Header Ads



அரசாங்கத்தின் தோல்வியும், முஸ்லிம்கள் மீதான வன்முறைகளும்..!

இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் மீது மீண்டும் மீண்டும் ஏற்படும் தாக்குதல்களால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பிலான விளைவுகள் பற்றி அரசாங்கம் விழிப்புணர்வு அடைந்துள்ளதாகத் தெரிகிறது. இனம் மற்றும் சமயங்கள்  அடிப்படையில் வெறுப்புணர்வினை ஏற்படுத்தக்கூடிய கூட்டங்களை இனிமேல் அனுமதிக்கப் போவதில்லை எனப் பொலிஸார் அறிவித்துள்ளனர். இப்புதிய கொள்கை, வெளிப்பகட்டிற்காக இல்லாது உண்மையாக நடைமுறைப்படுத்தப்படுமானால் அது நிச்சயமாக வரவேற்கக் கூடியதாக  இருக்கும். முஸ்லிம்களுக்கு எதிராக ஏற்பட்ட வன்முறைகளில் முடிவுற்ற பொதுக்கூட்டத்தை பொதுபலசேனா நடத்தியமை தொடர்பில் அதற்கு அனுமதியளித்த பொலிஸார் பலிக்கடாவாகியுள்ளனர்.  இவ்வாறான பின்னணியில் மேற்கூறிய வன்முறைகளை  தூண்டிவிட்டவர்களை கைது செய்து வழக்குத்தொடர அரசாங்கம் பொலிஸ் துறையினருக்கு பணிப்புரை வழங்குமா என்பதில் ஐயமே நிலவுகிறது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ  வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்டித்துள்ளபோதிலும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைவரங்கள் ஆங்காங்கு வன்முறைகள் தொடர்ந்தும் ஏற்படுவதற்கு ஆதரவாகவே இருப்பதால், இவ்வாறான சூழ்நிலையில் வன்முறைகளை  முற்றாக மாற்ற முடியுமா என்பது கேள்விக்குரியதாகவே உள்ளது. 

ஒரு வாரத்திற்கு முன்னர் பெரியளவிலான வன்முறைகளால் பாதிப்புக்குள்ளாகிய அளுத்கம நகரத்திற்கு அண்மையிலான பாணந்துறை என்னும் நகரத்தில் அமைந்துள்ள நோலிமிட் என்னும் பெரியதோர் வர்த்தக நிலையம் தாக்கப்பட்டமையே முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட கடைசி சம்பவமாகும். பொலிஸாரது ஆரம்ப அறிக்கைகளின்படி அந்நிறுவனத்தில் நடு இரவில் ஏற்பட்ட மின்சாரக் கசிவால் அது தீப்பற்றி எரிந்திருக்கலாம் எனக் கூறப்பட்ட போதிலும், அந்நிறுவனத்தில் தீ ஏற்பட்ட நேரம் போன்ற சில காரணிகளை கவனித்துப் பார்க்கும்போது அது அண்மையில் (அளுத்கமவில்) இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டதாக இருக்கலாம் என்ற சந்தேகத்திற்கும் இடமளிப்பதாக உள்ளது.  வெள்ளவத்தை, தெஹிவளை ஆகிய இடங்களில் இருக்கும்  முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடைகளை வியாழக்கிழமை மூடுமாறு ஒரு குழு எச்சரித்ததாகவும் அதனை மீறி நோலிமிட் விற்பனை நிலையங்கள் திறந்திருந்ததாகவும் பொலிஸ் பேச்சாளருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு கடைகளை மூடச்சொன்னதை அடுத்து முச்சக்கர வாடகை வண்டியில் வந்த நால்வரும் மோட்டார் சைக்கிளில் வந்த இருவருமாகச் சென்று திறந்திருந்த  அக்கடைகளின்  முகாமையாளரிடம் ஏனையோர் கடைகளை மூடியிருக்கையில் நீங்கள் மட்டும் ஏன் கடைகளை மூடவில்லை என விசாரித்திருக்கின்றனர். இதிலிருந்து அளுத்கம வன்முறைச் சம்பவங்களை ஒத்தவகையில் இந்த தீவைப்பு சம்பவமும் முன்னதாகவே திட்டமிட்டு செய்யப்பட்ட நாசகாரச் செயல் என்றே நம்ப வேண்டியிருக்கிறது. நிலைமை இவ்வாறிருந்த போதிலும், நாட்டில் நிலவும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளது கடுமையினையும்  முக்கியத்துவத்தினையும் குறைத்துவிடும் வகையில் நாட்டின் பொது நலத்தில் ஆர்வத்துடனும் தேசியத்தில் சிறிதே ஆர்வம் காட்டுபவர்களாகவும் உள்ளவர்கள் சில முயற்சிகளை மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கதாகும். வன்முறைகள் நாட்டின் தேசிய நலன்களுக்கும் ஆர்வங்களுக்கும் தீங்கினை விளைவிக்கக் கூடியவை என்பதால் அவற்றிற்கு முக்கியத்துவம் வழங்கலாகாது என நாட்டில் பொதுநல ஆர்வமிக்க பிரஜைகள் நம்புகின்றனர். 

ஏற்கனவே சில நாடுகளின் அரசாங்கங்கள் இலங்கையில் நிலவும் வன்முறைகள் காரணமாக இலங்கைக்குச் செல்வது ஆபத்தானது என்னும் அறிவுறுத்தலை தமது மக்களுக்குக் கூறியுள்ளன. இதனால் இலங்கையின் சுற்றுலாத் தொழில் எதிர்மறைப் பாதிப்புகளுக்கு ஆளாகலாம். அது மாத்திரமன்றி வெளிநாட்டு முதலீட்டாளர்களும் இன ரீதியாக இடம்பெறும் வன்முறைகளால் தமது முதலீடுகள் தீக்கிரையாவதனை  விரும்பாது, இலங்கையில் முதலீடு செய்வதனைத் தவிர்த்து தமது முதலீட்டுக்கு பாதுகாப்பான நாடுகளை நோக்கி சென்றுவிடும் பாதகவிளைவுகளும் ஏற்படும். தற்போது நிலவும் வன்முறைகளை முக்கிய மற்றதாக்கிவிட விரும்பும் சிலர் வன்முறைகளில் ஈடுபடுபவர்களை கண்டிக்கின்றனர். சிங்கள பௌத்த மக்களில் பெரும்பாலானோர் தமது பெயரில் இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறுவதற்கு தாம் உடன்படத் தயாரில்லை என்று கூறுவதாகவும் கூறப்படுகிறது. அரசியல் இலாபம் அளுத்கமவில் ஏற்பட்டுள்ள  முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளால் இலங்கை சமூகத்தில் இன மற்றும் சமய ரீதியான முனைவாக்கத்தினை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பம் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. அங்கே முஸ்லிம்களது கடைகளையும் வீடுகளையும் தாக்கியவர்களில் பெரும்பாலானோர் வெளிப்பகுதிகளிலிருந்து வந்தவர்களாவர். எவ்வாறாகினும் முன்னர் ஏற்பட்ட தாக்குல்கள் தனிப்பட்ட இலக்குகளை குறியாக வைத்து அதாவது தனிப்பட்டவர்களையும் கடைகளையும் தாக்குவதாக  இருந்திருக்கின்றது. 

முன்னர் ஏற்பட்ட இவ்வாறான முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களின் போது  பொலிஸ் மற்றும்  பாதுகாப்பு  படையினரது எதிர் நடவடிக்கைகள் பெரிதும் தாமதமாகியும் செயல் திறனற்றதாகவும் இருந்திருந்தமை இனங்காணப்பட்டுள்ளது. இதனால் வன்முறைகளில் ஈடுபட்ட கும்பல்கள் செய்த குற்றத்திற்காக தண்டிக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளனர். அவ்வன்முறைகளின் போது பெரும் அழிவுகள் ஏற்பட்டுள்ளன. குறைந்தது நான்கு பேராவது கொல்லப்பட்டிருக்கின்றனர். 80 பேருக்கு மேல் காயப்பட்டுள்ளனர். பல கடைகளும், வீடுகளும் முற்றான அழிவுக்கோ சேதங்களுக்கோ உள்ளாகியுள்ளன. பாதிப்புக்குள்ளானவர்களது உண்மை எண்ணிக்கை இன்னும் அதிகமாகவும் இருக்கலாம். அரசாங்கம் அதன் கடமைகளைச் சரிவரச் செய்வதில் ஒன்றுக்கு மேற்பட்ட விடயங்களில் தவறி தோல்விகண்டுள்ளது. அளுத்கமவில் வன்முறைக் கும்பல்கள் பொதுக் கூட்டத்தினை நடத்த அனுமதித்ததனை உடனடி  தவறாகக் கூறலாம். ஒரு சிறிய முஸ்லிம் குழுவுக்கும் பௌத்த பிக்கு வீற்றிருந்த வாகன சாரதிக்கும் இடையிலான வீதியில் ஏற்பட்ட ஒரு போக்குவரத்து தொடர்பான சச்சரவின் பின்னரே இந்த  வன்முறைக் கும்பலது  பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. மூன்று முஸ்லிம்களுக்கு வாகன சாரதியுடன் ஏற்பட்ட வாய்ச் சண்டையின் தொடர்ச்சியாக அவர்கள் பௌத்த பிக்குவை தாக்கியதாக ஊடகங்கள் அறிவித்துள்ளன. அது ஒன்று. அடுத்த செய்தியின் படி வாகன சாரதியே தாக்கப்பட்டதாகவும் பிக்கு தாக்கப்படவில்லை எனவும் தெரிகிறது. உண்மை எதுவானாலும் சரி இந்த சச்சரவில் முற்றாக சம்பந்தப்படாத முஸ்லிம்களை அவர்கள் சச்சரவில் ஈடுபட்ட ஒரு தரப்பினர் முஸ்லிம்  இனத்தை சார்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களது கடைகள், வீடுகள், உயிர் உட்பட அனைத்தையும் அழித்தமை என்பது முற்றிலும் தவறானதும் ஏற்றுக்கொள்ளவே முடியாததுமான பாதக செயலாகும். இவ்வாறான கூட்டாக மேற்கொள்ளும் பழி தீர்ப்பு நடவடிக்கைகளே இனவாதம் என கூறப்படுகின்றது. 

அவ்வாறு நடந்ததால் உயிரை, சொத்துகளை இனவாத வன்முறைகளின் போது இழந்தவர்களுக்கு,  அரசாங்கம் தனது  கடமையை சரிவரச் செய்யத்தவறியமைக்காக உரிய  நட்ட ஈட்டினை வழங்கி ஈடுசெய்ய வேண்டும். மறுபுறத்தில் பார்க்கும்போது இவவாறான வன்முறைகளை நியாயப்படுத்தி, பின்னின்று தூண்டிவிடுபவர்களுக்கு சென்றடையும் அரசியல் நன்மைகள் பெருமளவாக இருக்கும்.   கடந்த சில வாரங்களாக நாட்டில் நிலவும் ஊழல்கள்  தமிழருக்கு அதிகாரப்பரவலாக்கம் தொடர்பில் அரசாங்கத்துடன் முரண்பட்டுக் கொண்டிருந்த சிங்கள தேசியத்துவக் கட்சிகள், இப்போது இனவாத வன்முறைகள் ஏற்பட்டதும் அரசாங்கத்தை தாங்கிப்பிடித்து பாதுகாக்கத் தொடங்கிவிட்டன. அண்மைய அளுத்கம சம்பவத்தில் நடைபெற்றவை என்ன என்பது பற்றி சரியான தகவல் தெரியாத பெரும்பான்மையான சிங்களவர்களிடம் இந்த தேசியத்துவ கட்சிகள் அதற்கு காரணமானவர்கள் முஸ்லிம்களே என்றும் அவர்களே வன்முறையை முதலில் ஆரம்பித்ததாகவும் பிரசாரம் செய்கின்றனர். இதனைப் பயன்படுத்திக் கொள்ளத் தயாராக உள்ள அரசாங்கமும் சிங்கள மக்களை அணிதிரட்டி சர்வதேச ரீதியான ஒரு சதித்திட்டம் எமது நாட்டின் மீது அபகீர்த்தி ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டு வருவதாக மறுபுறத்தில் பிரசாரம் செய்து வருகிறது. இதனால் இலங்கை அரசாங்கத்திற்கு அரசியல் இலாபம் வந்து சேருவதால் அது இரண்டு வருடங்களாக நாட்டில் தொடர்ந்து வரும் இன, சமய ரீதியான வன்முறைகளை நீடித்திருக்கச் செய்வதில் ஆர்வம் கொண்டிருப்பதில் அதிசயம் ஏதுமில்லை. 

அரசாங்கத்தின் தோல்விகள் வன்முறை நிலவரத்தினை தொடர்ந்து நாட்டில் இருந்து வரச்செய்வதனால் அது பாதிக்கப்பட்டவர்களிடையே தீவிரவாத அல்லது அதற்கு இட்டுச் செல்லும் அடிப்படைவாத கருத்துகளை வளரச் செய்யும் ஆபத்துண்டு. தற்போது சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையிலான சமூக உறவுகள் ஒருவரை ஒருவர் அச்சத்துடன் நோக்குடனான ஒன்றல்ல. சமூகங்களிடையே ஒருவரைப் பற்றி மற்றவர்கள் தவறாகப் புரிந்து கொள்ளுதலும் தப்பெண்ணங்களைக் கொண்டிருத்தலும் உலகில் சகஜமாக நிலவுவதொன்றாகும். ஆயினும், ஒரு சிலர் மற்றவரது கலாசாரத்தினையும், சமய அனுஷ்டானங்களையும் தாழ்வாக எண்ணி, வெறுப்புடன் நோக்கினாலும் கூட மற்றவர்களைப் பார்த்து அச்சம் கொள்வதில்லை. ஆனால் இப்போது காலத்திற்குக் காலம் வன்முறைகளில்   ஈடுபட்டுவரும் பொது பலசேனா போன்ற நிறுவனங்கள் வளர நாட்டில் அனுமதிப்பார்களேயானால் இவ்வாறான நிலைமைகள்  (ஒருவரைக்கண்டு மற்றவர் அஞ்சாத நிலை) மீது மாற்றம் ஏற்படும் ஆபத்துண்டு. ஏனைய சமூகத்தினரைத் தாக்கும் அமைப்புகளை ஊடகங்களில் சில பிரிவினர் அரசியல் நோக்கங்களின் காரணமாக மதித்து போற்றுவதால் அது இளைய தலைமுறையினர் சிலருக்கு ஒரு முன் மாதிரியாகி அவர்களையும் இவ்வாறான வன்முறைகளுக்கு எதிர்காலத்தில் ஈடுபடச்செய்ய ஏதுவாகிவிடலாம். அதன் விளைவாக இலங்கை மென்மேலும் முரண்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதாகிவிடும். 

அண்மையில் தான் நாம் ஒரு முரண்பாட்டிலிருந்து சற்றே வெளிவந்திருக்கிறோம். ஆனால், இப்போது இன்னுமொன்றை நோக்கி வலியச்சென்று கொண்டிருக்கிறோமா? முஸ்லிம்களோ அவர்களுடைய முரண்பாடுகளுக்கான தீர்வு வழியாக இணைந்து செயற்படும் வழியினையே தெரிந்திருக்கிறார்கள். தமது உரிமைகளை நிலை நிறுத்தும் முயற்சிகளின் போதும் கூட அரசாங்கத்தின் கொள்கையினையே அடிப்படை சட்டவரம்பாகக் கொண்டு அதனுள் இருந்தவாறே செயற்பட்டு வருகின்றனர். முஸ்லிம்கள் இலங்கையில் ஏனைய சமூகங்களுடன் இணைந்து வாழவே தீர்மானித்திருக்கிறார்களே ஒழிய, அவர்கள் பிரிந்து போய்விட ஏதும் விருப்பம் காட்டுவதாகத் தெரியவில்லை. இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்  ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளரிடம் இலங்கையில் முஸ்லிம்களை தொல்லைப்படுத்தும் வகையில் இடம்பெற்ற சம்பவங்கள் பற்றிய விபரங்களை உள்ளடக்கிய தகவல்களை வழங்கியிருந்த போதிலும், அக்கட்சி இன்னும் அரசாங்கத்தின் ஒரு பங்காளியாகவே தொடர்ந்தும் இருந்து செயற்பட்டு வருகிறது. அமைச்சர் ரிசாத் பதியுதீனும் பொதுபலசேனா தனது அமைச்சில்  வன்முறையாக நுழைந்து தனக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள போதிலும் அவரும் இன்னும் அரசாங்கத்திற்கு தன்னை அர்ப்பணித்தவராகவே இருந்து வருகிறார். இது ஒரு புறத்தில் நடைமுறை நிலைமைகளுக்கு உட்பட்டவகையில் செயற்பட்டு தமது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள விரும்புவதனையும் மறுபுறத்தில் மனித நலனுக்கு பயன்படுகிற அளவுக்கு ஒன்றினை மதிப்பிட வேண்டுமென்ற கோட்பாட்டின் வழிவந்த பயனீட்டுவாத (Pragmatism) கொள்கையினை பின்பற்றுவதனையும் காட்டுவதாக உள்ளது. 

இலங்கையில் பெரும்பாலானவர்களைக் கொண்ட சமூகம் இக்கொள்கையினைப் பாராட்டி, பேணி அதனிலிருந்து  நிலவரங்களை கட்டியெழுப்ப முன்வரவேண்டும். சர்வதேச அனுபவங்கள் மாத்திரமின்றி இலங்கையில் அதன் சொந்த அனுபவங்களுமே, சமூகங்களுக்கிடையிலான உறவுகள் எளிதில் முறியக் கூடியதாயிருப்பதனை காட்டி நிற்கின்றன. அதனை தொடர்ந்து எப்போதும் எச்சரிக்கையுடன் பாதுகாத்து வருதல் வேண்டும். அதுவே ஜனநாயகத்திற்கான விலையுமாகும். ஆனால், அரசாங்கமோ முஸ்லிம்களும் ஏனைய சிறுபான்மையினத்தவர்களும் இலங்கையின் பன்முகப்பட்ட சமூகத்தின் பிரதான அங்கங்கள் என்பதனை முன்வந்து உறுதி செய்ய  விரும்பாது நடந்துகொள்வதையும், அவர்களுக்கு எதிராக வெறுப்புப் பிரசாரங்கள் செல்வதனையும் அனுமதிக்க முடியாது எனக் கூறக் கூடத் தயங்குவதும் அது அடைந்துள்ள பெரும் தோல்வியாகும். மாறாக பொது பலசேனா கடந்த  இரண்டு வருடங்களாக இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடென்ற கருத்தை பிரசாரம் செய்வதுடன், குறிப்பாக முஸ்லிம்களே இலங்கைக்கான அச்சுறுத்தல் என்றும் பிரசாரத்தையும் செய்து வருகின்றது. அளுத்கமவிலோ அல்லது நாட்டின் ஏனைய பகுதிகளிலோ முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்களுக்கு எதிரான சட்ட அல்லது அரசியல் நடவடிக்கைகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. ஒரு இன ரீதியிலான உள்நாட்டு யுத்தம் நடந்து முடிந்து ஐந்து வருடங்களில் அப்பாவி மக்களை துயரத்தில் ஆழ்த்தும் இன்னுமோர் இன ரீதியான வன்முறைக்கு தூபமிடுவது பெரும் கவலைக்குரியதாகும். இதற்காக இனங்கள் ரீதியாக வெறுப்பினை தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபடும் எவர் மீதும் முற்றாக சகிப்புக் குணத்தை பேணாத கொள்கையை கையாள வேண்டியத் தேவை இலங்கைக்கு அத்தியா வசியமாகிவிட்டது. 

No comments

Powered by Blogger.