பொதுபல சேனாவுக்கும், பொலிஸுக்கும் தொடர்பு - பாலித தேவபெரும
எனது இராஜிநாமாவின் பின்னராவது மக்கள் நலன் காக்கப்பட வேண்டும். பதவியை இராஜிநாமா செய்ய காரணம் அளுத்கம, தர்கா நகர், பேருவளை சம்பவத்திற்கு யாரேனும் பொறுப்பேற்கிறார்கள் இல்லை. எனவே, நான் பொறுப்பேற்று உண்மையை கண்டறிய நினைத்தே இராஜினாமா செய்தேன்.
இராஜிநாமா கடிதத்தை ஏற்காததன் மூலம் கட்சித் தலைவருக்கும் இனி பொறுப்புள்ளது. அரசாங்கத்தின் மீதும், பொலிஸ் மீதும், அதன் விசாரணை மீதும் நம்பிக்கையில்லை. பொலிஸ்மா அதிபர் பதவிவிலக வேண்டும் என ஐ.தே.க.வின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தேவரப் பெரும தெரிவித்தார்.
பொலிஸ் மா அதிபர் பதவி விலக வேண்டும். முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனக் கூறி தமது பதவியை இராஜிநானா செய்வதாக அறிவித்த இவருடன் அண்மைக்கால நிகழ்வுகள் பற்றி கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் முக்கியமாகக் கூறியதாவது:
'அளுத்கம நகரில் பொலிஸ் அனுசரணையுடன் வரலாற்றில் நடந்திராத சம்பவம் ஒன்று நடந்தது. சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடந்த வன்முறைக்கு பதிலாக நாம் எதனையாவது செய்ய வேண்டும். 15ஆம் திகதி இரவு முஸ்லிம் வீடுகள் எரிக்கப்பட்டன. அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் நான் பொறுப்பேற்க வேண்டும். அளுத்கம சம்பவத்தில் எந்தவொரு நபரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இவற்றை எவராவது பொறுப்பேற்க வேண்டும். மக்களின் வீடுகள் எரிக்கப்பட்டதற்கு நிதி வழங்கினால் மட்டும் போதாது.
பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எனக்கும் கற்களால் அடி கிடைத்தது. வாகனங்கள் சேதமாக்கப்பட்டன. சிறு குழந்தைக்கும் காயம் ஏற்பட்டது. களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான குமார் வெல்கம பொதுபல சேனாவின் கூட்டத்தை பேருவளையில் நடத்தக்கூடாது என்று கூறியும் அப்படியே பொதுபல சேனா நடத்தியது.
பொதுபல சேனா இனவாதத்தை கக்கியது. ஏன் பொதுபல சேனாவினை கைது செய்யவில்லை. அப்படியென்றால் பொதுபல சேனாவுக்கும் பொலிஸுக்கும் தொடர்புண்டா? எனவே, நான் பொலிஸ்மா அதிபரை பதவி விலகுமாறு கேட்டேன். பொலிஸ் திணைக்களம் இந்த விடயத்தில் தொடர்புபட்டுள்ளது என்ற கருத்து மக்களின் மனதில் ஆழப்புதைந்துவிட்டது. இந்தக் கருத்தை வெளியேற்ற வேண்டுமாயின் பொலிஸார் சம்பவத்திற்கு பொறுப்பேற்க வேண்டும்.
ஆனால், இதுவரை ஒன்றும் நடக்கவில்லை. சிறுபான்மை மக்களினது வாக்குகளைப் பெற்றவன் என்ற அடிப்படையில் நான் அரசியல் செய்கின்றேன் என்பது எனக்கு வெட்கமாக உள்ளது. நான் பதவியை துறக்கிறேன் என்ற கூறியதற்கு காரணம் மக்களுக்கு உண்மை தெரியவேண்டும் என்பதற்காகவும் யாராவது இந்தச் சம்பவத்தினை வெளிக்கொண்டு வந்து உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிப்பது எனது இராஜிநாமாவின் நோக்கமாக இருக்க வேண்டும்.
நான் எனது இராஜினாமாக் கடிதத்தை கட்சியின் பொதுச் செயலாளரிடம் கொடுத்துவிட்டு பாராளுமன்றில் இருந்து வெளியேறி இருந்தால் ஒன்றும் நடக்காது. எனவே, தான் கட்சித் தலைவரிடம் கொடுத்தேன். ஆனால், அவர் அக்கடிதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் கடிதத்தை ஏற்காததன் காரணமாக இனி இச்சம்பவத்திற்கு பொறுப்பேற்று உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டிய கடமை அவருக்கும் இருக்கிறது.
அதேநேரம் தலைவர் ரணில்விக்ரமசிங்க 'இப்போது பொலிஸ் விசாரணை நடக்கிறது. அது நடந்து முடிந்து இறுதி அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அவ் அறிக்கையில் பொலிஸார் பிழை விட்டிருந்தால் நீர் ஒருவன் மட்டுமின்றி கட்சியிலுள்ள அனைவரும் பதவி விலகுவோமென அறிவிப்போம்' என்றார். அத்துடன், எனது கடிதத்தை ஏற்காமல் கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் என்னை தனித்து வெளியே போக வேண்டாமென என அறிவுறுத்தினர்.
Post a Comment