மியன்மார் சென்று, ஞானசாரர் விராதுவிடம் பயிற்சி எடுத்துவந்தாரா...?
இந்த நிமிடம் வரை அலுத்கம, தர்காநகர், பேருவளை, வெலிப்பனை ஆகிய பிரதேசங்களில் ஏற்பட்ட மத அழிப்பு, பொருளாதார அழிப்புகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களையோ, அவர்களுக்குரிய அடிப்படை வசதிகளையோ செய்து கொடுக்காத அரசாங்கம், அங்கு நடைபெற்ற அனர்த்தங்களால் 8500 இலட்சத்திற்கும் மேலான சொத்துக்கள் அழிக்கப்பட்டும் சூறையாடப்பட்டும் உள்ள நிலையில் இதனை மூடி மறைப்பதற்கு அவசரமாக 150 இலட்சங்களை செலவு செய்கின்றதா? என்கின்ற கேள்வியும் எழுகிறது. சொத்துக்களை எறியூட்டிய போது அவை பூரணமாக எரிவதற்காக ஏதாவது இரசாயனம் பயன்படுத்தப்பட்டதா? என்ற கேள்விகளும் அப்பகுதி மக்களிடம் இருக்கின்றன. சம்பந்தப்பட்ட விடயங்களை ஆராய்ந்து பார்க்காமலும் அரச பகுப்பாய்வாளர்களைக் கொண்டு இவைகள் ஆராயப்படாமலும். அவசர வசரமாக துப்பரவு வேலைகள் முடுக்கிவிடப்பட்டு இப்போது நீதிமன்ற உத்தரவின்படி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கின்றன.
முஸ்லிம்களுக்கு கடந்த 3 வருடங்களுக்கு மேலாக நடைபெறும் அநியாயங்களுக்கு ஒரு தீர்வை தராமல்;, மீண்டும் இப்படியான நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க வேண்டிய பாரிய பொறுப்புள்ள அரசு தொடர்ந்தும் மெத்தனப் போக்கையும், அமைதியையும் கடைபிடிப்பதைப் பார்க்கும் போது நடைபெற்ற பேரவலம் ஒரு ஆரம்பமே அன்றி முடிவல்ல என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.
காரணம், நாளாந்தம் புதிய புதிய சேனாக்கள் முளைத்து பொதுபலசேனாவுக்கு வக்காளத்து வாங்குவதோடு அவர்களும் எதிர்காலத்தில் முஸ்லிம்களே தமது வீடுகளையும் சொத்துக்களையும் அழித்துக்கொண்டு, அவர்களே அவர்களைக் காயப்படுத்தியும் துப்பாக்கிகளால் சுட்டும் கொண்டார்கள் என எதிர்காலத்தில் இந்த சேனாக்களும் பொலிசாரும் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
சகல அனர்த்தங்களிலும் நேரடியாக சம்பந்தப்ட்ட கலகாட அத்தே ஞானசார தேரரை ஒரு ஏமாற்றுவேலையாக குற்றப்புலனாய்வுத்துறைக்கு வரவழைத்து தங்களிடமே கேள்விகளையும,; குறைகளையும் கேட்கவைத்து தமது கடமையை செவ்வனே நிறைவேற்றியுள்ளார்கள். பாராட்டப்படவேண்டிய பொலிசார், வெட்கமில்லாத பொலிஸ்மா அதிபர். இரண்டு மணித்தியாலங்களில் வெளியே வந்த ஞானசார தேரர் குற்றப்புலனாய்வு வாசலில் வைத்து ஊடக நேர்காணலில் தன்னைக் கைது செய்தால் இலங்கையில் தென்னை மரங்கள் தூக்குமரங்களாகவும் வீடுகள் சிறைச்சாலைகளாகவும் மாறும் என மிகவும் சர்வசாதாரணமாக முஸ்லிம்களை கொலை செய்வேன் என்பது போன்று மிகவும் ஆக்ரோஷமாக தினமும் கூறிக்கொண்டிருக்கிறார்;.
இவருக்கு ஒன்றைமட்டு;ம் தெளிவுபடுத்த வேண்டும். ஞானசார தேரர் மியன்மார் சென்று (அவ்வேளை ஜனாதிபதியும் மியன்மாரில் இருந்தார்) மியன்மார் ரொஹிங்கியோ முஸ்லிம்களை இலங்கையில் அலுத்கமையில் நடந்தது போன்றே அழித்துக் கொன்று குவிக்கும் மியன்மார் தேரர் விராது இடம் பயிற்சி எடுத்து வந்தாரா? என்ற சந்தேகம் மேலும் இப்போது வலுப்பெற்றுள்ளது. ஞானசார வேண்டுமானால் மியன்மார் தேரர் விராதுவாக இருக்கலாம் இலங்கைவாழ் முஸ்லிம்கள் ஒன்றும் ரோஹிங்கியோ முஸ்லிம்களும் இல்லை, வந்தேறு குடிகளும் இல்லை. பூர்வீக குடிகளான நாட்டுப்பற்றுள்ள இலங்கை முஸ்லிம்கள், எந்த சந்தர்ப்பத்திலும் நாட்டுக்கு எதிராக செயல்பட நினைத்திராத முஸ்லிம் சமூகத்தின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு விஷத்தைக் கக்கும் அநியாயமாக பொய்களைக் கூறும் ஞானசார தேரரை கைது செய்து சட்டம் தண்டிக்கும் வரை முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு தனது போராட்டத்தை தொடரும்.
ஞானசார தேருக்கு இந்த நாட்டிலே இருக்கும் உரிமைகளில் சிறிதும் குறையாத எல்லா வகையான உரிமைகளும் இந்த நாட்டு முஸ்லிம்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது என்பதை அவருக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றோம். அவரதுவாய் மூடப்படாத போது அவருக்கு தொடர்ந்து பதில் கொடுக்கவேண்டிய நிலைக்கு அரசும் பொலிசாரும் எம்மை நிர்ப்பந்தித்துள்ளார்கள். நடைபெறாத சம்பவங்களை இட்டுக்கட்டி முஸ்லிம்கள் மீது அபாண்டமான பழியை பல்வேறு சேனாக்களும் தமக்கு பணிக்கப்பட்டவாறு பலிகூற முற்பட்டுள்ளார்கள். இவைகள் பயங்கரமான சூழலுக்கே வழிவகுக்கப்போகின்றது. முஸ்லிம்களை ஒரு பயங்கரமான சூழலுக்கு இட்டுச்சென்று எதனையும் சாதிக்கலாம் என தப்புக்கணக்கு போட்டுள்ளவர்கள் விரைவிலே தமது தவறுகளை திருத்திக்கொள்ளாவிட்டால் நாடு அழிவுப்பாதையை நோக்கி செல்வதை எவரும் தடுக்க முடியாது.
அஷ்ஷெய்ஹ் மிப்லால்
தலைவர்
ராசிக் எம். குவைதிர்கான்
பிரச்சாரச் செயலாளர்
alhamthulillah
ReplyDelete