ஈராக்கின் இரசாயன ஆயுதத் தளம் ஐசிஸ் கட்டுப்பாட்டில்
பயன்பாட்டில் இல்லாத ஈராக்கின் இரசாயன ஆயுதங்கள் உற்பத்தி தொழிற்சாலை ஐசிஸ் தலைமையிலான சுன்னி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக ஈராக் அரசு உறுதி செய்துள்ளது.
இது குறித்து ஈராக் அரசு ஐ.நா. சபைக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், இரசாயன ஆயுதங்களை அழிக்கும் கடப்பாட்டை தொடர்ந்து கடைப்பிக்க முடியாத நிலையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. கொடிய இரசாயன ஆயுதங்கள் நிரப்பப்பட்ட ரொக்கெட் எச்சங்கள் இருக்கும், தலைநகர் பக்தாதில் இருந்து வடமேற்காக உள்ள முதுன்னா வளாகமே கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டில் உள்ளது.
எனினும் இந்த ஆயுதங்கள் வலுவிழந்தவை என்று குறிப்பிட்டிருக்கும் ஐ.நா. மற்றும் அமெரிக்கா, இதனைக்கொண்டு இரசாயன ஆயுதங்களை பயன்படுத்த முடியாது என்று உறுதி அளித்துள்ளன.
கடந்த ஜ_ன் 11 ஆம் திகதி இந்த ஆயுத உற்பத்தி நிலையத்தை சுன்னி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதாக ஈராக்கிற்கான ஐ.நா. தூதுவர் மொஹமத் அலி அல்ஹகிம், ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் இருந்து ஒரு சில உபகரணங்கள் கடத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐசிஸ் என அழைக்கப்படும் ஈராக் இஸ்லாமிய தேசம் கிளர்ச்சியாளர்கள் கடந்த ஒரு மாதத்திற்குள் ஈராக்கின் கணிசமான நிலப்பகுதியை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment