அமைச்சர் பஸீர் சேகுதாவுத் அரசாங்கத்துக்கு வெள்ளையடிக்கிறார் - பிரபா கணேசன்
இந்தியாவில் இந்துக்களின் தீவிரவாதம் இருப்பதாகவும் அதை சிங்கள பௌத்த தீவிரவாதத்துடன் அமைச்சர் பஸீர் சேகுதாவுத் சம்பந்தப்படுத்தியிருப்பது வேதனைக்குரிய விடயமாகும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
இதே வேளை, இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான தீவிரவாதத்திற்கு சிறுபான்மையினரான நாம் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;
நானும் அமைச்சர் பஸீர் சேகுதாவுத் நாடாளுமன்றத்தில் பலதர விடயங்களை அலசி ஆராய்ந்து பேசி வருவதுண்டு. அவரது முன்மாதிரியான கருத்துக்கள் என்னை கவர்ந்தும் உள்ளன. இருப்பினும் இந்தியாவில் இன்று ஹிந்துத்துவ அடிப்படைவாத சிந்தனை தோற்றம் பெற்றுள்ளதாகவும் ஹிந்துத்துவ அரசு ஆட்சியில் ஏறி இருப்பதாகவும் இந்தியாவில் ஹிந்து தீவிரவாதம் கொழுந்து விட்டு எரிவதாகவும் அவர் ஊடகங்களில் தெரிவித்திருப்பதற்கு வேதனையுடன் பதிலளிக்க விரும்புகின்றேன்.
இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான செயல்பாடுகள் இருந்தாலும் கூட இந்திய அரசாங்கம் ஒரு போதும் முஸ்லிம் மக்களுக்கு பாதுகாப்பை வழங்க தவறியதில்லை. குறிப்பாக தமிழ் நாட்டில் வாழும் முஸ்லிம் மக்கள் மத ரீதியாக தங்களை இஸ்லாமியர்கள் என்று தெரிவித்தாலும் மொழி ரீதியாக தமிழர்கள் என்றே அடையாளங் காட்டிக் கொள்கின்றார்கள். ஆனால் இலங்கையில் வாழும் இஸ்லாமியர்கள் தங்களை தமிழர்கள் என்று ஒரு போதும் ஏற்றுக் கொள்வதில்லை. இதனால் தான் சிறுபான்மை மக்களிடையே பிளவுகள் ஏற்பட்டு முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள பௌத்த தீவிரவாதம் தலை தூக்கியுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திரமோடி அரசாங்கத்தின் மூலமாக தமிழ் மக்கள் தீர்வினை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் அவரது அரசாங்கத்தை முஸ்லிம்களுக்கு எதிரான ஹிந்துத்துவ தீவிரவாத அரசு என்று தெரிவித்து இந்தியா அரசு மூலம் தமிழ் மக்கள் எதிர்ப்பார்க்கும் தீர்வினை முஸ்லிம் மக்களுக்கு எதிரானது என்று காட்ட முயற்சிக்கின்றாரா என்று தெரியவில்லை.
அரசாங்க கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அரச பங்காளி கட்சிகளான ஹெல உறுமய தேசிய சுதந்திர முன்னணி கட்சித் தலைவர்கள் அமைச்சர்களாகிய ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன் ஆகியோர் முன்னிலையில் சிங்கள பௌத்த தீவிரவாதத்தை வெளிப்படுத்தியதை நான் கண்கூடாக பார்த்தேன்.
இருப்பினும் இப்படியான பங்காளிகளை கொண்டிருக்கும் இந்த அரசும் ஒரு சிங்கள பௌத்த தீவிரவாத அரசே இதனை சொல்வதை விடுத்து சிங்கள பௌத்த தீவிரவாதிகளின் பாரிய சவாலை சந்திக்க வேண்டிய அரசு என்று கூறி அரசாங்கத்தை திருப்திபடுத்த முனைவது பிழையான விடயமாகும். அரசாங்கத்துக்கு வெள்ளையடிப்பதற்காக இந்தியாவையும் இவ்விடயத்தில் நுழைத்து ஹிந்து தீவிரவாதம் என்று பேசியிருப்பது இந்து முஸ்லிம் மக்களிடையே பிளவினை ஏற்படுத்தி விடாதா என்று கேட்க விரும்புகின்றேன்.
என்னைப் பொறுத்தவரையில் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த தமிழர்களாகிய நாங்கள் சிங்கள கிறிஸ்தவர்களுடன் இணைந்து சிங்கள பௌத்த தீவிரவாதத்திற்கு எதிராக குரல் கொடுப்பதன் மூலமாகவே இத்தீவிரவாதத்தை இல்லாதொழிக்க முடியும் என இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துக்கு அவர் வெள்ளையடிக்காமல் போனால் அரசாங்கம் அவரோட பதவிக்கு காவி அடிச்சிடும்.
ReplyDeleteநக்குண்டார் நாவிழந்தார்
ReplyDelete