராகவும் அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் விழக்கூடிய முஸ்லிம் வாக்குகளை தமது கஜானாவுக்குள் விழ வைப்பதற்கான உத்தியாக அரசாங்கம் இந்த 'கூட்டமைப்புக்கு' ஆசீர்வாதம் அளித்திருக்கலாம் என்று மக்கள் நினைத்தனர்.
எப்படியோ முஸ்லிம் கூட்டமைப்பு அளிக்கப்படுகின்ற வாக்குகள் (கிழக்கு மாகாண சபை தேர்தல் போல) கடைசியாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிடமே கொண்டு சென்று சேர்க்கப்படும் என்று அதிகமான வாக்காளர்கள் கிலேசமடைந்திருந்தனர். 'இல்லையில்லை அவ்வாறு அரசாங்கத்தின் எடுபிடிகளாக நாம் செயற்படவில்லை. மாறாக இந்த சமூகத்தின் ஒற்றுமையை பலப்படுத்துவதற்காகவே கைகோர்த்திருக்கின்றோம்...' என்று மேடைக்கு மேடை ஹக்கீமும் றிசாட்டும் சத்தியம் செய்தனர். இருப்பினும் இந்த வார்த்தைகளில் நம்பிக்கையடையாத மக்கள் முஸ்லிம் கூட்டமைப்புக்கு வாக்களிப்பதை தவிர்த்திருப்பர்.
மக்களை கவரக்கூடிய பேசுபொருள்கள் கட்சித்தலைவர்களிடம் இருந்தபோதும், அதனை பகிரங்கமாக பேசு முடியாத நிலை ஊவாவில் காணப்பட்டது. கிழக்கு மாகாணத்தை விட ஊவா மாகாணத்தின் இனப்பரம்பல் வித்தியாசமானது. இங்கு அநேக பிரதேசங்களில் சகோதர இன மக்கள் பெரும்பான்மையாகவும் முஸ்லிம்கள் சிறு அளவினராகவுமே வாழ்கின்றனர். எனவே அங்கே குறிப்பாக இனவாத கருத்துக்களை கூறி குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முனைந்தால் அங்கு வாழும் முஸ்லிம்களே பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கும் சிங்கள – தமிழ் மக்களுக்கும் இடையிலான உறவில் கீறல் விழக்கூடிய அபாயம் இருந்தது. எனவே கிழக்கைப்போல் ஊவாவில் பீரங்கிப் பேச்சுக்களும் அதில் கட்டுண்டு கிடத்தலும் சாத்தியப்படவில்லை.
கடந்த 10 வருடங்களாக முஸ்லிம் பிரதிநிதிகள் எவரும் ஊவா மாகாண சபையில் அங்கம் வகிக்கவில்லை. இக்காலப்பகுதியில் ஊவா மாகாணத்தில் வாழும் முஸ்லிம்களுக்கு கொஞ்சமாகவே உரிமைகளும் அபிவிருத்திகளும் கிடைக்கப் பெற்றிருந்தாலும் அதனை பெற்றுக் கொடுத்தவர்கள் ஆளும் கட்சியிலும் எதிர்க்கட்சியிலும் அங்கம் வகித்த அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களே. அதைத்தவிர, இம்முறை முஸ்லிம் கூட்டமைப்புக்கு வாக்குக் கேட்டுவந்த அமைச்சர்கள் ஊவா முஸ்லிம்களுக்கு உதவி தேவைப்படுகின்ற நேரத்தில் கூப்பிடு தூரத்தில் இருந்ததாக குறிப்பிடுவது கடினம்.
இவ்வாறிருக்கையில், இப்போது தமக்கு ஒரு முஸ்லிம் பிரதிநிதி வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக சிங்கள அரசியல்வாதிகளுக்கு எதிராக வாக்களித்தால் நன்றி மறந்தோர் ஆகிவிடுவோம் என்று எண்ணிய முஸ்லிம் மகா ஜனங்களும் முஸ்லிம் கூட்டமைப்புக்கு நிச்சயமாக வாக்களித்திருக்க மாட்டர்.
இன்னுமொன்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு இரண்டு பலங்கள் இருக்கின்றன ஒன்று அதன் மரச் சின்னம் மற்றையது மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப். இம்முறை ஊவா தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸூன் சேர்ந்து மு.கா. போட்டியிட்டமையால் இரட்டை இலை சின்னம் தேர்ந்தெடுக்கப்பட்டது. யோசித்துப் பாருங்கள் - மரத்திற்கும் இலைக்கும் எவ்வளவு தூரம் வித்தியாசமிருக்கின்றது! மு.கா.வின் பழைய உறுப்பினர் என்றாலும் கூட பல தடவை மு.கா. கட்சியை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கிய ஒருவருக்கு சொந்தமான கட்சியின் இரட்டை இலை சின்னத்தில் கேட்காமல் தமக்குச் சொந்தமான மரச்சின்னத்திலேயே வாக்குக் கேட்டிருந்தால் இன்னும் சில நூறு வாக்குகள் அதிகமாக கிடைத்திருக்கும்.
முக்கியமான இன்னுமொரு யதார்த்தத்தையும் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. அதாவது – மு.கா.வும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸூம் ஊவா மாகாண முஸ்லிம்களுக்கு பரிச்சயமானவை என்றாலும் கூட தனித்துவ அரசியல் அடையாளத்தின்பால் அவர்களை இழுத்தெடுப்பதற்கு இன்னும் காலமெடுக்கலாம். ஏனென்றால் அவர்களது அரசியல் அனுபவம் அப்பேற்பட்டதாக இருந்திருக்கின்றது. ஊவா முஸ்லிம்கள் பொதுவில் பெரும்பான்மை கட்சிகளுக்கு வாக்களித்து வாக்களித்து பழகிவிட்டார்கள். இப்போது திடுதிடுப்பென இரண்டு அமைச்சர்கள் சென்று தமது கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு கூறினால் அடுத்த நிமிடமே அவர்கள் முஸ்லிம் கட்சியை நோக்கி ஓடிவருவார்கள் என்று எண்ணுவது அரசியல் அறியாமை.
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் யுத்தத்தால் அனுபவித்த கொடூரங்களும். நாட்டை ஆட்சிபுரிந்த முன்னைய அரசாங்கங்களாலும் பெரும்பான்மை கட்சிகளாலும் காட்டப்பட்ட ஓரவஞ்சனையுமே தனித்துவமான அரசியல் இயக்கம் ஒன்றின் தேவைப்பாட்டை முஸ்லிம்கள் உணர்வதற்கு வழிவகுத்தது என்று கூறலாம். அப்படியிருந்தும் கூட, மு.கா. என்ற அரசியல் இயக்கத்தினை நோக்கி முஸ்லிம்களை அஷ்ரஃப் அழைக்கத் தொடங்கி சில வருடங்களுக்குப் பிறகே பெருமளவான கிழக்கு முஸ்லிம்கள் மு.கா.வை நோக்கி வந்தனர் என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
அதனடிப்படையில் நோக்கினால், ஊவாவில் கடந்த பத்து வருடங்களாக ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை தனித்துவம், ஒற்றுமை என்ற ஒற்றைச் சொற்களால் பத்து வாரங்களில் நிரப்பிவிட முடியும் என்று எதிர்பார்ப்பது தகுதிக்கு மீறியது.
எது எவ்வாறிருப்பினும், 5000 வாக்குகள் முஸ்லிம் கூட்டமைப்பு கிடைத்துள்ளன. அப்படியாயின் குறைந்தது 1000 குடும்பங்கள் இக்கூட்டமைப்பின் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றன. எனவே அந்த மக்களுக்காகவும் ஊவாவில் வாழும் ஏனைய மக்களுக்காகவும் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகள் கூட்டிணைந்து குரல் கொடுப்பது நன்றிக்கடன் மட்டுமன்றி, அடுத்த தேர்தலுக்காக அத்திபாரமுமாகும்.
ஐக்கிய தேசிய கட்சி 20 இற்கு மேற்பட்ட தேர்தல்களில் தோல்வி கண்டபோதும் இன்னும் விக்கிரமாதித்தன் போல வெற்றிக்கு முயன்று கொண்டுதான் இருக்கின்றது. அதேபோல், இம்முறை ஆளும் கட்சி சில இடங்களில் வெற்றிபெற தவறியுள்ளது. அதற்காக அடுத்த முறை அங்கு வேட்பாளர்களை நிறுத்தாமல் விடப்போவதில்லை. அவ்வாறே இத்தேர்தலை அனுபவ பாடமாக கற்று அடுத்த தேர்தலை முஸ்லிம் கட்சிகள் எதிர்கொள்ள வேண்டும்.
ஏல்லாவற்றுக்கும் மேலாக ஊவாவில் இரு கட்சிகளிடையே ஏற்பட்ட தேர்தல் கூட்டு, ஆற்றைக்கடக்கும் வரை அண்ணன் தம்பி உறவுபோல தேர்தல் முடிந்த கையோடு அறுந்துவிடக் கூடாது. ஊவாவுக்கு வெளியே வடக்கு, கிழக்கிலும் தெற்கிலும் எல்லா முஸ்லிம் கட்சிகளும் ஒன்றுபட்டு அடுத்துவரும் தேர்தல்களில் களமிறங்க வேண்டுமென மக்கள் விரும்புகின்றார்கள்.
வேறு எந்தப் பொல்லாப்புமில்லை!
Hi Muslim Politicians
ReplyDeleteDays of your people trusting you are over. The Tamil politicians though under the butt of a gun swayed sometimes, they never gave up on their community and policies. You guys will do anything to fatten your bank balance.
Taking ministerial posts for the sake of the country, wont work anymore with your people. First unite yourselves, make an agenda for your community and make your promises in writing hand over those promises with your signatures to your people.
Till then Salaams, Wanakkam and Aayubowan.
Unmaiyil ithil mukkiyam uva mudinthalumbiniwarunm kalankalil nadaiperum elactionkalil muslim kachchikal ontrupada wendum athuthan intraya srilanka muslimkalin awaawaahum allah uthawi saiwaanaaha ameen.
ReplyDeleteமுஸ்லிம் காங்கிரசுக்கு கிடைக்கும் வாக்குகள் அதன் பெயரில் உள்ள "முஸ்லிம்" என்ற பெயருக்கு கிடைக்கும் வாக்குகளே அன்றி உங்களுடைய கொள்கைக்காகவும் சேவைகளுக்காகவும் கிடைக்கும் அங்கீகாரம் அல்ல... முஸ்லிம் என்ற பெயரை பயன்படுத்தி மக்களை எமாற்றுவதை தயவு செய்து நிறுத்துங்கள்... பதவி ஆசைகளை திறந்து உங்களுக்கு வாக்களித்த மக்களின் நலன்களுக்காக போராடுங்கள்... முக்கியமாக முஸ்லிம்களுக்கு உதவாவிட்டாலும் பரவாஇல்லை வாக்குகளை பிரிப்பதன் மூலம் அரசுக்கு முட்டு கொடுத்து முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்யாதீர்கள்.... நாங்கள் முஸ்லிம் காங்கிரஸ் அழிய வேண்டும் என விரும்பவில்லை திருந்த வேண்டும் என்று தான் விரும்புகிறோம்... திருந்தாவிட்டால் அழிவதே மேல்...
ReplyDelete