Header Ads



முஸ்லிம்களை சீண்டாமல், உடனடியாக பொலிஸ் மா அதிபரிடம் முறையிடுங்கள் - தேசிய ஸூறா சபை


தமிழ் ஈழ விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்கும் நாட்டின் போராட்டத்தில் பெரும்பான்மை சிங்கள மக்களுடன் முழுமையாக நின்று ஒத்துழைத்து முன்னர் ஈழம் தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவளிக்காத காரணத்தினால் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளினாலும் இப்போது ஒரு சிறுபான்மை இனத்தை நோக்கி அளவுகடந்த சகியாமைத் தன்மையைக் காட்டி பொதுபல சேனாவினால் (BBS) தூண்டப்பட்ட வெறுப்புக் குழுக்களினாலும் முஸ்லிம்கள் போதியளவு துன்புத்தை அனுபவித்துள்ளார்கள். அளுத்கமை, பேருவலை, பெலிப்பன்ன மற்றும் சூழ்ந்துள்ள பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட பொது பலசேனாவின் தலைமையிலான வன்முறை முஸ்லிம்களுக்கு பொருளாதார ரீதியாக ரூபா 5 பில்லியனுக்கும் அதிகமான அழிவை ஏற்படுத்திய அதேவேளை, உண்மையில் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு அதைவிட மிக அதிகமாகும். 

ஆயினும், ஜிஹாத் குழுக்கள் இலங்கையில் செயற்படுவதாகவும் அளுத்கமை வன்முறையில் அது சம்பந்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுவது முற்றிலும் பொய்யானதும் அளுத்கமையில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை விடவும் வேதனையளிப்பதாகவும் உள்ளது. ஜூன் 15 மற்றும் 16ஆம் திகதிகளில் அப்பாவி முஸ்லிம்கள் மீது குரோத வெறியூட்டப்பட்ட கும்பலினால் கட்டவிழ்த்து விடப்பட்ட தொடரான குற்றச் செயல்களுக்கு எவ்வித காரணத்தையும் கூறுவதற்கு அல்லது மன்னிப்புக் கோருவதற்கு முடியாதுள்ளவர்களால் இந்தக் கூற்றச்சாட்டுகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

அல்கொய்தா, லஷ்கர்-ஏ-தைபா (LeT), இந்திய முஜாஹிதீன் (IM) போன்றவை இலங்கையில் இயங்குவதாகக் குற்றம் சாட்டுவோர் சற்றும் தாமதியாமல் ஆதரவான சான்றுகளுடன் பொலிஸ் மா அதிபரிடம் அவற்றுக்கு எதிராக முறையிட்டு முழுமையான விசாரணைகளை மேற்கொள்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கையில் உள்ள தேசிய மட்ட முஸ்லிம் நிறுவனங்களின் கூட்டமைப்பான தேசிய ஷூறா (ஆலோசனை) சபை கோரிக்கை விடுக்கின்றது. ஜுன் 15ஆம் திகதி அளுத்கமையில் மேற்கொள்ளப்பட்ட சினமூட்டும் உரையில் இலங்கை பொலிஸ் மற்றும் இலங்கை இராணுவப் படை ஆகியவற்றை ‘சிங்கள பொலிஸ்’ மற்றும் ‘சிங்கள இராணுவப் படை’ என அடையாளப்படுத்தபட்டது. முஸ்லிம்களுக்கு எதிராக புனையப்பட்ட இந்தக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தும் பெரும்பான்மைச் சிங்கள இனத்தைச் சேர்ந்த இந்த ஒரு சிலர் தமது முறைப்பாட்டை தகுந்த சான்றுகளுடன் “சிங்கள பொலிசில்’ முறையிடுவதற்கு என்ன தடை இருக்கிறது? 

கூட்டங்களிலும் பத்திரிகையாளர் மாநாடுகளிலும் பொதுமக்களிடம் பொய்யைக் கூறி சமாதானத்தை நேசிக்கும் நாட்டுப்பற்றுள்ள முஸ்லிம்களை சீண்டாமல், உடனடியாக பொலிஸ் மா அதிபரிடம் முறையிடுமாறு நாம் அவர்களைக் கேட்டுக்கொள்கின்றோம். இந்த புலன் விசாரணைகளில் மட்டுமன்றி சட்டத்தின் பிரகாரம் ‘ஒவ்வொரு சம்பவத்தின் பின்னணியிலும்
​ ​உள்ள சூத்திரதாரிகளுக்கு’ எதிராக, எவரேனும் இருப்பின், நடவடிக்கை மேற்கொள்வதிலும் தேசிய ஷூறா சபை அதன் முழுமையான ஆதரவை வழங்குவதற்கு உறுதியளிக்கின்றது. சிங்கள உயர் தொழில் துறையினர், கல்விமான்கள் மற்றும் பொதுமக்கள் ஆகிய பெரும்பான்மை மக்களிடையே விஷமப் பிரசாரங்களை மேற்கொள்ளாது, பொலிஸ் மா அதிபரிடம் முறையிட்டு அது தொடர்பாக உறுதியான நடவடிக்கையை மேற்கொள்வதே உண்மையில் முஸ்லிம்களுக்குச் செய்யும் பேருதவியாக இருக்கும். 

சில வெளிநாட்டு சக்திகள் ஏனைய நாடுகளில் மேற்கொண்டதைப் போன்று நாட்டைச் சீர்குலைத்து பொம்மை ஆட்சியை நிலைநாட்டும் ஒத்திசைவான நோக்கங்களுடன் இலங்கையினுள் வெளிநாட்டு சக்திகளின் ஊடுருவலை சட்ட முறைமையாக்குவதற்கு குற்றச்சாட்டுகளை மேற்கொள்ளும் பல வெளிநாட்டு புலனாய்வு முகவராண்மைகளால் பெரும்பாலும் காலத்துக்குக் காலம் மேற்கொள்ளப்பட்ட அத்தகைய குற்றச்சாட்டுகளை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்து வந்துள்ளது. முஸ்லிம் பயங்கரவாதக் குழுக்கள் இயங்குவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் இந்த வெளிநாட்டுச் சக்திகளிடமிருந்து பணம் பெறுவோர் பட்டியலில் உள்ளவர்களால் இத்தகைய குற்றச்சாட்டுகள் மேற்கொள்ளப்படுகின்றன.​

​தாரிக் மஹ்மூத்
தலைவர்
தேசிய ஷூறா சபை

No comments

Powered by Blogger.