Header Ads



எனது கனவை ‘திருடி’ விட்டனர் - நெய்மர் உருக்கம்

‘‘உலக கோப்பை பைனலில் விளையாட வேண்டும் என்ற எனது கனவை ‘திருடி’ விட்டனர்,’’என, நெய்மர் உருக்கத்துடன் தெரிவித்தார்.

உலக கோப்பை தொடரின் காலிறுதியில் பிரேசில் அணி, கொலம்பியாவை வீழ்த்தியது. இப்போட்டியின் 88வது நிமிடத்தில் கொலம்பிய  வீரர் ஜுனிகா, தனது முழங்காலால் பிரேசிலின் நட்சத்திர வீரர் நெய்மரை தாக்கி கீழே தள்ளினார். இதில், முதுகெலும்பு முறிந்த நெய்மர், தொடரில் இருந்து பரிதாபமாக வெளியேறினார். இது, பிரேசில் அணிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

களத்தில் துடிப்பாக செயல்படும் முன்கள வீரரான நெய்மர், நான்கு கோல்கள் அடித்துள்ளார். இவர் இல்லாத நிலையில், பிரேசில் அணி கோப்பை வெல்லுமா என்று இணையதளத்தில் கேட்கப்பட்டு வருகிறது. இதில் 68 சதவீதம் பேர் பிரேசிலுக்கு வாய்ப்பு இல்லை என்றே தெரிவித்துள்ளனர். 

வீட்டில் ஓய்வு:

இந்தச் சூழலில் நெய்மர், டெரஸ்போலிஸ் நகரில் இருந்து மருத்துவ வசதி கொண்ட ‘ஹெலிகாப்டர்’ மூலம் சாவ் பாலோவில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இங்கு இருந்தவாறு சிகிச்சையை தொடர உள்ளார். சுமார் 45 நாட்களுக்கு ஓய்வில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இது குறித்து பிரேசில் அணியின் டாக்டர் லுாயிஸ் ரன்கோ கூறுகையில்,‘‘எஞ்சிய உலக கோப்பை போட்டிகளில் விளையாட முடியாது என்று நெய்மரிடம் சொன்ன போது கண்ணீர் விட்டு கதறினார். உங்களுக்கு 22 வயது தான் ஆகிறது. இன்னும் சாதிக்க அதிக கால அவகாசம் உள்ளது என்று கூறி தேற்றினேன். இவரது காயம் மோசமானதல்ல,’’என்றார்.

நெய்மரை பொறுத்தவரை பிரேசில் அணி 6வது முறையாக பட்டம் வெல்ல வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். இவர் வெளியிட்ட ‘வீடியோ’ செய்தியில்,‘‘உலக கோப்பை பைனலில் விளையாட வேண்டும் என்ற கனவை ‘திருடி’ விட்டனர். ஆனாலும் உலக சாம்பியனாக வேண்டும் என்ற எனது கனவு முடிந்து விடவில்லை. இன்னும் இரண்டு போட்டிகள் தான் உள்ளன. இதில், சக வீரர்கள் அனைத்து விதத்திலும் சிறப்பாக செயல்பட்டு, கோப்பை வெல்வார்கள் என்று நம்புகிறேன். அப்போது நானும் சேர்ந்து வெற்றியை கொண்டாடுவேன்,’’ என, உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த திட்டம் என்ன

இரண்டு எல்லோ கார்டு பெற்றதால், பிரேசில் கேப்டன் தியாகோ சில்வா, ஜெர்மனிக்கு எதிரான அரையிறுதியில் விளையாட முடியாது. நெய்மரும் இல்லாததால் அடுத்த கட்ட திட்டங்களை பிரேசில் அணி தீட்டி வருகிறது.நெய்மர் இடத்தை நிரப்ப விலியன், லுாயிஸ் குஸ்தாவோ, ரமிரஸ், பெர்ணார்ட், ஆகியோரை களமிறக்க திட்டமிட்டுள்ளனர். இதில், விலியன் மீது அதிகமாக நம்பிக்கை வைத்துள்ளனர். இவர் நெய்மரை போல துடிப்பாக செயல்படக்கூடிவயர். 

காயம் அடைந்த நெய்மருக்காக மட்டுமல்லாமல், சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்களின் முன் சாதிக்க, அனைத்து முயற்சிகளையும் பிரேசில் அணி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

 பீலே ஆருடம்

நெய்மருக்கு ஆதரவு தெரிவித்து பிரேசில் ஜாம்பவான் பீலே தனது ‘டுவிட்டர்’ இணையதளத்தில் வெளியிட்ட செய்தியில்,‘‘உங்களுக்கு காயம் ஏற்பட்டது வருத்தம் அளிக்கிறது. 1962ல் சிலி அணிக்கு எதிரான போட்டியின் போது காயம் அடைந்த நான், தொடரில் இருந்து விலக நேர்ந்தது. ஆனாலும் கடவுளின் கருணையால் அப்போது பிரேசில் அணி கோப்பை வென்றது. இதே போல இம்முறையும் நடக்கும் என நம்புகிறேன்,’என, குறிப்பிட்டுள்ளார்.

கொலை மிரட்டல்

நெய்மரை ‘தாக்கிய’ கொலம்பிய வீரர் ஜுனிகாவுக்கு சமூக வலைதளங்களில் சில ரசிகர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இவரை, ‘கால்பந்து வரலாற்றின் மிகப் பெரிய வில்லன்’ என, வசைபாடியுள்ளனர்.

இதற்கிடையே, தனது செயலுக்காக மன்னிப்பு கேட்ட ஜுனிகா கூறுகையில்,‘‘ நெய்மர் மீது சாதாரணமாக தான் மோதினேன். இதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை. உலகின் சிறந்த வீரரான நெய்மரை மிகவும் மதிக்கிறேன். விரைவில் குணமடைவார் என நம்புகிறேன்,’’என்றார்.

‘பிபா’ நடவடிக்கை

ஜுனிகா மீது சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (பிபா) நடவடிக்கை பாயும் என தெரிகிறது. இது குறித்து ‘பிபா’ அதிகாரி டிலியா பிஷர் கூறுகையில்,‘‘நெய்மரை தாக்கிய சம்பவம் பற்றி ஒழுங்கு நடவடிக்கை குழு ஆய்வு செய்து வருகிறது. தவறு உறுதி செய்யப்பட்டால், நடவடிக்கை எடுக்கப்படும். வீரர்கள் விளையாட்டு உணர்வுடன் நடந்து கொள்வது அவசியம்,’’என்றார்.

திட்டமிட்ட சதியா

பிரேசில் முன்னாள் வீரர் ரொனால்டோ கூறுகையில்,‘‘நெய்மருக்கு உடல் அளவில் பாதிப்பு ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணத்துடன் கொலம்பிய வீரர் ஜுனிகா தாக்கினார். முன்கூட்டியே திட்டமிட்டு தாக்கினாரா என தெரியவில்லை. இது வழக்கமான கால்பந்து ஆட்டம் அல்ல. வன்முறை ஆட்டம்,’’என்றார்.

No comments

Powered by Blogger.