Header Ads



பெண்ணை கடத்தி, பேயோட்டிய பௌத்த பிக்கு கைது

Tm

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மாவெடிவேம்பு கிராமத்தைச் சேர்ந்த அரசாங்க ஊழியரான குடும்பப் பெண்ணைக் கடத்தி, கண்ணைக் கட்டி பேயோட்டினார் என்ற முறைப்பாட்டின் அடிப்படையில் பௌத்த பிக்கு ஒருவரையும் அவரது துணையாட்கள் மூவரையும் கைது செய்திருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் இன்று 03-08-2014 ஞாயிறுக்கிழமை பிற்பகல், பொலன்னறுவை மாவட்டம் வெலிக்கந்தைப் பொலிஸ் பிரிவிலுள்ள விகாரை ஒன்றிலிருந்த வேளையில் கைது செய்யப்பட்டு, ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரான பிக்குவையும் அவரது துணையாட்களையும் நாளை திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் கூறினர்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகம் ஒன்றில் கடமையாற்றும் மேற்படி பெண்ணைக் கடத்தி, வெலிக்கந்தையிலுள்ள விகாரைக்கு கொண்டு சென்ற பின்னர், அவரது கண்களைக் கட்டிய நிலையில் அவரை மரத்தில் கட்டி வைத்து பேயோட்டினர் என்று சம்பந்தப்பட்ட பெண் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் கடத்திச் செல்லப்பட்ட பெண், நேற்றுப் பகல் முச்சக்கர வண்டியொன்றில் கொண்டு வரப்பட்டு, வாழைச்சேனையில் இறக்கிவிடப்பட்டுள்ளார். அதன் பின்னர் அந்தப் பெண்ணே நேரடியாக ஏறாவூர் பொலிஸ் நிலையம் வந்து தனக்கு நடந்த கதி பற்றி முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே சந்தேக நபர்களான பிக்குவும் அவரது துணையாட்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் கூறினார்.

தனக்குப் பேய் எதுவும் பிடித்திருக்கவில்லை என்றும் தான் பூரண சித்த சுவாதீனம் உடையவர் என்றும் கூறியுள்ள இப்பெண், குடும்பத் தகராறு காரணமாக கணவனிடமிருந்து விவாகரத்துக் கோரி வழக்குத் தாக்கல் செய்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

1 comment:

  1. பிக்குகளின் தொல்லை தாங்கமுடியல. இதுக்கு மொத்த காரணம் தம்பியின் அடாவடித்தனம்தான். இதெற்கெல்லாம் சேர்த்து வரும் தேர்தலில் பெளத்தர்கள் ஆப்பு வைப்பார்களா? அல்லது 5 இக்கும் 10 இக்கும் தலைசாய்ந்துவிடுவார்களா?

    ReplyDelete

Powered by Blogger.