தலைமைகளின் தவறுகளால் ஒடுக்கப்படும் முஸ்லிம்கள்..!
"ஏறச் சொன்னால் கழுதைக்கு கோபம்... இறங்கச் சொன்னால் முடவனுக்கு கோபம்' என்பார்கள். இந்த நிலைதான் இன்று மஹிந்த அரசாங்கத்தில் அமைச்சர்களாக சிம்மாசனம் வீற்றிருக்கின்ற முஸ்லிம் தலைமைகளுக்கு ஏற்பட்டிருக்கின்ற இக்கட்டான நிலைமையாகும்.
தனது சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் சமூகத்தைப் பல்வேறுபட்ட வழிகளிலும் மேம்படுத்தக்கூடிய வகையில் அரச மற்றும் அரசியல் பதவிகளில் இருக்கும் போதே அசுர வேகத்தில் பங்காற்ற முடியுமென்பதையே முஸ்லிம் தலைவர்கள் மேடைகளில் பேசக்கூடியதாகவும் ஊடகங்களில் அறிக்கை விடக்கூடியதாகவும் அமைந்திருக்கின்றதே தவிர, தான் சார்ந்திருக்கின்ற சமூகம் தற்போது சந்திக்கின்ற எந்தவித நெருக்கடிகளையும் எதிர்கொள்ளத்தக்கதான எவ்வித உருப்படியான திட்டங்களும் தற்போதைய முஸ்லிம் தலைமைகளிடமும் கட்சிகளிடமும் இல்லையென்ற சந்தேகங்கள் முஸ்லிம் மக்களிடத்தில் தற்போது ஏற்பட்டிருப்பது விந்தைமிகு விடயமல்ல.
அண்மையில் அளுத்கம மற்றும் பேருவளை போன்ற இடங்களில் ஏற்பட்ட அமைதியின்மையையும் சிறுபான்மையின முஸ்லிம் மக்கள் மீதான வலிந்த தாக்குதல்களும் பொருளாதார மற்றும் உயிர் இழப்புகளும் இன்னும் முழுமையாக முடிவிற்குள் கொண்டு வரப்படாத சூழ்நிலையில் இனமுறுகல் மேலும் நாடு முழுவதும் வியாபிக்கக்கூடிய ஆபத்தான நிலைமைகள் நாளுக்குநாள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன.
இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை இன ரீதியில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு இன்றுவரை எதையுமே ஆரம்பிக்காத நிலையில் சர்வதேச சமூகத்திடம் கடந்த காலங்களில் அளித்திருந்த வாக்குறுதிகளும் உத்தரவாதங்களும் பொய்த்துப் போன ஒன்றாகவே கருதப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன. சிறுபான்மைச் சமூகங்கள் மீது தொடர்ச்சியாக பரவலாக நடைபெற்று வருகின்ற ஒவ்வொரு செயற்பாடுகளும் நாகரீகமடைந்துள்ள மனித சமுதாயத்திற்கு வேண்டப்படாத எவராலும் விரும்பத்தகாத ஒன்றாகவே வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றது.
நடைபெற்ற சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமற்ற முறையில் அவர்கள் மீதான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென சகல சம்பந்தப்பட்ட தரப்பினருக்கும் தான் உத்தரவு பிறப்பித்துள்ளதாக ஜனாதிபதி மிக உறுதியாக தெரிவித்திருந்தார். அத்துடன் மேற்படி சம்பவங்களை பூரணமாக விசாரணை மேற்கொள்வதற்காக ஆணைக்குழு ஒன்றையும் நியமித்திருந்தார். ஆனால் இதுவரை எதுவுமே நடைபெற்றதாகவோ அல்லது குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்பட்டதாகவோ நீதியின் முன் நிறுத்தப்பட்டதாகவோ செய்திகள் வெளியாகவில்லை.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை எத்தனையோ ஆணைக் குழுக்களையும் விசாரணை அறிக்கையையும் கண்டு வியந்திருக்கின்றார்களென்பது அறுபது வருட அரசியல் வரலாற்றில் கசப்பான உண்மை. இலங்கையின் அரசியல் வரலாற்றில் நாட்டின் எப்பாகத்திலும் எத்தகைய சம்பவங்கள் நடந்தாலும் அச்சம்பவத்தைக் கண்டித்து விடும் பாசாங்கு அறிக்கைகளும் விரிவான விசாரணை என்ற போர்வையில் மறைந்து போகின்ற உண்மைகளும் நீண்டு செல்வதானதே இலங்கை ஆட்சியாளர்களின் புளித்துப் போன வரலாறு. எத்தனையோ ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் நீண்டநாட்களாகத் தூங்கிக் கொண்டிருக்கின்றன.
அப்படியிருக்கும் சூழ்நிலையில் அளுத்கம மற்றும் பேருவளை சம்பவங்களுக்குத் தனியான விசாரணை அறிக்கையும் ஜனாதிபதி ஆணைக்குழுவும் பாதிக்கப்பட்டுள்ள தரப்புகளுக்கு நியாயம் கிடக்குமெனச் சொல்வதும் அதை நம்புவதும் கேலிக் கூத்தான விடயமென்பதை அரசாங்கத்தின் அமைச்சர்களே இன்று விவாதப் பொருளாக்கிவிட்டனர்.
இலங்கையின் அரசத் தலைவர் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்து அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடிய பின்னரும் நாட்டின் பல்வேறு இடங்களிலும் இன வன்முறையைத் தூண்டக் கூடிய துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் தொடரத்தான் செய்கின்றன. இந்த இனவாதக் கும்பலைக் கண்டு பிடிப்பதும் அவர்கள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அரசாங்கத்திற்கு பெரும் சவால் மிக்கதான ஒருவிடயமல்ல. ஏனெனில் பெருமளவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தும் குழுக்களாக வந்து எப்படி சிறுபான்மையின மக்களின் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த முடியுமென அமைச்சர் ஹக்கீம் தொடர்ச்சியாக எழுப்புகின்ற கேள்விகள் பொலிஸாரின் பொறுப்பையும் கடமையையும் கேள்விக்குறியாக்கியிருக்கின்றது.
ஊரடங்கு நிலை அமுலில் இருக்கும் போது எப்படி ஏனைய தாக்குதல்கள் மேலும் நடைபெற்றன என்ற கேள்விகள் ஒரு சராசரி மனிதனிடம் ஏற்படுவது இயல்பானது.
இலங்கையின் அமைச்சரவையில் உள்ள அனேகமான முஸ்லிம் அமைச்சர்கள் அன்று ( பேருவளை சம்பவம் நடைபெற்ற வேளை) அளுத்கம சம்பவத்தை அடக்கி வாசிக்க முற்பட்டார்களென்பது உலகறிந்த உண்மையாகும். தாக்குதல்கள் நடைபெற்ற உடனேயே உணர்ச்சிவசப்பட்டு எதையானது வாய் தவறி ஊடகங்களிடம் சொல்லிவிட்டால் அமைச்சர் ரிசாத்திற்கு நடந்த விரும்பத்தகாத நிலைமையே ஏற்படுமென்பதை அறிந்திருந்தவர்களாக முஸ்லிம் அமைச்சர்கள் இருக்கவில்லை.
திட்டமிட்ட முறையில் சிறுபான்மையின மக்கள் மீது கட்டவிழ்த்து விடுகின்ற வன்முறை கலாசாரங்கள், இன முரண்பாடுகள் இன்று நேற்று ஆரம்பிக்கப்பட்ட ஒன்றல்ல. சுதந்திரத்திற்குப் பின்னர் ஆமை வேகத்தில் ஆரம்பித்திருந்த ஒடுக்கு முறைகள் இன்று வெவ்வேறான விம்பங்களையே தோற்றுவித்திருக்கின்றன. இன்று அளுத்கம மற்றும் பேருவளை சம்பவங்களைத் தான் நாம் கண்டிருக்கின்றோம். இதற்கு முன்பெல்லாம் எத்தனையோ சம்பவங்கள் நடைபெற்று முடிந்திருக்கின்றன. சிறுபான்மையின மக்களுக்கெதிராக தொடர்ச்சியாக பேரினவாதிகளால் விடுக்கப்படுகின்ற அத்தனை அச்சுறுத்தல்களுக்கும் எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் பாரிய கவனயீர்ப்புப் போராட்டத்தையும் ஆர்ப்பாட்டத்தையும் துணிந்து நடத்தியிருந்தார்கள். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தனது பங்களிப்பை வழங்கியிருந்தது. இச்சம்பவம் உலகில் பல்வேறு நாடுகளிடையே பலவிதமான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது மட்டுமல்லாது, கிழக்கிலிருக்கக்கூடிய முஸ்லிம் சிறுபான்மையின மக்களையும் வெகுவாக முகஞ்சுழிக்க வைத்திருந்தமையும் இப்பத்தியில் எழுத வேண்டியது மிக முக்கிய விடயமாகும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நெருக்கமான தொடர்புகள் இருப்பதாக அடிக்கடி ஊடகங்களில் கூறிக் கொள்ளும் முஸ்லிம் தலைமைகள், தமிழ் மக்களுக்கு கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கும் மேலாக மாறிமாறி ஆட்சி புரிந்த பேரினவாத அரசாங்கங்கள் எண்ணிலடங்காத அட்டூழியங்களை எமது மண்ணில் புரிந்திருக்கின்றமை மறக்கப்படாத உண்மை. அப்படியான சம்பவங்களுக்காக ஒரு வார்த்தையேனும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் தங்களுடைய ஆதரவுக் குரலை எங்கேயாவது பதிவு செய்ததாக வரலாறு இன்று வரை இல்லை.
மூன்று நாட்களுக்குள் முஸ்லிம் மக்களுக்காக நடைபெற்ற சம்பவங்களுக்காக தமிழ்த் தலைமை அரசுக்கெதிராகப் போர்க்கொடி தூக்கி வீதிக்கு இறங்கியிருக்கிறது. ஆனால் தமிழ் மக்களுடைய நீண்டு நெடித்த முப்பது வருடகால போராட்டத்தில் எத்தனையோ துன்பங்கள் துயரங்கள் அதற்கெல்லாம் குரல் கொடுக்க முஸ்லிம் தலைமைத்துவங்கள் மறந்ததேனோ?
இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை தமிழர்கள் முஸ்லிம்கள் என்பது அவர்களுக்கு இங்கு ஒரு பாரிய பிரச்சினையல்ல. சிறுபான்மை இனமாக தங்கள் இன அடையாளத்துடன் வாழக்கூடியவர்கள் தங்கள் காலடியில் தவழ வைக்கின்ற நிகழ்ச்சி நிரலையே அடிப்படையில் கொண்டுள்ளார்களென்பதை இரு சமூகமும் நிதானமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்றைய முஸ்லிம் மக்களுடைய அரசியல் சூழ்நிலையில் முஸ்லிம் அரசியல் தலைமைகளுள் சற்று வித்தியாசமானவராக வாழ்ந்து வளர்ந்து வருகின்ற கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலி அனைவராலும் உற்று நோக்கப்படுகின்றார். அதுமட்டுமல்லாமல் நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் அவரின் கருத்துகளுக்கு பாரிய வரவேற்புக் கிடைத்து வருகின்றமை புதிதான வியப்பான ஒரு செய்தியாகி விட முடியாது.
வளர்ந்து வருகின்ற ஒரு இளம் அரசியல் வாதி என்பதையும் முஸ்லிம் மக்கள் குறிப்பாக முஸ்லிம் சமூக புத்திஜீவிகள் புரிய ஆரம்பித்துள்ளார்கள்.
கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசிற்கு எதிராக கருத்து கூறியே தேர்தலில் போட்டியிட்டார் என்பதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கின் ஆட்சியதிகாரத்தைக் கையகப்படுத்த வேண்டுமென்பதில் தெளிவான நிலைப்பாட்டை கொண்டிருந்தார். அதுமட்டுமல்ல சிறுபான்மை இனங்களும் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைத்திட வேண்டுமென்பதற்காக பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் துணிந்து நின்று பகிரங்கமாக கருத்து வெளியிட்டவர் என்பதையும் தமிழ், முஸ்லிம் மக்கள் என்றும் மறக்கமாட்டார்கள்.
எதிர்காலத்தில் தமிழ் மக்கள் கூட அஸாத் சாலியை போன்ற வித்தியாசமிக்க புதிய முஸ்லிம் தலைமை உருவாவதற்கு ஆதரவு நல்கினாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. இன்று முஸ்லிம் மக்களிடத்தில் ஏற்பட்டுள்ள தலைமைத்துவ இடைவெளியை நிரப்புவதற்கு பொதுவான விமர்சனங்களுக்கு அப்பால் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப்பிற்குப் பின்பு எவருமில்லாத ஒரு வெறுமையே வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது.
தனது சமூகம் நேரடியாகப் பாதிப்புற்று விரக்தியின் விளிம்பில் நிற்கும் போது உணர்ச்சிகளுக்கு மட்டும் முதலிடம் கொடுக்காமல் புத்தி கூர்மையுடன் செயற்பட முயலவேண்டுமென பொருளாதார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் போதனையானது ரோம் நகர் தீப்பற்றி எரியும் போது மன்னர் பிடில் வாசித்த கதையே நினைவுக்கு வருகிறது. அரசு எங்கள் சமூகத்திற்கு எத்தகைய தீங்கிழைத்தாலும் நாம் அமைச்சர் பதவிகளை மட்டும் துறப்பதற்கு தயாராக இல்லையென்பதையே அண்மைக்கால முஸ்லிம் அரசியல் தலைவர்களின் செயற்பாடுகள் கட்டியம் கூறி நிற்கின்றது.
இலங்கை அரசாங்கம் தங்களின் அரசியலுக்காக சிறுபான்மையினத்தவரை சந்தர்ப்பங்களுக்கெல்லாம் பாவிப்பதற்குப் பழக்கப்பட்டு விட்டது. இதையெல்லாம் இன்றைய முஸ்லிம் தலைமைகள் சரியாகப் புரிந்து கொள்ளாமல் தங்களின் அமைச்சுப் பதவிகளுக்கும் ஏனைய சுயநலன்களைத் தக்க வைத்துக் கொள்வதற்கும் அரசின் பிழையான போக்குகளுக்குப் பின்னால் இழுபட்டுச் செல்வார்களாயின் தன் சமூகத்தை பாரிய பின்னடைவிற்குள்ளும் அசுர பாதாளத்திற்குள்ளும் தள்ளிவிட்ட வரலாற்றுப் பெருமை இன்றைய முஸ்லிம் தலைமைகளையே சாரும்.
அளுத்கம மற்றும் பேருவளை சம்பவங்களின் போது இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பான புனரமைப்பு வேலைகளை செய்வதற்கும் அதைக் கண்காணிப்பதற்கும் படைத்தரப்பினர் முழுமையாக ஈடுபட்டிருக்கின்றார்கள் என்றால் இந்நாட்டில் எத்தகைய ஆட்சி நடைமுறையில் உள்ளதென்பதை சாதாரணமாகவே எவராலும் ஊகிக்க முடியும். நகர அபிவிருத்தியென்பது பாதுகாப்பு அமைச்சிற்குள் உள்வாங்கப் பட்டிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானதாகும்.
தமிழ் மக்கள் பல்வேறு விதமான ஒடுக்கு முறைக்குள் இன்னும் உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அப்பாவி இளைஞர்களின் கைதுகள் முதல் காணி அபகரிப்பு வரை தொடர்ந்து கொண்டே செல்கிறது. தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் இணைந்து பரஸ்பரம் செயலாற்ற வேண்டியதே காலத்தின் இன்றைய தேவையாகும். இதற்கு ஒரு தரப்பினது தலைமைகள் மட்டும் செயலாற்றுவது சற்று மந்தகதி நிலைமையையே நிச்சயம் உருவாக்கும். எனவே இருதரப்பு அரசியல் தலைமைகளும் இனியாவது மனம் விட்டுப் பேசி யதார்த்த நிலைக்கு வர வேண்டும்.
அதை விடுத்து என் சமூகத்திற்கு எது நடந்தாலும் பரவாயில்லை எனக்கூறிக் கொண்டு என்றும் அரசுடந்தான் (அமைச்சர்களாக) ஒன்றித்திருப்போமென்ற துரதிர்ஷ்ட வசமான சிந்தனை முஸ்லிம் தலைமைகளிடம் அடிப்படையில் இருக்கும் வரை முஸ்லிம் சமூகம் மீதான அரசின் அச்சுறுத்தல்களும் விரும்பத்தகாத செயற்பாடுகளும் தொடர்ந்து கொண்டே இருக்குமென்பதில் இருவேறு கருத்துக்கு இடமேயில்லை எனலாம்.
அக்கரையூரான்
Post a Comment