ISIS டி ஷர்ட் : தமிழகத்தில் இரு இளைஞர்கள் கைது
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள ஒரு மசூதியின் முன்பாக, ஈராக்கில் செயல்படும் ஐசிஸ் அமைப்பின் முத்திரையுடன் டி-ஷர்ட் அணிந்து புகைகப்படம் எடுத்துக்கொண்ட இளைஞர்கள் இரண்டு பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜுலை 29ஆம் தேதியன்று, தொண்டியைச் சேர்ந்த இளைஞர்கள் 24 பேர் ஐசிஸ் அமைப்பின் முத்திரை பொறிக்கப்பட்ட கறுப்பு நிற டி ஷர்ட் அணிந்தபடி புகைப்படம் எடுத்துக்கொண்டு அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியானதும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின்போது, ஈராக்கில் பணியாற்றி வந்த இந்தியச் செவிலியர்கள் ஐசிஸ் அமைப்பினரால் கடத்தப்பட்டு, துன்புறுத்தாமல் விடுவிக்கப்பட்டதை பாராட்டும் வகையில்தான் அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டதாக இளைஞர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், நேற்று மாலையில் அப்துல் ரஹ்மான் என்ற 24 வயது இளைஞரும் முகமது ரில்வான் என்ற இளைஞரும் ராமநாதபுரம் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். அப்துல் ரஹ்மான்தான் திருப்பூரில் இந்த டி ஷர்ட்களை வாங்கியவர் என்று கூறப்படுகிறது.
இந்தக் கைது குறித்து, ராமநாதபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனத்திடம் கேட்டபோது, "வெளிநாட்டில் ஒரு அரசை எதிர்த்துப் போராடும் பயங்கரவாத அமைப்பிற்கு ஆதரவு தெரிவித்ததற்காகவும் இங்கிருக்கும் இளைஞர்களைத் தூண்டியதற்காகவும் அவர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பதாக"த் தெரிவித்தார்.
இது தொடர்பில் பேசிய, தொண்டி ஜமாத்தின் செயலாளரும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத் தலைவருமான சாதிக் பாட்சா, இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகளைப் போலச் சித்தரிப்பது வருத்தம் தருவதாகத் கூறினார்.
இது குறித்துப் பேசிய மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான ஜவாஹிருல்லா, இஸ்லாமிய இளைஞர்கள் இதுபோன்ற சமூக வலைதளங்கைப் பயன்படுத்தும்போது பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என பிபிசியிடம் தெரிவித்தார்.
நேற்று மாலை கைதுசெய்யப்பட்ட அவர்கள், திருவாடனை மாஜிஸ்ட்ரேட் இளவரசி முன்பாக ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைப்பதற்கு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் மதுரைச் சிறையில் அடைக்கப்பட்டனர். BBC
Post a Comment