யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் வர்த்தக நிலையங்களை பதிவு செய்யுமாறு கோரவில்லை
யாழ் நகரிலும், முஸ்லிம் பிரதேசங்களிலும் காணப்படுகின்ற முஸ்லிம் வர்த்தக நிலையங்களை பொலிஸ் புலனாய்வாளர்கள் என தம்மை அடையாளப்படுத்திய இருவர் பதிவுகளை மேற்கொண்டுள்ளார்கள் இதுகுறித்து விளக்கமளிக்குமாறு வடக்கு மாகாணசபை உறுப்பினர் அ.அஸ்மின் அவர்கள் யாழ் பிரதி பொலிஸ் மா அதிபர் அவர்களுக்கு விளக்கம்கோரி கடிதமொன்றினை அனுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள பொலிஸ் மா அதிபர் அவர்கள் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் அத்தகைய பதிவுகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என்றும், யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு அமைச்சினைச் சேர்ந்த பல்வேறு புலனாய்வுப் பிரிவுகள் இயங்குகின்றன அவற்றுள் ஏதேனுமொரு பிரிவு குறித்த பதிவுகளை மேற்கொண்டிருக்க முடியும் எனினும் எத்தகைய பிரிவு அவ்வாறு பதிவுகளை மேற்கொண்டுள்ளார்கள் என எமக்குத் தெரியாது. ஆனால் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் புலனாய்வுப் பிரிவினர் ஏதேனும் தகவல் திரட்டினை மேற்கொண்டிருப்பின் அதனையிட்டு அச்சமைடையத் தேவையில்லை அது ஏதேனும் நன்மைக்காகவே இருக்கும், முஸ்லிம்களுக்கு விஷேட பாதுகாப்பு வழங்கும் நோக்கத்துடன் அது இடம்பெற்றிருக்க முடியும் என்றும் குறிப்பிட்டார், எதற்காக முஸ்லிம்களை மாத்திரம் பதிவு செய்தார்கள் ஏனைய வர்த்தகர்களையும் பதிந்திருக்க முடியும்தானே என்று கேட்டபோது அது குறித்த விளக்கங்கள் தமக்குத் தரமுடியாது என்றும் குறிப்பிட்டார்.
எனினும் முஸ்லிம்களை அச்சுறுத்தும் வகையில் புலனாய்வாளர்கள் என தம்மை அடையாளப்படுத்துவோர் செயற்பட்டால் உடனடியாகத் தமக்குத் தகவல் தருமாறும் பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.
இதனடிப்படையில் புலனாய்வாளர்கள் என தம்மை அடையாளப்படுத்துவோர் விடயத்தில் முஸ்லிம்கள் கவனமாக இருக்குமாறும், அவ்வாறான பதிவு நடவடிக்கைகளுக்கு வருவோரிடம் எழுத்துமூலமான அனுமதி இருந்தால் மாத்திரமே தகவல்களை வழங்கும்படியும் அவ்வாறு இல்லாத சமயத்தில் உடனடியாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கும்படியும் மக்கள் கோரப்படுகின்றார்கள் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment