Header Ads



பிரதமரும், ரவூப் ஹக்கீமும் தெரிவிக்கும் கருத்துக்களில் முரண்பாடுகள் - பாராளுமன்றத்தில் ரணில்

அளுத்கம, பேருவளை பிரதேசங்களில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பாக பிரதமர் மற்றும் நீதியமைச்சர் ஆகியோர் வெளியிடும் கருத்துக்களில்  பரஸ்பரம் முரண்பாடுகள் காணப்படுகின்றன என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று சபையில் தெரிவித்தார்.

அசம்பாவிதங்களால் மன விரக்தியடைந்த இதயங்களை  ஆறுதல்படுத்த எவ்விதமான திட்டங்களையும் அரசு முன்னெடுப்பதை காண முடியவில்லை. நஷ்ட ஈடு வழங்குவதிலும் அசமந்த போக்கையே கடைப்பிடிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அளுத்கம சம்பவத்தை முன்வைத்து 23 இன் கீழ் இரண்டில் விசேட கூற்றொன்றை  முன்வைத்து வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார். 

சபையில் எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இன்றும் தீச்சுவாலை அணையாது  நிலையான தீர்வு கிடைக்காத அளுத்கம, பேருவளை சம்பவங்கள் தொடர்பாக நாட்டில் பல்வேறு  தரப்பினரும் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

ஒருவருக்கொருவர் விரலை நீட்டி ஒவ்வொரு இனத்தவர்கள் மீது குற்றங்களை சுமத்துவதனால் இந்நிலைமைக்கு தீர்வுகாண முடியாது. இது பல்வேறு குழுக்களால் வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்ட கறுப்பு ஜூலையாகும். இதனால் சிங்கள பௌத்தர்கள் மற்றும் பௌத்தகுருமார் அபகீர்த்திக்கு உள்ளாக்கப்பட்டனர். 

சிறுகுழுவொன்று பலமுள்ளவர்களின் ஒத்துழைப்புடன் ஏற்படுத்திய குரோதத்தனமான தீச்சுவாலையால் பல்வேறு இனக்குழுமங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிங்கள பௌத்தர்களின் கீர்த்திக்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது. 

இது முஸ்லிம்களுக்கு எதிராக மட்டும் கட்டவிழ்த்துவிடப்பட்ட அசம்பாவிதமென கூற முடியாது. சிங்கள பௌத்தர்களுக்கு எதிராகவும் ஏற்படுத்தப்பட்ட அசம்பாவிதமாகும். 

இந்நிலைமையை அமைதிப்படுத்த வேண்டுமானால் மோதல்களால் மன வேதனையடைந்துள்ள மனங்களை ஆசுவாசப்படுத்த வேலைத்திட்டமொன்று  அவசியமாகும்.

ஆனால் அரசிடம் அவ்வாறானதோர் நிலையை நாம் காணவில்லை.

இதுவரை கிடைத்துள்ள தகவல்களுக்கமைய 256 வீடுகளுக்கு முழுமையான அரைவாசி மற்றும் சிறு அளவில் சேதமாக்கப்பட்டுள்ளது. 134 வர்த்தக நிலையங்களும் இவ்வாறு சேதமடைந்துள்ளன. எனவே, பிரதமரிடம்  இக்கேள்விகளுக்கான பதிலை எதிர்பார்க்கின்றேன்.

மரணங்கள் மற்றும் சேதங்கள் தொடர்பில் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா? சேதமடைந்த வீடுகள் வர்த்தக நிலையங்கள் தொடர்பான அறிக்கைகள் சரியானதா? அவை தொடர்பில் தனித்தனியான தெளிவுபடுத்தல்கள் தேவை. இது தொடர்பில் நஷ்ட ஈடு வழங்குவதற்கான திட்டங்கள் என்ன? 
சேதமடைந்த தொழிற்சாலைகளை துரிதமாக மீளக்கட்டியெழுப்புவதற்கு எடுக்கப்படவுள்ள திட்டங்கள் என்னவென்றும் எதிர்க்கட்சித் தலைவர் சபையில் கேள்வியெழுப்பினார்.

No comments

Powered by Blogger.