Header Ads



''பள்ளிவாசல்களில் பெளத்த கொடிகளை கட்டியவர்களை பாராட்டும் ஜனாதிபதி மஹிந்த''


நாட்டைத் தீ மூட்டி மக்கள் நன்மதிப்பை ஒருபோதும் பெறமுடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். நாட்டின் தீயை வெளிநாட்டுக்குக் கொண்டுசென்று வெளிநாட்டுத் தீயை நாட்டுக்குள் கொண்டுவந்து நாட்டைத் தீயிலாழ்த்தப் பலர் முயற்சிக்கின்றனர். மூன்று தசாப்தங்களாக ஓடிய இரத்த ஆற்றை நிறுத்தி நாம் பெற்றுக்கொண்ட இந்த சுதந்திரத்தை இல்லாதொழிக்க எவரும் செயற்படுவது தவறு எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். 

அதேவேளை ஏனைய இனங்களை சிறுபான்மை இனமாகப் பார்த்து பெளத்தர்களுக்கு நன்மை கிட்டப்போவதில்லை என்பதே தனது நம்பிக்கை எனவும் ஜனாதிபதி கூறினார். ஸ்ரீலங்கா ராமான்ய நிக்காயவின் 69வது ‘உப சம்பதா’ நிகழ்வு நேற்று மாத்தறை சனத் ஜயசூரிய விளையாட்டரங்கில் நடைபெற்றது. 400 புத்த பிக்குகள் ராமான்ய நிக்காயவுக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட இந்த நிகழ்வில் ஜனாதிபதி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அமைச்சர்கள் டலஸ் அழகப்பெரும, பந்துல குணவர்தன, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, மஹிந்த யாப்பா அபேவர்தன உட்பட மகாநாயக்க தேரர்கள் பலரும் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்.

உலகிற்கு முன்னுதாரணமாக எமது பெறுமதிகளைப் பாதுகாக்க சிலர் முயற்சிக்கின்றபோது மோதல்களை உருவாக்கி இரத்தத்தை சூடேற்றும் வகையில் சிலர் சில சம்பவங்களை ஏற்படுத்துகின்றனர். இன்று நான் மாத்தறைக்கு விஜயம் செய்யும்போது இந்த உபசம்பதா பெளத்த நிகழ்வை கெளரவிக்கும் வகையில் முஸ்லிம் பள்ளிகளில் பெளத்த கொடிகள் உயர்த்தப்பட்டு இங்குள்ளோர் மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதனை நாம் பாராட்டுகின்றோம். 

சகவாழ்வே மதங்களைப் பாதுகாப்பதற்கு சிறந்தவழி என நான் நம்புகிறேன். மதங்களுக்கு மத்தியில் பிரச்சினைகளை உருவாக்கி நாட்டை சீர் குலைக்க சிலர் இக்காலங்களில் பெரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். பெளத்தர்களின் பெயரை அபகீர்த்திக்கு உள்ளாக்கி வருகின்றனர். சிலர் இவற்றை இணையத்தளங்களில் வெளியிட்டு சர்வதேச நாடுகளுக்கு அனுப்பி பெரும் அழிவை ஏற்படுத்தப் பார்க்கின்றனர். இதன்மூலம் எவருக்கும் நன்மை கிட்டப்போவதில்லை.

ஏனைய இனங்களை சிறுபான்மை இனங்களாகப் பார்த்து பெளத்தர்களுக்கு நன்மை கிட்டப்போவதில்லையென்பதே எனது நம்பிக்கை. இதுபோன்று நாட்டை தீமூட்டி மக்கள் நன்மதிப்பை ஒருபோதும் பெறமுடியாது. மக்களின் நன்மதிப்பையும் நம்பிக்கையையும் வெல்வது எவ்வாறு என்பது பற்றி புத்தபெருமான் உபதேசம் செய்துள்ளார். பெளத்த சாசனத்தைப் போன்றே சமூகத்திற்காக உழைக்கின்ற அனைவருக்கும் இந்தப் போதனைகள் மிக முக்கியமானதாகும். 

நாட்டைக் கட்டியெழுப்ப ஒரு தரப்பி னரால் மட்டும் முடியாது. சகல மக்களும் சகல மதத்தவரும் சகல இனத்தவரும் இணைந்து செயற்பட வேண்டும். சிங்க ளவர், தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர் என அனைத்து மக்களும் ஒன்றிணை வதும் அனைத்து இன மத மக்களினதும் நன் மதிப்பைப் பெறுவது முக்கியமாகும். இன்று மாத்தறையில் நாம் நடத்தும் இந்த மாபெரும் உபசம்பதா நிகழ்வை நாக தீபயிலும் நாம் நடத்த முடியும். அந்த சுதந்திரம் எமக்கு உள்ளது. அதற்கான மத சுதந்திரத்தை நாம் நாட்டில் ஏற்படுத்தி யுள்ளோம். மூன்று தசாப்தங்களாக ஓடிய இரத்த ஆற்றை நிறுத்தி பெற்றுக் கொண்ட இந்த சுதந்திரத்தை இல்லா தொழிக்க எவரும் செயற்படுவது தவறு. 

பரம்பரை பரம்பரையாகப் பாதுகாக்கப் பட்டுவந்த தர்மத்தை பாதுகாப்பது எம் அனைவரது பொறுப்பாகும். எமக்கு நல்ல உதாரணங்கள் உள்ளன. இவற்றை அடியொற்றி நாட்டுக்கும் மக்களுக்கும் சிறந்த தலைமைத்துவத்தை வழங்க மதத் தலைவர்கள் முன்வரவேண்டு மெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். 

1 comment:

  1. பிள்ளையும் கில்லி தொடிலும் ஆட்டும் மா பெரும் நடிகர்.

    ReplyDelete

Powered by Blogger.