''ஓருடல் ஈருயிர்'' ஆனந்த திருநாளுக்காக காத்திருக்கும் சகோதரர்கள்
இரட்டைப் பிறவிகள் என்றாலே அவர்களை சிலர் ஆச்சரியமாக பார்ப்பதுண்டு. அதிலும், ஒட்டிப் பிறந்த இரட்டைப் பிறவிகள் என்றால்.. இரட்டை ஆச்சரியம் தான். இப்படி பிறக்கும் பலர் காலப்போக்கில் அறுவை சிகிச்சை மூலம் பிரிக்கப்பட்டு தனித்தனியாக வாழத் தொடங்கி விடுவதுண்டு.
ஆனால், நெருக்கமான நட்புக்கு உதாரணமாக ”ஈருடல் ஓருயிர்” என்று வர்ணிப்பதைப் போல், அரிதாக சில இரட்டைப் பிறவிகள் ”ஓருடல் ஈருயிர்” ஆகவும் வாழ்ந்து வருகின்றனர்.
அப்படிப்பட்ட அபூர்வ இரட்டையர்களில் தற்போது உயிருடன் வாழ்ந்து வரும் இரட்டையர் டோன்னி கெய்லான் மற்றும் ரோன்னி கெய்லான் ஆகியோர் உலகில் வாழும் அதிக வயதான இரட்டையர்கள் ஆக கருதப்படுகின்றனர்.
தற்போது 63-வது வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் இவர்கள், அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் உள்ள டெய்ட்டன் நகரின் எலிசபத் ஆஸ்பத்திரியில் 18-10-1951 அன்று பிறந்தனர்.
வயிற்றுக்கு மேற்பகுதியில் தனித்தனி கிளைகளாக இரு உடல்களாகவும், கீழ் பகுதியில் மரத்தின் அடித் தண்டினை போன்று ஓருடலாகவும் வாழ்ந்து வரும் இவர்களின் அனைத்து தேவைகளையும் கவனித்து வரும் இவர்களது சகோதரர்களில் ஒருவரான ஜிம் கெய்லான் மற்றும் அவரது மனைவி மேரி ஆகியோரின் இடைவிடாத- அன்பான பராமரிப்பாலும் அவர்கள் பொழிந்து வரும் பாச மழையினாலும் ஓஹியோவின் பீவர்க்ரீக் பகுதியில் தற்போது கவலையின்றி வாழ்ந்து வருகின்றனர்.
இத்தாலி நாட்டில் 1877-ம் ஆண்டில் பிறந்து தங்களது 63 வயதில் இறந்த கியாகோமோ பட்டிஸ்ட்டா டோக்கி மற்றும் கியோவன்னி பட்டிஸ்ட்டா டோக்கி ஆகியோர்தான் உலகிலேயே அதிக ஆண்டுகள் வாழ்ந்த ஒட்டிப் பிறந்து, ஒட்டியே வாழ்ந்த இரட்டையர்கள் என்று ‘கின்னஸ்’ நிறுவனம் அங்கீகரித்துள்ளது.
இந்த சாதனையை இன்னும் 3 மாதங்களுக்குள் (அக்டோபர்-18) முறியடிக்கும் அந்த ஆனந்த திருநாளுக்காக காத்திருக்கும் டோன்னி கெய்லான்- ரோன்னி கெய்லான் சகோதரர்கள், இத்தாலிய இரட்டையர்களுக்கு முற்பட்ட தாய்லாந்து நாட்டு இரட்டையரின் முந்தைய சாதனையை முறியடித்து விட்ட சந்தோஷத்தை கொண்டாடும் விதமாக கடந்த இரண்டாம் தேதி தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு விருந்தளித்து மகிழ்ந்தனர்.
Post a Comment