Header Ads



இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு தொடருகிறது - காஸாவில் மருந்து பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு

இஸ்ரேல், காசா மீது தாக்குதல் நடத்தியதில் கிட்டத்தட்ட 78 பாலஸ்தீனியர்கள் இறந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள். இதற்கு எதிராக காசா போராளிகள் டெல் அவிவ், ஜெருசலேம் உட்பட பிற நகரங்களில் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்த மேற்கொண்டுள்ளனர்.

மேலும் இந்தப் பகுதியில் செயல்பட்டுவரும் மருத்துவமனைகள் மருந்துகள் பற்றாக்குறையாலும், எரிபொருள் பற்றாக்குறையாலும் அவதிப்பட்டு வருவதாக உலக சுகாதாரக் கழகம் நேற்று எச்சரித்துள்ளது. சமீபத்தில் அதிகரித்துவரும் வன்முறையினால் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய எல்லைப்பகுதியில் அதிகரித்துவரும் மருத்துவத் தேவைகளைச் சமாளிக்க முடியாமல் சுகாதார அமைச்சகமும், அரசு நிர்வாகமும் தடுமாறி வருகின்றன என்று டபிள்யுஎச்ஓ குறிப்பிட்டுள்ளது.

இதுமட்டுமின்றி மின்பற்றாக்குறையால் ஜெனரேட்டர்கள் இயக்கப்படுவதற்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு 10 நாட்களுக்கு மட்டுமே வரும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல் மருந்துகள் பெற்றதற்கான கடன்தொகை 250 மில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளதால் தேவைப்படும் மருந்துகளைக் கையிருப்பில் வைத்துக் கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதையும் பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் அகதிகள் முகாமில் செயல்பட்டுவரும் மருத்துவமனை, மூன்று கிளினிக்குகள் மற்றும் உப்பு நீரை சுத்தப்படுத்தும் மையம் ஆகியவையும் இந்தத் தாக்குதல்களில் சேதமடைந்துள்ளதாக டபிள்யுஎச்ஓ குறிப்பிட்டுள்ளது. இதனால் தேவையான மருந்துகளைப் பெற உலக நன்கொடையாளர்களிடம் 40 மில்லியன் டாலர் நிதியுதவியும், காசா மற்றும் வெஸ்ட் பாங்க் பகுதிகளில் இருந்துவரும் கான்சர் நோயாளிகளைக் கவனித்துக் கொள்ளும் கிழக்கு ஜெருசலேம் மருத்துவமனைகளுக்கு அளிப்பதற்காக 20 மில்லியன் டாலர் நிதியுதவியையும் சுகாதாரக் கழகம் கேட்டுள்ளது.

இதுபோன்ற நிலைமை கடந்த 2008-2009-ம் ஆண்டுகளிலும், 2012-ம் ஆண்டிலும் காசாவில் ஏற்பட்டதாகக் கூறும் டபிள்யுஎச்ஓ பிராந்திய இயக்குனரான டாக்டர் அலா அல்வன் தற்போது வெஸ்ட் பாங்க் பகுதியும் இதுபோன்ற நெருக்கடியில் சிக்கியுள்ளதாகத் தெரிவிக்கின்றார்.

No comments

Powered by Blogger.