ஊவா மாகாண சபைத் தேர்தல் - ஹக்கீமும், றிசாத்தும் இணக்கப்பாடு இல்லை
(எம்.ஏ.எம்.நிலாம்)
ஊவா மாகாண சபைத் தேர்தலில் கூட்டாக இணைந்து போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமின் அழைப்புக்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸிடமிருந்து சாதகமான பதில் கிட்டாமையால் முஸ்லிம் காங்கிரஸ் பதுளை மாவட்டத்தில் தனித்துக் களமிறங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.
நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு கூடிய கட்சியின் உயர்மட்டக்குழுவில் இவ்விடயம் நீண்டநேரம் ஆராயப்பட்டதாகவும் பதுளை மாவட்டத்தில் தமது கட்சிக்கு ஆதரவாளர்கள் இல்லாத காரணத்தால் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கட்சி அங்கு போட்டியிடுவதில் ஆர்வம் காட்டவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பதுளை மாவட்டத்திலிருந்து ஒரு முஸ்லிம் உறுப்பினரையாவது வென்றெடுக்கும் நோக்கில் அங்குள்ள முஸ்லிம் பிரமுகர்களுடன் கலந்துரையாடி சுயாதீனக் குழுவாக முஸ்லிம் வேட்பாளர்களை களமிறக்குவது குறித்து ஆராயும் பொருட்டு கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸன் அலி தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், முத்தலிப் பாவா பாரூக் ஆகியோரடங்கிய குழு இன்று பதுளை செல்கிறது.சகல தரப்புகளையும் சேர்ந்த முஸ்லிம் பிரமுகர்கள், அரசியல் சார்ந்தவர்களுடன் இதுகுறித்து கலந்துரையாடப்படவுள்ளது.
இந்த விடயத்திலும் சாதகமான நிலை ஏற்படாது போனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பதுளை மாவட்டத்தில் தனித்துப் போட்டியிட வேட்பு மனுவைத் தாக்கல் செய்யும் என கட்சியின் செயலாளர் நாயகம் ஹஸன் அலி தெரிவித்தார். பதுளை மாவட்டத்தில் முஸ்லிம்களின் வாக்குவங்கி 52 முதல் 55 ஆயிரமாக இருப்பதால் முஸ்லிம்கள் ஒன்றுபட்டுச் செயற்படுவார்களானால் அங்கு முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை தக்க வைத்துக்கொள்ள முடியும் எனவும் ஹஸன் அலி எம்.பி.தெரிவித்தார்.
Post a Comment