கல்முனை பிரதேச இளம் உலமாக்களை வரவேற்கும் நிகழ்வு
(எம்.ஏ.றமீஸ்)
அஸ்ஸெய்யித் அப்துர் ரஷீத் தங்கள் நாயகத்தினால் தெஹிவளையில் நிறுவப்பட்ட அல்-ஜாமிஅதுல் கௌஸிய்யா அறபுக் கலாபீடத்தில் மார்க்கக் கல்வியினைப் பயின்று வெளியாகிய கல்முனை பிரதேச இளம் உலமாக்களை வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்றது.
கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்த பட்டம் பெற்ற இளம் உலமாக்களான எஸ்.எல்.அப்துர் ரஹ்மான்(கௌஸி), எம்.ஏ.எம்.ஜப்ரான்(கௌஸி) மற்றும் அல்-ஹாபிழ் ஏ.ஆர்.எம்.அஸ்வர் ஆகியோரே இந்நிகழ்வின்போது ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
கல்முனை முஹிய்யத்தீன் ஜூம்ஆ பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற நிகழ்வின்போது இளம் உலமாக்கள் அறிமுகப்படுத்தபட்டு பின்னர் விஷேட துஆப் பிரார்த்தனை இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து பிரதான வழியாகவும் பின்னர் உள்ளக வீதி வழியாகவும் இளம் உலமாக்கள் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு கல்முனை நூரானிய்யா பள்ளிவாசலை வந்தடைந்தனர். இதன்போது மார்க்க அறிஞர்கள், புத்தி ஜீவிகள், கல்வியியலாளர்கள், சமூக மட்டத் தலைவர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
கல்முனை நூரானிய்யா பள்ளிவாசலில் நடைபெற்ற நிகழ்வின்போது ஈஸ்டன் அஹ்லுஸ் சுன்னாஹ் பவுண்டேஷன் தலைவரும், இப்பள்ளிவாசலின் பேஷ் இமாமுமாகிய ஏ.சி.எம்.முஹிய்யத்தீன்(மன்பயி), மௌலவி எம்.ஐ.எம்.றியாஸ் (அல்தாபி) ஆகியோரின் சிறப்புச் சொற்பொழிவு பெற்றதுடன், இளம் உலமாக்கள் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டனர்.
தெஹிவளை அல்-ஜாமிஅதுல் கௌஸிய்யா அரபுக் கலாபீடத்தின் எட்டாவது பட்டமளிப்பு விழா அண்மையில் கலாபீட வளாகத்தில் இடம்பெற்றது. இதன்போது நாட்டின் நாலா பாகங்களிலுமுள்ள ஆறு இளம் மௌலவிமார்களும், பதினொரு அல்-ஹாபிழ்மார்களும் பட்டம் பெற்று வெளியாகியதுடன், ஒன்பது மாணவர்கள் தலைப்பாகை சூடி வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment