முஸ்லிம்களுக்கு எதிரான அளுத்கம வன்முறை - ஹக்கீமிடமிருந்து பதிலை எதிர்பார்க்கும் ரணில்..!
அளுத்கம, பேருவளை வன்முறைச் சம்பவங்களின் போது கொல்லப்பட்டவர்கள் தொடர்பான மரண விசாரணை அறிக்கைகளுக்கும் கண்கண்ட சாட்சியங்களுக்குமிடையில் முரண்பாடுகள் இருப்பதால் இவ்விவகாரம் பாரிய சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது என எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை அமர்வின் போது எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நிலையியற் கட்டளை 23 இன் கீழ் இரண்டில் அளுத்கம சம்பவம் தொடர்பில் கேள்வியொன்றை எழுப்பியே மேற் கண்டவாறு சந்தேகம் வெளியிட்டார்.
இங்கு அவர் மேலும் கூறுகையில்,
அளுத்கம மற்றும் பேருவளை பகுதிகளில் இடம் பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் வெலிப்பிட்டிய பிரதேசத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேற்படி இரு உயிரிழப்புக்களும் துப்பாக்கிச்சூட்டினாலேயே ஏற்பட்டுள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். இருந்த போதிலும் வெட்டுக்காயங்கள் காரணமாகவே இந்த மரணங்கள் சம்பவித்திருப்பதாக மரண விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு காணப்படுகிறது. அதனால் இதில் பாரிய சந்தேகம் நிலவுகின்றது.
கடந்த மாதம் 22 ஆம் திகதி சிலோன் டுடே எனும் ஆங்கில பத்திரிகையில் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் வழங்கியிருக்கும் செவ்வியின் மூலம் மேற்படி சந்தேகம் வலுவாகியுள்ளது.
வெலிப்பிட்டிய பிரதேசத்தில் இருவர் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் அது தொடர்பான மரணவிசாரணை உள்ளிட்ட ஏனைய விசாரணைகளும் அப்பட்டமாக இருப்பதாகவும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டமைக்கான சாட்சியை தம்மால் முன்வைக்க முடியும் என்றும் மேற்படி பத்திரிகை செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.
நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறுவது போன்று மரண விசாரணை அறிக்கையிலும் பொய்யுரைக்கப்பட்டிருக்குமானால் அது பாரதூரமான விடயமாகும்.
மேலும் மேற்படி கொலைகள் தொடர்பில் இடம் பெற்ற நீதிவான் விசாரணைகளின் போதும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரசன்னம் இருக்கவில்லை
சம்பவத்தில் பாதிக்கப்பட்டோர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தாக்குதலுக்குள்ளான பகுதிகளுக்கு இரசாயனப்பகுப்பாய்வாளர்கள் அழைக்கப்படவில்லை என்ற விடயத்தை நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளார்.
தீ விபத்து இடம் பெற்ற பகுதிகளுக்கு இரசாயனப்பகுப்பாய்வாளர்கள் அழைக்கப்பட்டு ஆராய்ந்து இயல்பான ஒன்றாகும். எனினும் இங்கு இரசாயனப்பகுப்பாய்வாளர்களை அழைக்கப்பட்டிருக்கவில்லை. அத்துடன் விசாரணைக்குத் தேவையான தடயங்களை இல்லாது செய்யும் வகையில் தீக்கிரையாக்கப்பட்ட இடங்களில் சிதைவுகள் அப்புறப்படுத்தப்பட்டு புனர் நிர்மாணப் பணிகளும் இடம் பெற்று வருகின்றனர். இதிலும் இராணுவமே ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேற்படி பகுதிகளில் சிதைவுகளை அகற்றுவதற்கும் புனர் நிர்மாணங்களை மேற்கொள்வதற்கும் நீதிமன்றம் தற்போது தடை விதித்துள்ளது. எனினும் வேறு பகுதிகளில் தடயங்களை மறைக்கும் நடவடிக்கை இடம் பெற்று வருகிறது. இதனை இந்த சபையின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.
எனவே இவ்விடயம் தொடர்பில் நீதியமைச்சர் என்ற வகையில் நீங்கள் எடுத்துள்ள நடவடிக்கை என்ன?
மரண விசாரணை அறிக்கையை முறையாக தயாரிக்கத் தவறியவர்கள் தொடர்பில் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள்.
நீதியமைச்சின் கீழ் இயங்கும் அதிகாரிகள் வெளிச் சக்திகளுக்கும் அழுத்தங்களுக்கும் உட்பட்டு செயற்படுவது நீதித்துறையின் தரத்தைக் குறைப்பதற்கு ஏதுவாக அமையும் என்பதை ஏற்கின்றீர்களா?
எதிர்காலத்திலும் இத்தகைய நிலை எழாதிருக்க நீங்கள் எடுக்கும் நடவடிக்கை என்ன? நீதிவான் விசாரணையின் போது சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரசன்னம் தவிர்க்கப்பட்டமைக்கான காரணம் யாது?
எனும் கேள்விகளுக்கு நீதியமைச்சரிடமிருந்து பதில்களை எதிர்ப்பார்க்கின்றேன் என்றார்.
இந்த விடயத்தை பாராளமன்றத்தில் பதிவு செய்ததற்காக மிக்க நன்றி ரணில் விக்கிரமசிங்க அவர்களே. நீதி அமைச்சர் என்ற முறையில் தலைவரவர்களின் பதிலை முஸ்லிம்களாகிய நாங்களும் எதிர்பார்கிறோம். இப்படியான முறைகேடுகளை புரிந்த அதிகாரிகளை நீதியின் முன் நிறுத்த முடியா விட்டால், நீங்கள் ( தலைவர் ) உங்கள் நீதி அமைச்சு பதவியை ராஜினமா செய்வதுதான் ஒரு நல்ல ஜனநாயக வாதிக்கும் அதையும் விட ஒரு நல்ல முஸ்லிமுக்கும் உரிய கடமையும் நட் பண்புமாகும்.
ReplyDelete