ஊரடங்கு சட்டம் அமுலிருந்தபோது காடையர்களினால் எப்படி முஸ்லிம்களை தாக்க முடிந்தது..?
அளுத்கம இன வன்முறைகள் தொடர்பில் அரச தரப்பினர் வாய்திறக்க முடியாதளவுக்கு பலம் வாய்ந்த மறைமுக கரம் ஒன்று செயற்படுகின்றதெனத் தெரிவித்த ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பி.யும் ஜே.வி.பி.யின் தலைவருமான அநுரகுமார திசாநாயக்க அப்பாவிகளைக் கொலை செய்யும் பாதுகாப்புத் தரப்பினருக்கு பதவி உயர்வு வழங்கும் ஆட்சியில் நாம் வாழ்கின்றோம் என்றும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் சட்டம் ஒழுங்கின் இன்றைய நிலை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அநுரகுமார திசாநாயக்க மேலும் கூறுகையில் ;
சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சுக்குப் பொறுப்பானவராக ஜனாதிபதி உள்ளார். ஆனால் இந்த சட்டம் ஒழுங்கு தொடர்பிலான பிரச்சினைகளுக்கு பதில் கூற பாராளுமன்றத்தில் யார் இருக்கின்றார்கள்? ஜனாதிபதி பொறுப்பாகவுள்ள அமைச்சுகளுக்கு பிரதியமைச்சர்கள் அல்லது அதனுடன் தொடர்புபட்ட அமைச்சர்கள் இருக்கின்றார்கள். ஆனால் இந்த சட்டம் ஒழுங்கிற்கு பிரதியமைச்சர் கூட இல்லை.
இந்த நாட்டில் சட்டம் , ஒழுங்கு என்று ஒன்று இல்லை. ஜனாதிபதி தன் விருப்பத்திற்கு சட்டத்தை பயன்படுத்துகின்றார். சஞ்சிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டி காரணமாக பயங்கரவாத தடைச் சட்டத்தில் மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தனது தந்தையை விடுவிக்குமாறு மகள் ஜனாதிபதிக்கு கண்ணீர்க் கடிதம் எழுதியவுடன் அவர் விடுவிக்கப்பட்டார்.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பப்பட்டனர். ஜனாதிபதி யாழ்ப்பாணம் சென்று மாவட்டச் செயலக கலந்துரையாடலில் பங்கேற்றபோது அம் மாணவர்களின் பெற்றோர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்ததை யடுத்து அம் மாணவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டனர்.
கண்டியைச் சேர்ந்த ஐ.தே.க. உறுப்பினர் ஒருவர் 10 இலட்சம் ரூபா பண மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு வழக்குத் தொடரப்பட்ட நிலையில் அந்த உறுப்பினர் அரசுப் பக்கம் தாவினார். உடனடியாக சட்டமா அதிபர் அந்த வழக்கை வாபஸ் பெற்றார். 16 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இரு கொலைகள் தொடர்பான வழக்கு தற்போது சான்றுகள் இல்லையெனக் கூறி முடிக்கப்பட்டுள்ளது. இதனை விட வேறு என்ன வேடிக்கை இருக்க முடியும் ?
தமது உரிமைகளைக் கோரி மக்கள் நடத்தும் போராட்டங்கள் மீது துப்பாக்கிச் சூடுகள் நடத்தி உயிர்கள் பலியெடுக்கப்படுகின்றன. கட்டுநாயக்காவில் ஆர்ப்பாட்டம் செய்த ஊழியர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். இதற்கு பொறுப்பேற்று பொலிஸ்மா அதிபர் மஹிந்த பால சூரிய பதவி விலகினார். உடனடியாக அவர் இலங்கைக்கான வெளிநாட்டுத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரத்துபஸ்பலவில் நல்ல குடிதண்ணீர் கேட்டு மக்கள் போராடினார்கள். அங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலியாகினர். துப்பாக்கி சூடு நடத்திய இராணுவத்தினர் தண்டிக்கப்படாது அவர்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டன. கொலைகள் செய்தால் பதவி உயர்வுகள் கிடைக்கும் என்ற எண்ணத்திற்கு இப்போது பாதுகாப்புத்தரப்பினர் வந்துள்ளனர். அந்தளவுக்கு சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சி கண்டுள்ளது.
ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள ஒரு இடத்திலிருந்து ஒருவரை வைத்தியசாலைக்கு அவசரமாகக் கொண்டு செல்வதென்றால் கூட கடினமான விடயமாகவுள்ள நிலையில் அளுத்கமவில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளை எப்படி 200 க்கும் மேற்பட்ட காடையர்கள் மிகவும் சுதந்திரமாக வீதி வீதியாகச் சென்று முஸ்லிம் மக்களின் வீடுகளையும் வர்த்தக நிலையங்களையும் தாக்க முடிந்தது? 4 பேரைக் கொல்ல முடிந்தது?
அளுத்கமவில் 4 வீடுகள் மட்டுமே முற்றாக சேதமடைந்துள்ளதாக பிரதமர் கூறுகின்றார். இது அப்பட்டமான பொய் 25 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. களுத்துறை மாவட்ட செயலக அதிகாரிகளின் அறிக்கைகளின் படி பேருவளையில் 193 வீடுகளும் மத்துகமவில் 63 வீடுகளும் களுத்துறையில் 5 வீடுகளும் பெந்தோட்டையில் 27 வீடுகளுமாக மொத்தம் 288 வீடுகளும் 199 வர்த்தக நிலையங்களும் 3 பள்ளிவாசல்களும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
அது மட்டுமன்றி அளுத்கம வன்முறையில் 262 மில்லியன் ரூபா சேதம் ஏற்பட்டுள்ளதாக அரசு கூறுகின்றது. ஆனால் அரச அதிகாரிகளின் மதிப்பீட்டுக்கமைய 600 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அளுத்கம வன்முறைகள் தொடர்பில் அரச தரப்பினர் வாய்திறக்க முடியாத நிலையில் உள்ளனர். இவர்களை ஒரு மறைமுக கரம் ஆட்டுவிக்கின்றது. இதனால் தான் அளுத்கம வன்முறையுடன் தொடர்பு பட்ட குற்றவாளிகளை இவர்கள் பாதுகாக்க முற்படுகின்றனர். இவ்வாறான மறைமுக கரத்தின் செயற்பாடுகளால்தான் நாட்டில் சட்டம் , ஒழுங்கு இல்லாது போயுள்ளது. சட்டம் இல்லாத ஆட்சியில் நாடு மிகவும் அபாயகரமான நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது என்றார்.
காலங்கள் மாறிவரும் மெதுவாய் இங்கே ..
ReplyDeleteநியாயங்கள் சவுக்கடி தரும் ஒருநாள் அங்கே..!