'பொதுபலசேனாவுடன் சம்பந்தமில்லை என்ற கோத்தபாயவின் கருத்தை நம்ப தயாரில்லை'
பொதுபலசேனாவிற்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்ற கோத்தபாய ராஜபக்சவின் கேலிக்கையான கருத்தை நாங்கள் நம்ப தயாரில்லை என நவசமசமாசக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தனக்கும் பொதுபலசேனாவிற்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்று கூறுகிறார். அவ்வாறு கூறிய பின்புதான் குற்றப்புலனாய்வு பிரிவு பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரிடம் விசாரணை செய்கிறது. அதேபோன்று, இலகுவில் பெற்றுக்கொள்ள முடியாத விசாவினையும் அமெரிக்கா தடை செய்துள்ளது.
ஆகவே, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் கேலிக்கை மிகுந்த கருத்தினை நம்பத் தயாரில்லை. பொதுபலசேனா அமைப்புக்கும் கோத்தபாய ராஜபக்சவுக்குமிடையே உள்ள தொடர்புகள் சம்பந்தமான ஆதாரங்கள் தம்மிடம் இல்லையென்றாலும் அவ் அமைப்புடன் பாதுகாப்பு செயலாளருக்கு தொடர்பு இருக்கும் என்பதை செயலில் வைத்து கண்டுபிடித்து விட முடியும்.
அளுத்கம கலவரத்தின்போது பாதுகாப்பு பிரிவினர் செயற்பட்ட விதத்தையும் பொதுபலசேனாவுக்கு அளுத்கமவில் ஊர்வலம் செய்வதற்கு அனுமதி வழங்கியதிலிருந்து இது பாதுகாப்பு செயலாளரின் நடவடிக்கையென தெரிகிறது என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இக்கலவரத்திற்கு நாடு பூராகவுமுள்ள அனைவரும் எதிர்ப்பினை வெளியிட்டனர். தற்போது அப்பிரதேசத்திற்கு 700 இராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதன் பிரகாரம் பேருவளையில் வீதிகளை சீர்செய்தல், வீதி கடைகள், வீடுகளை திருத்தியமைத்தல், தேநீர் தயாரித்தல் போன்ற வேலைகளை செய்கின்றனர்.
இதனால் யாழ்ப்பாணத்தை போன்று பேருவளையிலும் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு தற்போது பொலிஸாருக்கு கூட நியாயம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment