கல்கமுவ சிறுவன் கடத்தல் காரர்களிடமிருந்து மீட்கப்பட்டதன் முழுவிபரம்..!
(எம்.ஏ.எம்.நிலாம்)
காணாமல் போன கல்கமுவ கிராமத்தைச் சேர்ந்த தினிந்து யசேன் ஏக்கநாயக்க என்ற 4 வயது சிறுவனை மீட்பதற்கு சூட்சுமமான வழியைக் கையாளும் பொருட்டே கப்பத் தொகை குறைப்பதற்கு பேரம் பேசி காலம் கடத்தியதாகவும் அதற்கிடையில் ஒரு பெண்ணிடமிருந்து கிடைத்த தொலைபேசித் தகவலின் அடிப்படையில் கல்கமுவ அபோகம பிரதேசத்தில் வைத்து சிறுவனை பாதுகாப்பாக மீட்டெடுத்ததாகவும், சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார். வியாழக்கிழமை இரவு குழந்தை மீட்டெடுக்கப்பட்ட பின்னர் நேற்று சனிக்கிழமை பிற்பகல் கொழும்பில் நடத்தப்பட்ட விஷேட செய்தியாளர் மாநாட்டில் மீட்டெடுக்கப்பட்ட குழந்தையும், தந்தையான மகிந்த குமார ஏக்கநாயக்கவும் வந்திருந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் விளக்கமளித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்ததாவது,
இந்தக் குழந்தை இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேரால் கடத்தப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை இரவு குழந்தையின் பாட்டனின் கழுத்தில் கத்தியைவைத்து கொலை செய்வதாக அச்சுறுத்திய பின்னர் அவரை கட்டிப்போட்டு குழந்தையை கடத்திச் சென்றுள்ளனர். அதன் பின்னர் செவ்வாய்க்கிழமை முதல் பிள்ளையை மீளத்தருவதற்கு ஒரு கோடி ரூபா கப்பமாக பிள்ளையின் தந்தையையும், பாட்டனையும் கேட்டிருக்கின்றனர். கல்கமுவ பொலிஸாருடன் சேர்ந்து பிள்ளையை பாதுகாப்பாக மீட்கும் பணிக்காக இரகசிய பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் குழுவொன்றும் அனுப்பப்பட்டது. கடத்தப்பட்ட குழந்தை தொடர்பான தகவல்களைத் தருவதற்கு இரண்டு தொலைபேசி இலக்கங்களை நாம் ஊடகங்களுக்கு வழங்கியிருந்தோம். இதனிடையே பொலிஸ் குற்றத்தடுப்புப்பிரிவும் தனியான விசாரணையை முடுக்கிவிட்டது.
கப்பம் கோரி அழைப்புவிடுக்கப்பட்ட ஒரு தொலைபேசி இலக்கம் தொடர்பில் எமக்குச் சந்தேகம் ஏற்பட்டு அதனைத் துருவி ஆராய்ந்த போது அது ஒரு பெண்ணுடையது என்பது தெரிய வந்தது. உடனடியாக பொலிஸார் அந்தப் பெண்ணை கைது செய்து விசாரித்தபோது, பிள்ளையை கடத்திய நான்கு பேரில் ஒருவனது காதலியே அவர் என்பது தெரியவந்தது. அந்தப் பெண்ணைப் பயன்படுத்தியே பொலிஸார் தேடுதல் பணியை முடுக்கிவிட்டனர். முதலில் பாதுகாப்பாக மீட்பதற்கு கால அவகாசத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டோம். இதன்படி ஒரு கோடி ரூபா கப்பத் தொகையை குறைக்கும் பேரத்தில் இறங்கினோம். படிப்படியாக கப்பத் தொகையை குறைத்து 35 இலட்சம் ரூபாவை பெற இணங்கச் செய்துகொண்டோம். கப்பத் தொகையை தருவதற்காக பிள்ளை உயிருடனிருப்பதை உறுதிப்படுத்துமாறு கேட்கப்பட்டபோதே, எஹட்டுவௌ வீதியின் ஒதுக்குப்புறமான இடத்தில் காணப்படும் சிலைக்கருகில் வந்து பார்க்குமாறு கேட்கப்பட்டோம்.
அங்கு சென்று பார்த்தபோது தினிந்துவின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த தாயத்து அவ்விடத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து இரகசிய பொலிஸார் ஊர்ஜிதமாகச் செயற்பட்டு பிள்ளையின் உறவினர்களுடன் தொடர்புகொண்டு தொலைபேசி தொடர்புகளை செவிமடுத்து 12 மணி நேரத்துக்கிடையில் அவர்களிருந்த வீட்டை சுற்றிவளைத்து மிகவும் பாதுகாப்பாக தினிந்துவை மீட்டெடுக்க முடிந்ததோடு, தப்பியோட முயற்சித்த நான்கு சந்தேக நபர்களையும் பொலிஸார் மடக்கி பிடித்ததாகவும் அஜித் ரோஹண தெரிவித்தார். இதேவேளை தினிந்துவின் தகப்பனார் மகிந்த குமார ஏக்கநாயக்க ஊடகவியலாளர்களிடம் பேசுகையில்;"எனது பிள்ளையை மீட்டெடுக்க குடும்பச் சொத்துகள் அனைத்தையும் இழக்கத் தயாராக இருந்தோம். ஆனால், ஒரு செப்புக்காசு கூட கப்பமாக கொடுக்காமல் பிள்ளையை மீட்டெடுத்த பொலிஸாருக்கு நாம் நன்றி தெரிவிக்கின்றோம். பிள்ளையை மீட்பதற்காக ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி கூறுகின்றோம். இரகசியப் பொலிஸாரின் பணியை மெச்சுகின்றேன். எம்மிடம் வாக்குமூலம் மட்டுமே அவர்கள் பெற்றுக்கொண்டனர். எமது குடும்பம் இன்று மகிழ்ச்சியில் இருக்கின்றது. இந்த விடயத்தில் பொலிஸாரைதான் கடவுளாக மதித்து வணங்குகின்றேன்'எனவும் தெரிவித்தார்.
Nalla visayamthaan thanks for sri lankan police. ... aanaal oru samoohathin visyathil koattai vittu vitteengale.... azuzaan romba kavalayaaha irukku.... pillayin thaay thahappanai alari maalihaiku varvalaithu visaaricheenga oru kiraamathai azhithuvittu annan thambi mahan ellaam enna seyzeenga. .. allaah irukkiraan. .. pirazipalanai ezirpaarhu irunga. ..vattiyum muzalumaaha kidaikkum. . Yaa Allah aniyaayakkaararhalai. .neeye adakkiwaippaayaaha. ...unnaithavira engalukku thunai verillai naayane. ...naam unnaiyye vananguhirom unnidame paazuhaaval theduhirom. ...
ReplyDelete