'சிங்கள பெளத்த மாயையைக் காட்டி, அரசு மக்களின் வாக்குகளை கொள்ளையடிக்கின்றது'
'பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா செளக்கியமா' அதைப் போன்று இன்று பலமுள்ள பின்னணியில் இயங்கும் பொதுபலசேனா நாட்டுக்குள் தனது நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது என தெரிவித்த ஜே.வி.பி. யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா. சர்வதேச விசாரணைக்கு பின்னரான தீர்ப்பு நாட்டுக்கு பாதகமானதாகவே இருக்கும். ஆனால் அரசுக்கு இது தொடர்பில் கவலையில்லை. ஆட்சியதிகாரத்தை தக்கவைப்பதே அவர்களது முதல் நோக்கமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி. யின் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அதன் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா இதனை தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
நாட்டை பற்றியோ கெளரவத்தை பற்றியோ அரசாங்கம் சிந்திப்பதில்லை. மாறாக தமது ஆட்சியதிகாரத்தை எவ்வாறு தக்க வைத்துக்கொள்வது என்பது தொடர்பிலேயே கவனம் செலுத்துகின்றது.
கல்வி, சுகாதாரம், போக்குவரத்து பிரச்சினைகள் மட்டுமல்ல இன, மதப் பிரச்சினைகளையும் அது எவ்வாறு தமது அரசியல் லாபத்துக்காக பயன்படுத்துவது என்ற கொள்கையையே அரசாங்கம் கடைப்பிடிக்கின்றது.
இதன் பின்னணியில் அரசாங்கமும், பலமுள்ள ஒரு பின்னணியும் உள்ளது. எனவே தான், ''பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா செளக்கியமா'' என்பதை போன்று இவ் அமைப்பு செயற்படுகின்றது. அரசாங்கம் உண்மையிலேயே சிங்கள பெளத்தத்தை மதிக்கவில்லை. பாதுகாக்கவில்லை. அவ்வாறானதொரு மாயையைக் காட்டிக்கொண்டு மக்களின் வாக்குகளை கொள்ளையடிக்கின்றது.
உண்மையிலேயே அரசாங்கம் சிங்கள பெளத்தர்களை நேசித்தால் மகாநாயகா தேரர்களின் எதிர்ப்பை ஏற்றுக்கொண்டு கண்டி புனித நகரில் கார் பந்தயத்தை நடத்தாமல் இருந்திருக்க வேண்டும்.
ஆனால், எவ்வாறாவது ஒரு மகாநாயக்கரின் அனுமதியை பெற்று கார் பந்தயத்தை நடத்தியது. இதுவா பெளத்தத்தை மதிக்கும் இலட்சணம் என்றும் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
Post a Comment