கண்டி ஜின்னாஹ் ஞாபகார்த்த மண்டபம், மாற்று மதத்தவர்களுக்கு ரூபா 17 கோடிக்கு விற்பனை
- L .A .U .L .M . நளீர்-
அண்மையில் வக்ப் சபையினரால் மத்திய மாகாண முஸ்லிம் லீக்கிடம் பராமரிப்புக்கு கையளிக்கப்பட்ட கண்டி, D .S . சேனாநாயக்க வீதியில் அமைந்துள்ள ஜின்னாஹ் ஞாபகார்த்த மண்டபம் 17 கோடி ரூபா பெறுமதிக்கு அந்நியர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
குறித்த மண்டபத்தையும் அதன் நிலத்தினையும் தம்புள்ள, குருநாகலை வீதியில் அமைந்துள்ள 'D .N .LAND SALE ' என்ற பெயரிலான காணி - கட்டட விற்பனை நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்துள்ளதாகத் தெரியவருகிறது.மேற்படி மண்டபத்தின் தந்தைவழி உரிமை கோரி வழக்குத் தொடுத்திருக்கும் அரனாயக்காவைச் சேர்ந்த இனாயத்துல்லா (நளீமி ) மற்றும் அவரது சகாவான ஹுஸைன் தீன் ஆகிய இரு முஸ்லிம் நபர்களே குறித்த விற்பனையைச் செய்ததாக கொள்வனவு நிறுவனத்தின் உரிமையாளினி என தம்மை அறிமுகப்படுத்திக்கொண்ட பெண் தளத்தில் இருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,
நேற்று முன்தினம் ஜின்னாஹ் நினவு மண்டபம் மூன்றாவது முறையாகவும் மேற்குறிப்பிட்ட இரு முஸ்லிம்களினதும் பின்னணியில் ஆக்கிரமிக்கப்பட உள்ளதாகக் கிடைத்த தகவலை அடுத்து, நேற்றிரவு மண்டப நிர்வாகிகளான கண்டி முஸ்லிம் வர்த்தகர் சங்கத்தினரும், மத்திய மாகாண முஸ்லிம் லீக் அமைப்பினரும் ஓன்று கூடி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அதன் ஒரு கட்டமாக, கண்டி போலீசில் முறைப்பாடு செய்துள்ளனர். இதனையடுத்து போலிஸ் அவசரப் பிரிவினால் ஒரு பேருந்துடனான பாதுகாப்பு மண்டபத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இரவு 10.30 மணியளவில் மண்டபத்தினுள் புகுந்த இனம் தெரியாத சந்தேக நபர்கள் முதல் வேலையாக ஜின்னாஹ் மண்டபப் பெயர் பலகையை கிழித்தெரிந்து விட்டு தமது 'D .N .LAND SALE ' எனும் பெயர்ப் பலகையை பொருத்தியுள்ளனர்.
இதுவிடயம் குறித்து மத்திய மாகாண முஸ்லிம் லீக்கின் மண்டபத்துக்கான பொறுப்பாளரான முஜிபுர்ரஹ்மான் அவசர பிரிவுப் போலீசாரிடம் தொலைபேசியூடாக வினவிய போது, இங்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. இரண்டு மூன்று தினங்களாக புனருத்தாரண வேலைகள் நடை பெறுவதாகக் கூறி கட்டட உரிமையாளர்களே உள்ளே வந்துள்ளனர் என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது.இது குறித்த முறைப்பாட்டைச் செய்ய போலிஸ் நிலையம் சென்ற பிரமுகர்களின் முறைப்பாட்டை பொலிஸ் தடுப்புப் பிரிவு பதியாது சிறு முறைப்பாட்டுப் பிரிவுக்கு செல்லுமாறு உபதேசித்துள்ளனர்.
இன்று 28-09-2014 காலை பாகிஸ்தான் உயரிஸ்தான் தூதரகத்தின் தலையீட்டின் பின்னர் காலை 9.00 மணியளவில் அத்துமீறி உட்பிரவேசித்திருந்த 16 சந்தேக நபர்களை கைது செய்த பொலிசார், பின்னர் முற்பகல் 11.00 மணியளவில் ஜின்னாஹ் நினைவு மண்டபத்தினை மத்திய மாகாண முஸ்லிம் லீகிடம் ஒப்படைத்துள்ளனர்.
நிர்வாகப் பொறுப்பு யாருக்கு உரித்துடையது என்ற கருத்தியல் யுத்தத்தை விட்டுவிட்டு ஈகோ பாராது ஒற்றுமையுடன் செயற்பட கண்டிய பிரமுகர்கள் முன்வராத பட்சத்தில், முஸ்லிம் சமூகத்துக்கான குறித்த மண்டபத்தினை சமூக விரோதச் சக்திகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளவதென்பது முடியாத காரியமாகிவிடும்.
Post a Comment