காசா பகுதி, கத்திமுனை போல் உள்ளது - பான் கீ மூன்
'காசா பகுதி, கத்திமுனை போல் உள்ளது,'' என, ஐக்கிய நாடுகள் சபையின், பொதுச் செயலர், பான் கீ - மூன் தெரிவித்தார்.கடந்த சில நாட்களாக, அண்டை நாடுகளான இஸ்ரேலும், பாலஸ்தீனமும் பயங்கரமாக மோதிக் கொள்கின்றன.
யூதச் சிறுவர் மூவர், பாலஸ்தீன, கொல்லப்பட்டதை அடுத்து, ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது, இஸ்ரேல் விமானங்கள் குண்டுகள் வீசி வருகின்றன. அதற்கு பதிலடியாக, பாலஸ்தீனம் மற்றும் ஹமாஸ் தாக்குதலை துவங்கியுள்ளனர்.
இதனால், இருதரப்பிலும், 45 பேருக்கும் அதிகமாக கொல்லப்பட்டு உள்ளனர்.'இரு நாடுகளும் பதற்றத்தை தணிக்க வேண்டும்' என, அமெரிக்க அதிபர், பாரக் ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில், பாலஸ்தீன அதிபர், முகமது அப்பாஸ், இஸ்ரேல் பிரதமர், பெஞ்சமின் நெதன்யாகு, எகிப்து அதிபர், சிசி ஆகியோருடன், பொதுச்செயலர், பான் கீ - மூன் நேற்று ஆலோசனை நடத்தினார். பின் நிருபர்களை சந்தித்த அவர், ''மத்திய தரைக்கடல் நாடுகளில் பதற்றத்தை தணிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம்; அங்கு, கத்திமுனை போன்ற நிலைமை காணப்படுகிறது,'' என்றார்.
இதற்கிடையே, பாலஸ்தீனத்தில், இஸ்ரேல் ராணுவம் நடத்திய நேற்றைய, மூன்றாவது நாள் தாக்குதலில், 20க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். அது போல், ஜெருசலம் நகரில், இந்தியர்கள் மற்றும் இந்திய யூதர்கள் அதிகம் வசிக்கும், 'மினி இந்தியா' பகுதியில், ஹமாஸ் ராக்கெட் தாக்குதல் நடத்தினர்; எனினும், இதில் யாருக்கும் பாதிப்பில்லை.
Post a Comment