'வாழ்நாளில் பார்த்த பயங்கரமான காட்சி'
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து 160 கி.மீ. தொலைவில் ஷோவால் ஹவென் உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகின்றது. பள்ளி விடுமுறை நாளான இன்று அந்த பூங்காவில் பார்வையாளர்களின் வருகை அதிகமாக இருந்தது. இவர்கள் முன்னிலையில் அங்கிருந்த 12 அடி நீளமுள்ள ஜான் என்ற ஆண் முதலைக்கு அதன் பயிற்சியாளர் டிரென்ட் பர்டன் இறைச்சித் துண்டுகளை உணவாக அளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது யாரும் எதிர்பாராத விதமாக உணவுடன் அவரது கையையும் கவ்விய முதலை அவரையும் இழுத்துக் கொண்டு தண்ணீரில் நீந்தத் துவங்கியது. இதனை நேரில் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். சிறிது நேரத்தில் முதலையின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட ஜான் நீந்தி கரைக்கு வந்தார்.
அவரது இரண்டு கைகளிலும் முதலை கவ்விய காயங்கள் இருந்தன. உயிருக்கு ஆபத்தில்லாத போதிலும் கைகளில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று உள்ளூர் செய்திப் பத்திரிகை தெரிவித்துள்ளது. இந்தக் காட்சியை நேரில் கண்ட மர்லீன் ஓர் என்ற முதியவர் வாழ்நாளில் தான் பார்த்த பயங்கரமான காட்சி இது என்று குறிப்பிட்டார். பயிற்சியாளர் உணவைக் கொடுப்பதற்குள் முதலை தானாகவே அவரது கைகளில் இருந்து அதனை எடுத்துக் கொண்டது.
அந்த உணவை முதலையின் வாயிலிருந்து மீண்டும் எடுக்க பயிற்சியாளர் முயற்சித்தார். அதனால் முதலை அவரது கையையும் சேர்த்து இழுத்திருக்கக்கூடும் என்று மற்றொரு பார்வையாளரான மிச்சேல் பிராடி கூறினார். பத்து வருடங்களுக்கும் மேலாக பர்டன் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், ஜானுக்கான உணவினை அவர்தான் தினமும் அளித்து வருவதாகவும் பூங்கா உரிமையாளர் நிக் சில்கோ தெரிவித்தார்.
உயிருக்கு ஆபத்தில்லை என்றபோதிலும் இந்தத் தாக்குதல் தீவிரமானது என்று கூறிய அவர் இது நடந்த விதம் குறித்து ஆராயப்படும் என்றும் குறிப்பிட்டார்.
Post a Comment