"சியோனிஸ எதிரிகள் படுகொலையை நிகழ்த்திவிட்டு, அதனை திசைதிருப்ப யுத்த நிறுத்தம்''
"சியோனிஸ எதிரிகள் எமது மக்கள் மீது படுகொலையை நிகழ்த்திவிட்டு அதனை திசைதிருப்புவதற்கு எழுத்து மூலமற்ற யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு இஸ்ரேல் அழைப்பு விடுத்திருக்கிறது" என்று ஹமாஸ் பேச்சாளர் சமி அபு+ சுஹ்ரி அந்த அமைப்பின் அல் அக்ஸா தொலைக்காட்சிக்கு குறிப்பிட்டார்.
"அவர்களது அழைப்பை நாம் நம்பப்போவதில்லை. மக்கள் கடும் அவதானத்துடன் இருக்கும்படி நாம்; கோருகிறோம்" என்று அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
எனினும் இஸ்ரேலின் பகுதியளவான யுத்த நிறுத்த அறிவிப்புக்கு முன்னர் நேற்றுக் காலை காசா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 16 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இதன்மூலம் கடந்த 29 தினங்களாக காசா மீது நடத்தப்படும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் எண் ணிக்கை 1,822 ஆக அதிகரித்துள்ளது. 10,000க்கும் அதிக மானவர்கள் காயமடைந்துள்ளனர்.
பலஸ்தீன சுகாதார அமைச்சின் அறிவிப்பின்படி கொல் லப்பட்டவர்களில் 401 சிறுவர்கள், 238 பெண்கள் மற்றும் 74 முதியவர்கள் அடங்குகின்றனர். காசாவில் கொல்லப்பட்ட பலஸ் தீனர்களில் 31 வீதமானோர் சிறுவர்களாவர். இவ்வாறு கொல்லப் பட்ட ஒரு வயது முதல் 17 வயது வரையிலான சிறுவர்களில் 243 பேர் ஆண்கள் என்பதோடு 149 பேர் பெண்களாவர்.
இஸ்ரேல் தரப்பில் 66 படையினர் கொல்லப்பட்டிருப்பதோடு மூன்று சிவிலியன்களும் பலியாகியுள்ளனர். இதில் ஒரு தாய்லாந்து நாட்டவரும் அடங்குகிறார்.
இதில் கடந்த இரு தினங்களில் இஸ்ரேல் குண்டு மழை பொழிந்த ரபாஹ் நகரில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை 70க்கும் அதிகமான உடல்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டன. இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் கொல்லப்பட்ட பலஸ்தீனர் 130 ஆக இருந்தது. ரபாஹ்வில் தொடர்ந்து கடும் மோதல் நீடிப்பதால் உயிர்ப்பலியும் அதிகரிக்கும் அபாயம் இருந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை முறிவடைந்த 72 மணிநேர யுத்த நிறுத்தத்தை அடுத்தே இஸ்ரேல் இராணுவம் ரபாஹ்வில் தொடர்ச்சி யாக தாக்குதல் நடத்தி நூற்றுக்கதிகமான பலஸ்தீனர்களை கொன்றது.
இதனிடையே காசாவில் மோதல் நிறுத்தம் ஒன்றுக்கு ஹமாஸ் உட்பட பலஸ்தீன தரப்புகள் ஒன்றிணைந்து நிபந்தனைகள் அடங்கிய கோரிக்கையை மத்தியஸ்தம் வகிக்கும் எகிப்திடம் கையளித்துள்ளது. இந்த நிபந்தனைகளில் காசா மீது தொடரும் முற்றுகையும் விலக்கிக்கொள்ள கோரப்பட்டுள்ளது.
பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் பலஸ்தீன நிர்வாகம் மற்றும் காசாவின் ஹமாஸ் அமைப்புகளை உள்ளடக்கிய பலஸ்தீன பிரதிநிதிகள் கெய்ரோவில் எகிப்து பிரதிநிதிகளை சந்தித்து தமது கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
ஏற்கனவே முன்னிபந்தனையற்ற யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தும் எகிப்தின் முயற்சி தோல்விகண்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment