அமெரிக்கத் தூதுவரின் நடவடிக்கையால் கடுப்பாகிய கோத்தாபய
சிறிலங்காவின் மூத்த படை அதிகாரிகள் மற்றும் தனக்குக் கீழ் இயக்கும் நிறுவனங்களின் தலைவர்கள் எவரும், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசனையோ, அவரது பிரதிநிதிகளையோ தனியாகச் சந்திக்கக் கூடாது என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்கத் தூதுவரையோ, அல்லது அவரது பிரதிநிதிகளையோ, தனக்கு முன்பாகவே சந்திக்க வேண்டும் என்றும், தனிப்படச் சந்திக்கக் கூடாது என்றும் கோத்தாபய ராஜபக்ச பணித்துள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்புக்கான யுஎஸ்எயிட் தலைமை அதிகாரியை தான் இல்லாமல் சந்திப்பதற்கு, அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன், கோத்தாபய ராஜபக்சவுக்கு அனுமதி மறுத்திருந்தார்.
அமெரிக்கத் தூதுவரின் கீழ் தான், கொழும்புக்கான யுஎஸ்எயிட் தலைமை அதிகாரி செயற்படுவதால், தூதுவரின் முன்பாகவே சந்திப்பை நடத்த முடியும் என்றும் அமெரிக்கத் தூதரகம், கோத்தாபய ராஜபக்சவிடம் கூறியிருந்தது.
இதற்குப் பதிலடியாகவே, கோத்தாபய ராஜபக்ச இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
வாக்காளர்களை அறிவூட்டும் திட்டத்தை முன்னெடுப்பது குறித்தே, யுஎஸ்எயிட் தலைமை அதிகாரியுடன் பேச்சு நடத்த கோத்தாபய ராஜபக்ச திட்டமிட்டிருந்தார்.
இது சிறிலங்காவில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை என்று கோத்தாபய ராஜபக்ச விபரித்துள்ளார்.
அமெரிக்கத் தூதுவரின் நடவடிக்கையால் கடுப்பாகியுள்ள கோத்தாபய ராஜபக்ச, அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்கு வடக்கு, கிழக்கில் உள்ள தடுப்பு முகாம்களைப் பார்வையிடும் விடயத்திலும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அது மட்டுமன்றி, அமெரிக்கத் தூதுவரை இதே போன்று அணுகுமாறு ஏனைய அமைச்சுக்களையும் தான் கேட்டுக் கொள்ளவுள்ளதாகவும் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஒரு தனி நபரின் முட்டாள் தனமான, தான்தோன்றி தனமான போக்கால் நாட்டுக்கு கிடைக்கும் நல்ல விடயங்களும் நடைபெறாமல் போகப்போகின்றது. இவற்றுக்கெல்லாம் மக்கள் தான் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.
ReplyDelete