விமானத்தினுள் திடீர் நீர்க்கசிவு
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த QF94 என்ற எண் கொண்ட குவாண்டாஸ்-ஏ380 என்ற இரண்டடுக்கு சூப்பர் ஜெட் ஜம்போ விமானம் ஒன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திலிருந்து மெல்போர்னுக்கு நேற்று கிளம்பியது. விமானம் பறக்கத்துவங்கிய ஒரு மணி நேரத்திற்கெல்லாம் விமானத்தின் மேல்புறத்தடுப்புகளில் இருந்து நீர் கசியத் தொடங்கியது. வெகு விரைவில் அதிகரித்த அந்த நீர்க்கசிவானது மேல் அடுக்கிலிருந்து கீழே வரும் படிக்கட்டுகளில் வழிந்து வரத் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து விமானத்தின் மத்திய வரிசைகளிலும், பின்புற வரிசைகளிலும் இருந்த பயணிகள் அனைவரும் பயத்தில் எழுந்து குதிக்கத் தொடங்கிவிட்டனர். இந்த நீர்க்கசிவு குறித்து கவலைப்பட ஏதுமில்லை என்று குறிப்பிடப்பட்டபோதும் பயணிகளின் விருப்பம் கருதி விமானி புறப்பட்ட இடத்திற்கே விமானத்தைத் திருப்பினார்.
விமானத்தில் இருந்த ஊழியர் குழு பயணிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்தனர். பாதிக்கப்படாத இடங்களுக்கு அவர்களை மாற்றி அவர்கள் உலர்வாக இருப்பதற்குத் தேவையான அதிகப்படி போர்வைகளையும் பயணிகளுக்கு ஊழியர்கள் வழங்கினர் என்று விமான நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்தத் தவறு ஏற்பட்டதற்கான காரணத்தை ஆராயுமாறு ஏர்பஸ் தொடர்பு அதிகாரியிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் பொறியாளர்கள் விமானத்தின் பிரச்சினையை சரி செய்வதில் ஈடுபட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டது.
பயணிகள் அனைவரும் நேற்று இரவு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். முதலில் ஆரம்பித்த நீர்க்கசிவு தொடர்ந்து பெரிய நீர்ப்பெருக்காக மாறியது மிகவும் பயங்கரமான காட்சியாக இருந்தது என்று அந்த விமானத்தில் பயணித்த ஹாலிவுட் நடிகை நிக்கோல் யுவேட் பிரௌன் கூறினார். முதலில் துளித் துளியாக சிந்தியதைப் பார்த்தபோது பயணிகளில் யாரோ கையிலிருந்த குளிர்பானத்தை சிந்திவிட்டது போலவே தோன்றியது. அதன்பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்த அந்த நீர்ப்பெருக்கு விமானத்தின் நடைபாதையில் ஒரு ஆறு ஓடுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது என்று தொலைக்காட்சி காமெடி நட்சத்திரம் ஒருவர் குறிப்பிட்டார்.
Post a Comment