Header Ads



'பாஸ்ட் பூட்' குழந்தைகளை மந்தம் ஆக்குதா..?

‘நிலா வேணுமா?’
‘இப்பவே...’ 
‘சூரியனை தொட்டுப் 
பார்க்கணுமா?’ 
‘ஆமா, உடனே...’ 
இப்படி ஆரம்பிக்கும் குழந்தைகளின் அடம், கொஞ்சம் வளர்ந்த தும் உணவுப்பழக்கத்தில் அடாவடி யாகிறது. வெளியில் கிளம்பும் போதே கற்பனையான  ஃபாஸ்ட் ஃபுட் வாசனை அவர்கள் நாசியில் நுழைந்து ‘டெம்ப்டேஷன்’ ஏற்படுத்தி விடுகிறது. ‘இன்னிக்கு ஃபிரைடு ரைஸ்’, ‘நாளைக்கு நூடுல்ஸ், தந்தூரி  சிக்கன்’ என லிஸ்ட் போட்டு விடுகிறார்கள். கூடவே சாஃப்ட் டிரிங்ஸ்! மசாலா காரமும் கார்பனேட்டட் டிரிங்ஸ் வீரியமும் சேர்ந்த வித்தியாச  அனுபவத்துக்காகவே குழந்தைகள் அவுட்டிங் போக ஆசைப்படுகிறார்கள்.  

‘‘ஃபாஸ்ட் ஃபுட் ஆரோக்கியத்தின் எதிரி... இது தெரிந்திருந்தாலும் குழந்தைகளின் அடம் பெற்றோரைப் பணிய வைக்கிறது. பணிந்த பின் ஏது  விடுதலை? வாரம் ஒருமுறையாவது சுவைத்தால்தான் சுட்டிகளுக்கு நிம்மதி. எனவே, தேவையற்ற சத்துகளால் பப்ளிமாஸ் ஷேப்புக்கு குழந்தைகள்  மாறி விடுகிறார்கள். புத்திக்கூர்மை மெல்ல மங்கி அவர்களை சோம்பல் பிடித்துக் கொள்கிறது’’ என்கிறார் குழந்தை நல மருத்துவர் வினோதினி. ‘‘ஃபாஸ்ட் ஃபுட், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவு இரண்டுமே குழந்தைகளை மையமாக வைத்தே விளம்பரப்படுத்தப் படுகின்றன. விளம்பரங்கள்  அட்ராக்டிவ்வாக இருப்பதால் குழந்தைகள் எளிதாக ஈர்க்கப்படுகிறார்கள். 

இன்றைய பரபர வாழ்க்கைச் சூழலில், வீட்டில் சமைப்பது குறைந்து வருகிறது. ஸ்நாக்ஸ், ஃப்ரைடு அயிட்டம்ஸ், நூடுல்ஸ் என அனைத்தும்  ரெடிமேடாகவே கிடைக்கின்றன. இவை கெடாமல் இருப்பதற்காக ‘பிரிசர்வேட்டிவ்’ சேர்க்கப்படுகிறது. சுவையைத் தூண்ட பல ரசாயனங்கள்  கலக்கப்படுகின்றன. அதனால் எவ்வளவு சாப்பிட்டாலும் போதும் என்றே தோன்றுவதில்லை. இதனால், குழந்தைகளின் உடலில் எளிதில் கரையாத  கொழுப்பு படிகிறது. சத்துகளின் அளவு குறைந்து, தேவையற்ற கலோரி அதிகமாகிறது. சிறுநீரகம், இதயம் சார்ந்த பிரச்னைகள் உருவாகின்றன. இந்த  உணவுகள், குழந்தைகளைக்கூட நீரிழிவுக்குத் தள்ளுகின்றன. 

இன்றைய பெற்றோர் குழந்தைகளை ஜீனியஸ் ஆக்க அதிகம் மெனக்கெடுகிறார்கள். அதே நேரத்தில், உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவ  தில்லை. குழந்தைகளை ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிட  அனுமதிக்கிறார்கள். அதனால் குழந்தைகள் வகுப்பறையில் கவனச் சிதறலுக்கு ஆளாகிறார்கள்.  பாடங்களை முழுமையாகப் புரிந்துகொள்ள அவர்களால் முடிவதில்லை. வீட்டுப் பாடம் எழுத ஆர்வம் இல்லாமல் தவிர்க்கிறார்கள். இந்தப் பிரச்னை  சம்பந்தப்பட்ட குழந்தையை ‘முட்டாள்’ என அடையாளப்படுத்துகிறது. 

அதிக அளவு ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடும் குழந்தை கள் சோம்பலையே வெளிப்படுத்துகிறார்கள். யோசிக்கவே சிரமப்படுகிறார்கள். நேர்மறை சிந்தனைகள்  குறைகின்றன. உளவியல் சிக்கல்கள் மனதில் மையம் கொள்கின்றன. பாக்கெட் சிப்ஸுகளில் சோடியமும் பொட்டாசியமும் அதிக அளவு உள்ளன.  இவை உடலில் அதிகமாகத் தேங்கும்போது ரத்தக்குழாயில் பாதிப்பு ஏற்படுகிறது. அதிலுள்ள அதிகக் காரமும் ஆரோக்கியத்துக்கு எதிரியே! இந்தச்  சுவைக்கு நாக்குப் பழகி விடுவதால் சத்தான உணவுகளை குழந்தைகள் விரும்புவதில்லை. கசப்பு, உவர்ப்பு, புளிப்பு உள்ளிட்ட சுவைகள்  குழந்தைகளுக்குப் பிடிக்காமல் போகின்றன. 

கீரை, காய்கறிகளைத் தவிர்ப்பதால் உடலுக்குத் தேவையான சத்துகள் கிடைக்காமல் தடுக்கப்படுகிறது. உடல் மட்டுமின்றி மனரீதியான  அபாயங்களையும் உருவாக்கும் ஃபாஸ்ட் ஃபுட், குழந்தைகளை ஒரு கட்டத்தில் அடிமைப்படுத்தி விடுகிறது. உறுப்புகளையும் ஹார்மோன்களையும்  பாதிக்கிறது. சிந்திக்கும் திறனைக் குறைத்து அறிவுத் தேடலுக்கு தடை போடுகிறது. அடம் பிடிக்கும் குழந்தைகள் பொறுப்புகளை தட்டிக் கழிக்கும்  மனப்பக்குவத்தை அடைகிறார்கள். இந்த உணவுக் கலாசாரம் குழந்தைகளின் நிகழ்காலத்தை மட்டுமின்றி, எதிர்காலத்தையும் கேள்விக் குறியாக்குகிறது. உணவின் உளவியலைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப வீட்டில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்.  

எந்த மாற்றத்தையும் மனதில் இருந்து தொடங்க வேண்டும். குழந்தைகளிடம் எதிர்பார்க்கும் மாற்றத்துக்கு பெற்றோரே ரோல் மாடல்! ஃபாஸ்ட் ஃபுட்  விளைவுகளை குழந்தைகளுக்கு மெல்லச் சொல்லி புரிய வைக்கலாம். ஆசிரியர், மருத்துவர், நண்பர்கள் மூலம் குழந்தைகளுக்குப் புரியும்படி  சொல்லலாம். சமைக்கத் திட்டமிடும் போது, குழந்தைகளை இணைத்துக் கொள்ளலாம். இன்றைய சமையல் என்ன, எந்த காய் சமையலுக்கு, என்ன  பொரியல் என்பதிலும் சுட்டிகளின் விருப்பத்துக்கு மதிப்பளிக்கலாம். வீட்டில் நன்கு சமைத்துச் சாப்பிடும் போது ஃபாஸ்ட் ஃபுட் தேவை குறையும். 

சத்தான தானிய வகைகளில் குழந்தைகளுக்குப் பிடித்த சுவையில் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கலாம். சர்க்கரைக்கு பதிலாக பனைவெல்லம்  பயன்படுத்தலாம். அது, ரத்தசோகையை கட்டுப்படுத்தி, புத்திக்கூர்மையை அதிகரிக்கும். இயற்கை சார்ந்த உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்.  இவற்றைச் சாப்பிடுவதால் என்னென்ன சத்துகள் உடலுக்கு கிடைக்கின்றன என்பதைப் புரிய வைக்கலாம். உணவை ரசித்து, சுவைத்து சாப்பிடப் பழக்க  வேண்டும். பல வீடுகளில் குழந்தைகள் சாப்பிடும் போது டி.வி. ரிமோட் கையில் இருக்கும். என்ன சாப்பிடுகிறோம், எப்படி சாப்பிடுகிறோம் என்றே  தெரியாது. 

இந்த விஷயத்தில் பாரம்பரிய முறைகளையே பின்பற்ற வேண்டும். 10 வயதுக்குள்ளாகவே சிறுமிகள் பூப்பெய்துவது ஃபாஸ்ட் ஃபுட் கலாசாரத்தின்  இன்னொரு எதிர்விளைவு. மன வளர்ச்சி இல்லாத காலத்தில் பூப்பெய்துவதால், தங்களைப் பராமரித்துக் கொள்வது அவர்களுக்குத் தெரிவதில்லை.  மாதவிலக்கில் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள். தவறான உணவுமுறையின் காரணமாக போதிய இரும்புச்சத்து கிடைக்காமல்,  ரத்தசோகையுடன் காணப்படுகிறார்கள். கால்சியம் பற்றாக்குறையால் எலும்புகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. 

மாதவிலக்கின் போது, குறிப்பிட்ட நாட்களில் ரத்தப்போக்கு குறைந்து, படிப்படியாக நிற்க வேண்டும். ரத்தப்போக்கு நிற்காமல் 10 நாட்கள் வரை  வெளிப்படுகிறது. இது சிறுமிகளுக்கு பல்வேறு உளவியல் சிக்கல்களை உருவாக்கும். டீன் ஏஜை தொடும் போது, இவர்களே பெற்றோருக்கு  பிரச்னையாக மாறுகிறார்கள். ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடும் குழந்தைகளின் உடலில் மைக்ரோநியூட்ரியன்ஸ் போதுமான அளவு இருப்பதில்லை. இதுபோன்ற  சத்துக் குறைபாடுகள் உடலையும் மனநிலையையும் வயதுக்குரிய பண்புகளையும் பாதிக்கின்றன. நேர்மறைச் சிந்தனை குறைவதால் எந்த  விஷயத்திலும் பயத்தை வெளிப்படுத்துவார்கள். 

தன்னம்பிக்கை சிதையும். மிக விரைவில் குழப்பமான வாழ்க்கைச்சூழலுக்குள் தள்ளப்படுவார்கள். இது குறித்த தெளிவான புரிதல் இல்லாததால்  பெற்றோரின் தவறான அணுகுமுறையே குழந்தைகளின் வில்லனாக மாறுகிறது. இவ்வளவு பிரச்னைக்குரிய ஃபாஸ்ட் ஃபுட் தேவைதானா? உங்கள்  குழந்தைகளிடமே கேட்டுப் பாருங்கள்... அவர்கள் வேண்டாம் என்றுதான் சொல்வார்கள். நல்ல மாற்றத்தை, இன்றே உங்கள் சமையலறையில் இருந்து  தொடங்கலாமே!’’ என்கிறார் டாக்டர் வினோதினி.

No comments

Powered by Blogger.