அளுத்தகம வன்முறை பற்றிய விசாரணையில், நீதியை எதிர்பார்க்கிறாராம் நீதியமைச்சர்
அளுத்கம, பேருவளை, தர்ஹா நகர் பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பான அனைத்து தடயங்களும் தரவுகளும் சேகரிக்கப்பட்டுவிட்டன. குண்டர் குழுக்களினாலேயே வீடுகள், வர்த்தக நிலையங்கள், ஏனைய இடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன என்பது தெளிவாகியுள்ளது. இவ்வாறு நீதியமைச்சர் ரவூக் ஹக்கீம் நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.
நாடாளுமன்றில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க விடேச அறிக்கை ஒன்றை விடுத்து எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியவை வருமாறு:-
அளுத்கம சம்பவத்தின் போது வெலிபிடியவில் கொல்லப்பட்ட இருவரில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டினாலேயே உயிரிழந்துள்ளார் என்றும், மற்றையவரின் மரணத்துக்கான காரணம் இன்னும் உறுதியாகவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அளுத்கம வன்முறை கடந்த 15ம் திகதி ஆரம்பமானது. மறுநாள் காலை முதல் ஆளாக அங்கு சென்ற என்னிடம் மக்கள் கருத்துகளை முன் வைத்தனர்.
வெலிபிடியவில் உயிரிழந்த இருவரும் துப்பாக்கிச்சூடு காரணமாகவே உயிரிழந்தனர் என்று அவர்கள் என்னிடம் தெரிவித்தனர். இதற்கான சான்றுகளும் இருந்தன.
இது தொடர்பில் களுத்துறை குற்றப்புலனாய்வுப் பிரிவினர், கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டனர். துப்பாக்கி ரவைகளும் மீட்கப்பட்டன. வன்முறையில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளனர் என்ற முடிவுக்கு வந்தனர்.
பாரிய வெட்டுக்காயங்கள் காரணமாகவே இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் என மரண விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.
இருவரில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. மற்றையவரின் உயிரிழப்புக்கான காரணம் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.
எனவே, கொல்லப்பட்டவர்களின் சடலங்களை மீண்டும் தோண்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதேவேளை, அளுத்கம, பேருவளை, தர்ஹாநகர் பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பான அனைத்து தடயங்களும் தரவுகளும் சேகரிக்கப்பட்டுவிட்டன. அதன் பின்னரே அங்கு துப்பரவு, புனரமைப்பு பணிகள் இடம்பெறுகின்றன.
தீ விபத்து தொடர்பில் சந்தேகம் இருந்தால் மாத்திரமே அரச இரசாயன பகுப்பாய்வாளர்கள் அழைக்கப்படுவார்கள். குறிப்பாக பாணந்துறையில் ஆடைவிற்பனை நிலையம் தீக்கிரையான சம்பவம் குறித்து சந்தேகம் இருந்ததால் அங்கு இரசாயன பகுப்பாய்வாளர்கள் அழைக்கப்பட்டனர்.
எனினும், அளுத்கம, பேருவளை, தர்ஹா நகர் சம்பவங்கள் தொடர்பில் இவர்களை அழைக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை. குண்டர் குழுக்களினாலேயே வீடுகள், வர்த்தக நிலையங்கள், ஏனைய இடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன என்பது தெளிவாகியுள்ளது.
அத்துடன், அளுத்கம சம்பவம் தொடர்பில் இடம் பெற்றுவரும் விசாரணைகள் உண்மைநிலையை வெளிக்கொண்டுவரும். அதன் மூலம் நீதி கிடைக்கும் எனறு நம்புகின்றோம் என்றார் அமைச்சர் ஹக்கீம்.
'வேப்பமரம் நோயிலே... வைத்தியரும் பாயிலே..' என்பது இதைத்தானோ..?
ReplyDelete