சிரியாவின் பெரிய எண்ணெய் வயலை ஐ.எஸ்.ஐ.எஸ். படை கைப்பற்றியது
வடக்கு சிரியாவில் ஈராக் எல்லையோரம் பல பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, அப்பகுதி முழுவதையும் ஒன்றிணைத்து தங்களது அரசாட்சிக்கு உட்பட்ட தனிநாடாக அறிவித்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் சிரியாவின் பெரிய எண்ணெய் வயல் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.
ஈராக் மற்றும் சிரியாவில் அரசுப் படைகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் போராளிகள் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ். என்பது ‘இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அன்ட் சிரியா’ என்ற ஆங்கில வார்த்தையின் சுருக்கம் ஆகும்.
ஈராக்கையும், சிரியாவின் ஒரு பகுதி மற்றும் துருக்கியின் ஒரு பகுதி ஆகியவற்றையும் இணைத்து தனி இஸ்லாமிய நாட்டை உருவாக்குவது இவர்களது திட்டமாகும். இதுமட்டுமல்லாமல் எதிர்காலத்தில் பக்கத்து நாடான லெபனான், பாலஸ்தீனம், இஸ்ரேல், ஜோர்டான், துருக்கி ஆகிய நாடுகளையும் ஒன்றிணைத்து பெரிய அளவிலான இஸ்லாமிய தேசத்தை உருவாக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
2003–ம் ஆண்டு ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்தபோது சில அரபு நாட்டினர் சேர்ந்து இந்த படையை உருவாக்கினார்கள். அப்போது பெயரளவுக்கு தான் இது செயல்பட்டு வந்தது.
ஆனால் 2006–ம் ஆண்டுக்கு பிறகு இது தீவிரமாக செயல்பட ஆரம்பித்தது. சிரியா போருக்கு பிறகு இந்த படையில் ஏராளமானோர் சேர்ந்தனர். தற்போது 11 ஆயிரம் பேர் படையில் உள்ளனர். அதில் 6 ஆயிரம் பேர் ஈராக்கில் போரிட்டு வருகிறார்கள். 5 ஆயிரம் பேர் சிரியாவின் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு உள்ளனர்.
இவர்களுக்கு பின்னணில் 15 ஆயிரம் பேர் வரை படையில் சேருவதற்கு தயாராக உள்ளனர். விரைவில் 60 ஆயிரம் பேரை சேர்த்து பெரும் படையை உருவாக்கவும் இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
சிரியா மற்றும் ஈராக்கில் பாங்கி மற்றும் பல்வேறு இடங்களில் ரூ.12 ஆயிரம் கோடி பணம் இவர்களிடம் உள்ளது. இதை வைத்து பெரும் படையை உருவாக்கி வருகிறார்கள். ஒவ்வொரு வீரருக்கும் மாதம் ரூ.36 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
அரபு நாடுகள் பலவற்றில் சன்னி முஸ்லிம்கள் அதிக அளவில் உள்ளனர். அவர்களும் இவர்களுக்கு பண உதவி செய்து வருகிறார்கள். இந்த படையின் தலைவராக அபுபக்கர் அல் பகாதி செயல்பட்டு வருகிறார். வடக்கு சிரியாவில் ஈராக் எல்லையோரம் பல பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் அப்பகுதி முழுவதையும் ஒன்றிணைத்து ஐ.எஸ்.ஐ.எஸ்.-சின் ஆட்சிக்கு உட்பட்ட தனிநாடாக அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஓர் அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்ட அந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் அபு முஹம்மத் அல் அதானி, வடக்கு சிரியாவில் இருந்து ஈராக்கின் டியாலா மாகாணம் வரை உள்ள நிலப்பரப்பு முழுவதும் ஐ.எஸ்.ஐ.எஸ்.-ன் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகவும், இந்நிலப்பரப்பின் 'கலிபா’வாக (மன்னர்) ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் தலைவரான அபு பக்ர் அல் பக்தாதி விளங்குவார் என்றும் அறிவித்துள்ளார்.
இப்பகுதிக்குள் கலிபாவின் படைகள் நுழைந்த நேரத்தில் இருந்து, முந்தைய ஆட்சியாளர்களின் அதிகாரம் காலாவதியாகி விட்டதாகவும், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் புதிய கலிபாவுக்கு விசுவாசமாகவும், ஆதரவாகவும் இருக்க வேண்டும் எனவும் அந்த ‘ஆடியோ அறிக்கை’ குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த புதிய ஆட்சி அமைக்கப்பட்டதால் ‘இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அன்ட் சிரியா’ (ஐ.எஸ்.ஐ.எஸ்.) என்ற தங்கள் அமைப்பின் பெயர் ‘இஸ்லாமிக் ஸ்டேட்’ என்று மாற்றப்பட்டுள்ளதாகவும் அந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் அபு முஹம்மத் அல் அதானி அறிவித்தார்.
இதை உலகின் எந்த நாடும் அங்கீகரிக்காத நிலையில், இன்று அந்த இயக்கத்தின் தலைவர் அபு பக்ர் அல் பக்தாதி ஒரு ஆடியோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களுக்கு அவரே தலைவர் என்றும், ஜிஹாத் என்னும் புனிதப் போரை நடத்த ஆயுதமேந்தி தனது ஆட்சிக்கு உட்பட்ட பகுதிக்கு திரண்டு வருமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
மத்திய ஆப்பிரிக்காவில் இருந்து பர்மா வரை இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு பழிதீர்க்கும் வகையில் முஸ்லிம்கள் புனிதப் போருக்கு தயாராக இருக்கும்படியும் அந்த ஆடியோவில் பேசியுள்ளார்.
மேலும், இந்த அமைப்பினர் தங்களது அரசாட்சிக்கு உட்பட்ட பகுதி என்று அறிவித்துள்ள சிரியாவின் ரக்கா நகரின் வீதி வழியே ஒரு ராணுவ வாகனம் ‘ஸ்கட்’ ரக ஏவுகணையை ஏற்றிச் செல்லும் புகைப்படமும் ஐ.எஸ்.ஐ.எஸ். இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தங்களது ஆயுத பலத்தை காட்டி உலக நாடுகளுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு மிரட்ட நினைப்பதாக சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இதற்கிடையே, ஈராக்-சிரியா இடையிலான டெய்ர் அல் ஸவ்ர் எல்லையோரம் உள்ள புகமால் என்ற நகரையும் கைப்பற்றிய ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர், கிழக்கு சிரியாவில் உள்ள எண்ணெய் வயல் ஒன்றினையும் நேற்று கைப்பற்றி தங்கள் வசமாக்கியுள்ளனர்.
கிழக்கு சிரியாவின் டெய்ர் அல் ஸவ்ர் பகுதியை ஒட்டியுள்ள அல்-உமர் எண்ணெய் வயலை கைப்பற்றுவதில் நுஸ்ரா குழுவினருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இந்த சூழ்நிலையில் நாள் ஒன்றுக்கு 75 ஆயிரம் பேரல்கள் கச்சா எண்ணையை உற்பத்தி செய்யும் இந்த வயலினை ஐ.எஸ்.ஐ.எஸ். கைப்பற்றியுள்ளதாக சிரியாவில் உடுள்ள பிரிட்டைன் நாட்டின் மனித உரிமை கண்காணிப்பக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட எண்ணெய் வயலில் ஒரு எரிவாயு தயாரிப்பு தொழிற்சாலை, மின்சார உற்பத்தி நிலையம் ஆகியவையும் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
Post a Comment