அலுத்கம முஸ்லிம்களே இராணுவ முகாமை கோரினர் - இராணுவ ஊடகப் பணிப்பாளர்
அலுத்கம முஸ்லிம் மக்கள் இராணுவ முகாம் ஒன்றை கோரி வருவதாக இராணுவம் தெரிவித்துள்ளது. மக்களின் கோரிக்கைக்கு அமைவாக தற்காலிக அடிப்படையில் அலுத்கம பிரதேசத்தில் இராணுவ முகாமொன்றை அமைக்க உள்ளதாக இராணுவ ஊடகப் பணிப்பாளர் ஜயனாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.அண்மையில் இடம்பெற்ற வன்முறைகளினால் அலுத்கம மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் ஏற்பட்ட சேதங்களை புனரமைக்கும் பணிகளில் படையினர் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். புனரமைப்பு பணிகள் பூர்த்தியாகும் வரையில் படையினர் அலுத்கமவில் தங்கியிருப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.சிறு சேதங்களுக்கு உள்ளான வீடுகள் கட்டடங்கள் சொற்ப காலத்தில் புனரமைக்கப்பட உள்ளதாகவும் பாரியளவில் பாதிக்கப்பட்ட வீடுகள் கட்டடங்களை புனரமைக்க சில காலம் தேவைப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், அலுத்கமவில் நிறுவப்பட்ட இராணுவ முகாம் தற்காலிகமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இராணுவ தந்திரோபாயங்களின் அடிப்படையிலேயே நாட்டில் நிரந்தர இராணுவ முகாம்கள் அமைக்கப்படும் எனவும், அலுத்கம முகாம் தற்காலிகமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment